புதன், 8 டிசம்பர், 2010

dangerous journey : warning to the parents

அரசு நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ  பெற்றோர்கள் உடனடியாகத் தங்கள் பிள்ளைகளை வெவ்வேறு ஊர்திகளில் அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். கட்டணக்  குறைவு என எண்ணித் தங்கள் பிள்ளைகளுக்கு ஊறும் நேரும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. இது  பிற பள்ளிகளில் பயின்று இவ்வாறு திணித்து அனுப்பப்படும் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கும் பொருந்தும். 
அன்புடன் இலக்குவனார்  திருவள்ளுவன்
அதிக சுமை அசுர வேகம் ஆபத்தான பயணம்!

திருவள்ளூர், டிச.  7: திருவள்ளூரைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் செல்லும் ஷேர் ஆட்டோக்கள் அதிக ஆள்களை ஏற்றிக் கொண்டு அசுர வேகத்தில் பறப்பதால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.திருவள்ளூரில் இருந்து புல்லரம்பாக்கம், பாண்டூர், கடம்பத்தூர், வேப்பம்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. மேற்கண்ட ஆட்டோக்களில் அரசு விதிகளின்படி டிரைவருடன் சேர்த்து 4 பேர் மட்டுமே செல்லலாம். ஆனால் திருவள்ளூரில் இருந்து இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களில் பின்புறம் 4 பேர், உள்புறத்தில் மேலும், கீழுமாக 8 பேர் டிரைவரின் இரு புறங்களிலும் இரண்டு பேர் உள்பட 14 பேர் ஏற்றப்படுகின்றனர்.விதிகளை மீறி அதிக ஆள்களை ஏற்றிக் கொண்டு செல்லும் ஷேர் ஆட்டோக்கள் நேரத்தை மிச்சப்படுத்தி அதன் மூலம் மேலும் இரண்டு முறை சென்று வரலாம் என்ற எண்ணத்தில் அசுர வேகத்தில் பறக்கின்றன. கடந்த சில நாள்களாக பெய்த மழையால் சாலைகளில் பல இடங்களில் பள்ளங்கள் உள்ளன. இந்நிலையில் வேகமாகச் செல்லும் ஆட்டோக்கள் கவிழ்ந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.திருவள்ளூரின் மையப் பகுதியான காமராஜர் சிலை அருகில் இருந்து, டோல்கேட் செல்லும் வழியில் போக்குவரத்து போலீஸôர் அலுவலகம், தாலுகா போலீஸ் நிலையம், மகளிர் போலீஸ் நிலையம், டிஎஸ்பி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட எஸ்பி அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் உள்ளன. அப்பகுதியில் அசுர வேகத்தில் ஆட்டோக்கள் பறக்கும் காட்சியை அதிகாரிகள் நேராக பார்த்தாலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, ஷேர் ஆட்டோக்களில் பயணிக்கும் பயணிகளின் நலன் கருதி  மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து ஷேர் ஆட்டோக்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும், ஆள்களை ஏற்றுவதை முறைப்படுத்தவும் வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக