ஒரு வழியாக மாவிலாற்றில் 2006-ல் தொடங்கிய நான்காவது ஈழப் போர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணச் செய்தியுடன் முடிவடைந்திருக்கிறது. இலங்கை அரசுத் தரப்பினர், ""மூன்று தசாம்ச கால பிரச்னை முடிவுக்கு வந்திருக்கிறது; விடுதலைப் புலிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டனர்'' என்று இச்சூழலை வர்ணித்துவரும் நிலையில், ஈழப் போரைத் தொடர்ந்து கூர்ந்து அவதானித்துவருபவர்களோ பல்வேறு யூகங்களை எழுப்புகின்றனர்.
மரணம் எழுப்பும் கேள்விகள்: இலங்கை அரசு பிரபாகரனின் சடலம் என்று சுட்டிக்காட்டும் சடலத்தை முன்வைத்தே பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஆழமற்ற களப்புப் பகுதியிலிருந்து பிரபாகரன் எங்கே தப்பிச் செல்ல முயன்றார்? கடல் பரப்பு முழுவதையும் ராணுவம் கைப்பற்றிவிட்ட நிலையில், நீரிழிவு நோயாளியான அவர் நீண்ட தூர கடல் பயணம் மேற்கொள்ளக்கூடிய வகையில் வசதியான நவீன படகு அல்லது கப்பலுக்கு அங்கு ஏது வழி? தப்பிச் செல்ல நினைக்கும் ஒருவர் முக அமைப்பை மாற்றிக்கொள்ளாமலோ, மாறுவேஷத்திலோ இல்லாமல் சீருடையில் அடையாள அட்டையுடனா செல்வார்? அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்படும் வகையில் தலைப் பகுதி சரியாக சிதைக்கப்பட்டிருப்பது எப்படி?...
இப்படி ஏராளமான கேள்விகள் முன்வைக்கப்படுவதோடு முக்கியமான ஒரு விஷயமும் சுட்டிக்காட்டப்படுகிறது. அது: பிரபாகரன் போன்ற உருவத் தோற்றமுடையவரைப் பற்றிய செய்திகள்.
நீண்ட காலமாகவே பிரபாகரனைப் போன்றே உருவத் தோற்றமுடையவரை புலிகள் வெளியுலகுக்குப் பயன்படுத்தி வருவதாகவும் உண்மையில், பிரபாகரன் இருக்குமிடம் அவருடைய நெருங்கிய சில கூட்டாளிகளைத் தவிர்த்து வேறு எவருக்கும் தெரியாது என்றும் கூறப்பட்டுவருகிறது.
இதை புலிகளுக்கு மிக நெருக்கமானவர்களும் அந்த இயக்கத்திலிருந்தே விலகியவர்களும்கூட சொல்வதுண்டு. ஊடகங்களிலும் அவ்வப்போது இது தொடர்பான செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இந்நிலையில், பிரபாகரன் மரணச் செய்தியைத் திட்டமிட்டு புலிகள் கட்டமைத்திருக்கிறார்கள் என்று நம்புவதற்கு ஏராளமான தரவுகள் கிடைத்திருக்கின்றன.
பதுங்குக் குழி ஆதாரங்கள்: பிரபாகரன் தங்கியிருந்ததாக ராணுவம் நம்பும் எல்லா பதுங்குக் குழிகளிலுமே பிரபாகரன் அங்கிருந்ததற்கான ஆதாரமாக ஏதேனும் சில பொருட்களை விட்டுச் செல்லும் தந்திரத்தை புலிகள் கையாண்டனர்.
சில பதுங்குக் குழிகளில் அவர் அணியக் கூடிய அளவுடைய சட்டை, தொப்பி; சில இடங்களில் "இன்சுலின்' ஊசிகள் (பிரபாகரன் நீரிழிவு நோயாளி), சில இடங்களில் அவர் படுத்திருந்தது என்று நம்பத் தக்க வகையில் படுக்கை, அவருடைய குடும்ப புகைப்படங்கள், சான்றிதழ்கள் இப்படி...
இதற்கு முன்னர், மரபணுச் சோதனை நடத்துவதற்கு பிரபாகரன் தொடர்பான குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் இலங்கை ராணுவத்திடம் ஏதும் இல்லாத நிலையில், இந்த ஆதாரங்களைத் திட்டமிட்டே புலிகள் விட்டுச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அதாவது, பிரபாகரன் உருவமைப்பைக் கொண்ட ஒரு நபர் பயன்படுத்திய பொருட்களை விட்டுச் சென்று, பிற்பாடு பிரபாகரனுக்குப் பதில் அவருடைய சிதைந்த சடலத்தை பிரபாகரன் என்று நம்ப வைப்பதற்கான ஓர் உத்தி.
பதுங்கும் இடத்தை யார் கூறுவார்?: பொதுவாக விடுதலைப் புலிகளின் இரண்டாம் நிலை தலைவர்கள் இருக்குமிடங்களே பரம ரகசியமாக இருக்கும். ஆனால், ஒரு சதுர கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் சுற்றி வளைக்கப்படும் வரை பிரபாகரன் இங்குதான் இருக்கிறார் என்பதைத் திரும்பத் திரும்ப புலிகள் கூறிக்கொண்டிருந்தனர். இது பெரிய அளவிலான சந்தேகங்களை எழுப்புகிறது.
அந்த அமைப்பின் அரசியல் தொடர்பாளர் நடேசன் உள்ளிட்ட ஊடகத் தொடர்பாளர்கள் மட்டுமின்றி, அரசுப் படையினரிடம் சரணடைந்த புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்களும்கூட இதையே திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.
போரின் கடைசி இலக்கே பிரபாகரன்தான் என்ற சூழலில், பிரபாகரனைப் பாதுகாப்பதற்காகவே ஒரு சிறப்புப் படையையே நிறுவும் அளவுக்கு அவருடைய உயிரில் அக்கறையுடைய புலிகள், அவர் இருக்குமிடத்தை எப்படி அலட்சியமாகப் பறைச்சாற்றுவார்கள்?
ஆகையால், ராணுவத்தை திசைத் திருப்புவதற்காகவே புலிகள் திட்டமிட்டுச் செயல்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தங்கள் தந்திரத்துக்கு உறுதி சேர்க்கும் வகையிலேயே நடேசன் உள்ளிட்ட இரண்டாம் நிலைத் தலைவர்களை போர்க்களத்திலேயே இருக்குமாறு செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
மரணச் செய்தி - இரு தரப்புகளின் நிர்ப்பந்த சூழல்: இந்தப் போரின் வெவ்வேறு காலகட்டங்களிலும் இலக்குகளை மாற்றி மாற்றி அறிவித்தாலும், உண்மையில் இலங்கை அரசின் இறுதி இலக்கு பிரபாகரன்தான். போர்க் காலகட்டத்தின் இடையே நடைபெற்ற தேர்தல்களிலும் இதைப் பிரதான முழக்கமாக முன்வைத்தே இலங்கை அதிபர் ராஜபக்ஷ வெற்றிகளைக் குவித்தார்.
எனவே, வெறும் நிலப்பரப்பைக் கைப்பற்றியதோடு போரை முடித்துக்கொண்டதாக அறிவித்தால், அரசியல் ரீதியாக அவருக்குப் பெரும் பின்னடைவு ஏற்படுவதோடு விடுதலைப் புலிகள் இயக்கத்தை வேறறுத்துவிட்டதாக முன்னெடுக்கப்படும் பிரசாரமும் முழு வெற்றி பெறாது.
ஆகையால், இலங்கை அரசுக்கும் ராணுவத்துக்கும் பிரபாகரன் மரணத்தின் மீது வலுவான சந்தேகங்கள் இருந்தாலும், தற்போதைய சூழலில் அப்படியொரு அறிவிப்பை வெளியிட வேண்டிய நிலையிலேயே அரசுத் தரப்பு இருக்கிறது.
இது ஒருபுறமிருக்க, விடுதலைப் புலிகளும் இப்படியொரு நிர்ப்பந்தத்திலேயே இருக்கின்றனர். முக்கியமான காரணம், போர்ச் சூழலிலிருந்து விடுபடுவதாகும். முன்னதாக, அமெரிக்காவில் புதிய அரசு பொறுப்பேற்றதுமே அமெரிக்க அணுகுமுறையில் மாற்றங்களை அவர்கள் எதிர்பார்த்தனர். அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்தனர். இங்கு எதிர்பார்த்த மாற்றம் ஏற்படாவிடில் மேற்கொள்ள வேண்டிய காரியங்களை முன்கூட்டியே திட்டமிட்டிருந்தனர். போர்ச் சூழலில் புதிய வாய்ப்புகள் ஏதுமற்ற நிலையில், சில காலத்துக்கு பதுங்கியிருப்பதே நல்லது என்று அவர்கள் கருதினர். இந்நிலையில், பிரபாகரனின் மரணச் செய்தி ராணுவ நடவடிக்கைகளிலிருந்து தப்ப உதவுவதோடு, உலகின் கவனத்தையும் தமிழ் மக்களின் அவலத்தை நோக்கித் திருப்ப முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
முடிவுகளைத் தீர்மானித்த ஆனந்தபுரம்: இந்தப் போரின் தொடக்கத்திலிருந்தே ராணுவம் உள்ளே புக அனுமதிப்பதை புலிகள் ஒரு தந்திரமாகப் பயன்படுத்தினர். சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்தில் இதேபோன்ற உத்தியைத்தான் அவர்கள் பின்பற்றினர். இலங்கை ராணுவம் முழுவதையும் உள்ளேவிட்டு, திடீரென ஊடறுப்புத் தாக்குதல் மூலம் ஏறத்தாழ 40,000 வீரர்களை அவர்கள் சுற்றி வளைத்தனர்.
அப்போது சர்வதேச நாடுகளும் இந்தியாவில் ஆட்சியிலிருந்த பாஜக தலைமையிலான அரசு இப்பிரச்னையில் தலையிட்டதன்பேரில், இலங்கை வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இம்முறையும் இதே போன்ற ஒரு பாரிய தாக்குதலுக்கு புலிகள் திட்டமிட்டிருந்தனர். அதற்காக அவர்கள் ஒன்றுகூடிய இடம் ஆனந்தபுரம். ஒரு சிறிய பிரதேசத்தில் புலிகள் அமைப்பின் முக்கியமான களத் தளபதிகள் பலர் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் பெரும் தளவாடங்களுடன் குவிந்திருந்த இந்தச் செய்தியை "ரா' அமைப்பின் மூலம் இலங்கை ராணுவம் அறிந்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து ராணுவம் முன்னெடுத்த பாரிய தாக்குதலில் புலிகள் சுற்றி வளைக்கப்பட்டனர். ஏப்ரல் முதல் வாரத்தில் நடந்த இத்தாக்குதலில் ராணுவத் தரப்பில் சுமார் 15,000 வீரர்கள் வரை ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடும் போரின் இறுதியில் முக்கிய கள தளபதிகள் உள்பட ஏறத்தாழ அங்கு கூடியிருந்த அனைத்துப் புலிகளும் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலுக்குப் பின்னரே, புலிகளின் மாபெரும் வீழ்ச்சி தொடங்கியது எனலாம். கிளிநொச்சி கைவிட்டுப்போன பின்னர், ஏறத்தாழ மூன்று மாதங்கள் வரை புதுக்குடியிருப்பில் கடுமையாகப் போராடிய புலிகள் இத்தாக்குதலுக்குப் பின்னரே முற்றிலுமாக ஒடுங்கிப் போயினர்.
கிழக்குக்குத் தப்பினார் பிரபாகரன்?: ஆனந்தபுரம் வியூகம் தோல்வியடைந்த பின்னர், முடிவை புலிகள் ஓரளவுக்கு யூகிக்கத் தொடங்கிவிட்டனர். இதனால், கடல் வழியாக பிரபாகரன் தப்பிக்கத் தயாராக இருப்பதாக புலிகளே தகவல்களைக் கசியவிட்டனர். ராணுவத்தின் ஒட்டுமொத்த கவனமும் கடல் பரப்பின் மீது குவிந்திருந்த நிலையில், ஏப்ரல் மத்தியில் கிழக்குப் பகுதிக்கு பிரபாகரன் தப்பிவிட்டதாகக் கூறப்பட்டது.
இலங்கையின் கிழக்குப் பகுதி விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டுவிட்டாலும், இன்னமும் அங்கு அவ்வப்போது கொரில்ல தாக்குதல்களை நடத்திக்கொண்டுதான் இருக்கின்றனர் புலிகள். குறிப்பாக யாலா காட்டுப் பகுதியில் ஏராளமான புலிகள் பதுங்கி இருக்கின்றனர்.
ஆகையால், ஏப்ரல் மத்தியில் கிழக்குப் பகுதிக்கு பிரபாகரன் தப்பியிருக்கலாம் என்று இலங்கை புலனாய்வுத் துறையே வலுவாகச் சந்தேகிக்கிறது. இன்னொருபுறம் சில மாதங்களுக்கு முன்னரே அவர் வெளிநாடுகளுக்குத் தப்பியிருக்கலாம் என்றும் சந்தேகமும் அவர்களிடம் இருக்கிறது.
உலகம் முழுவதும் தொடர்புகள்: மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது ஒட்டுமொத்த புலிகள் அமைப்பும் ஏதோ முல்லைத்தீவுக்குள்ளேயே முடக்கப்பட்டுவிட்டது போன்றும் பிரபாகரனுடன் அந்த அமைப்பே அழிந்துவிட்டதுபோல தோன்றினாலும் உண்மை அதுவல்ல. உலகம் முழுவதும் புலிகள் அமைப்பு பரந்து விரிந்திருக்கிறது. இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சில ஆப்பிரிக்க நாடுகள் என்று உலகம் முழுவதும் இன்றளவும் மறைமுகமாகச் செயல்படும் ஏராளமானோர் அந்த அமைப்பில் இருக்கின்றனர். வலுவான பொருளாதாரப் பின்னணியும் ஆதரவளிக்க ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தமிழர்களும் இருக்கின்றனர்.
இது தவிர, பிரபாகரன் குடும்பத்தினர் தொடர்பான சந்தேகங்களும் எழுகின்றன. குறிப்பாக, வெளிநாட்டில் அவருக்கு இன்னொரு மகன் இருப்பதாக நீண்ட காலமாகக் கூறப்பட்டுவந்தாலும் அவர் எங்கு இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. அதேபோல, அவருடைய மனைவி, மகள் ஆகியோருடைய தற்போதைய நிலையும் தெரியவில்லை.
இந்நிலையில், பிரபாகரன் மரணச் செய்தியை அவரைப் பின்தொடரும் நிழல்களே உறுதிப்படுத்த வேண்டும்; அல்லது காலமும் வரலாறும் உறுதிப்படுத்தலாம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
5/20/2009 8:18:00 PM
5/20/2009 7:50:00 PM
5/20/2009 7:38:00 PM
5/20/2009 7:21:00 PM
5/20/2009 7:17:00 PM
5/20/2009 7:14:00 PM
5/20/2009 7:03:00 PM
5/20/2009 6:59:00 PM
5/20/2009 6:45:00 PM
5/20/2009 6:43:00 PM
5/20/2009 6:41:00 PM
5/20/2009 6:37:00 PM
5/20/2009 6:32:00 PM
5/20/2009 6:26:00 PM
5/20/2009 6:23:00 PM
5/20/2009 6:07:00 PM
5/20/2009 6:06:00 PM
5/20/2009 6:03:00 PM
5/20/2009 6:01:00 PM
5/20/2009 6:01:00 PM
5/20/2009 6:00:00 PM