அவன்தான் தலைவன்!
First Published : 18 May 2009 11:08:00 PM IST
தினமணி
நாடாளுமன்ற ஜனநாயகம் அரசியல் கட்சிகள் இல்லாமல் நடைபெற முடியாது. ""ஒத்த கருத்துடைய பலர் ஒன்று சேர்ந்து, நாட்டு நலனில் அக்கறையுடன் சில கொள்கைகளின் அடிப்படையில், தேர்தலில் நின்று, ஆட்சியைப் பிடித்து, கொள்கையை நிறைவேற்றி, நாடும், மக்களும் முன்னேற வழி வகுப்பது'' என்பதுதான் அரசியல் கட்சிகளுக்கு அரசியல் மேதைகள் கூறிய விளக்கம். ஆனால் இன்றைய இந்திய அரசியலில் கட்சிகள் என்றால் தலைவர்கள் தான் என்றாகிவிட்டது. சோனியா, கருணாநிதி, ஜெயலலிதா, லாலு பிரசாத், பாஸ்வான், மாயாவதி, முலயாம்சிங், சரத்பவார் ஆகியோர் தொடங்கி, சிறிய அரசியல் கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள் முதல் திரிணாமூல் காங்கிரஸ் வரை திருமாவளவன், மம்தா பானர்ஜி ஆகியோரின் தனிக்கட்டுப்பாட்டில் சம்பந்தப்பட்ட கட்சிகள் அரசியல் நடத்துகின்றன. மருத்துவர் ராமதாஸ் தனிப்பட்ட முறையில் எந்த முடிவு எடுத்தாலும் அதுதான் பா.ம.க.வின் கொள்கையும் அரசியல் நிலைப்பாடும் ஆகிவிடுகிறது. எனவே நாம் கட்சி அரசியலைப் புரிந்துகொள்ள தலைவர்கள் எனும் தனிநபர் பற்றி அலசி ஆராய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அரசியல் கட்சி என்பது ஒரு நிறுவனம் போன்றதே. ஒரு நிறுவனத்தில் நிர்வாக இயக்குநர், பொது மேலாளர் மற்றும் ஊழியர்கள்போல ஒரு கட்சியில் தலைவர், செயலாளர்கள், தொண்டர்கள் எனப் பலர் உண்டு. எம்.பி.ஏ. பட்டப்படிப்பில் நிறுவனங்கள் எனும் பாடம் மிக விரிவாகச் சொல்லிக் கொடுக்கப்படும். ஒரு நிறுவனத்தில் "சிஸ்டம்' எனும் கட்டமைப்பு, மிகவும் சிரத்தையுடன் அமைக்கப்பட்டு செயல்பட்டால் அதில் தலைவராகவோ, ஊழியராகவோ யார் வந்து அமர்ந்தாலும் வேலை பாதிக்கப்படாமல் சீரிய முறையில் நிர்வாகம் நடைபெற வேண்டும் என்பதுதான் நிறுவனங்கள் எனும் பாடத்தின் மையக்கருத்து. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் ஐசிஎஸ் எனப்படும் நிர்வாக இயந்திரம் உலகெங்கிலும் இரும்புச் சட்டம் எனப் பாராட்டப்பட்டது. யார் அதிகாரியாக இருந்தாலும், வேலை திறமையாக, நேர்மையாக நடைபெறும் வகையில் நிர்வாகக் கட்டமைப்பு அமைந்திருக்கும். இதுபோலவே நமது நாட்டில் ஆரம்பத்தில் கட்சிகளும் இருந்து வந்தன. ஆனால் காலம் செல்லச் செல்லத் தலைவர்களாக இருந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு கட்சிகள் அவர்களின் கைப்பாவையாக மாறி விட்டன. மேலை நாடுகளில் தலைவர்கள் பற்றி மிகப்பெரிய அளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு பல கருத்துகள் உருவாகியுள்ளன. "லீடர்' என பொதுவாக அழைக்கப்படும் தலைவர் பதவி என்பது ஒரு நிறுவனம், அரசியல் கட்சிகள், ஏன் மதங்கள் வரை உருவாக்கப்பட்டு அதன் நிர்வாகத்திற்குத் தலைமை ஏற்பது. மற்றவர்கள் மதித்துப் பின்பற்றிச் செல்லும் குணங்கள் ஒரு தலைவரிடம் அமைந்திருக்க வேண்டும் என்பதும் தலைவர்கள் சிறந்த புத்திசாலிகளாக இருப்பார்கள் எனவும் கருதப்பட்டது. ""இன்டலிஜென்ஸ்'' எனும் புத்திசாலித்தனம் என்றால் என்ன? என்பது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் கடுமையாக விவாதிக்கப்படும் ஒரு பொருள். ஒரு வேலைக்கு ஆள் எடுக்கும்போது பத்து பேர் மனுச் செய்தால், அவர்களில் எல்லோரும் பட்டப்படிப்பில் ஏறக்குறைய ஒரே அளவு மதிப்பெண் எடுத்திருந்தால் அவர்களுள் யார் மிகச்சிறந்த புத்திசாலியோ அவரைத் தேர்வு செய்வது நல்லது. அதற்கு "ஐக்யூ டெஸ்ட்' எனும் ஒரு தேர்வு வைத்து அதில் நிறைய மதிப்பெண் பெற்றவர் மிகச்சிறந்த புத்திசாலி எனக் கருதித் தேர்ந்தெடுக்கும் வழக்கம் உண்டு. ஆனால் சமீபகாலங்களில் இதுபோன்ற ஐக்யூ தேர்வில் தேறுகிறவர்கள் எல்லோருமே தாங்கள் செய்யும் வேலையில் மிகவும் திறமையுடன் செயல்படுவதில்லை. அதாவது புத்திசாலித்தனம் என்பது வேறு; வேலையைத் திறமையாகச் செய்வது என்பது வேறு. இதுபோன்ற ஓர் அம்சத்தை அரசியல் கட்சித் தலைவர்களின் திறமைக்கான அளவுகோலாகக் கொண்டு பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜோசப் நயீ என்பவர் மிகவும் சிறந்த முறையில் இதுபற்றி ஆராய்ச்சிகள் பல செய்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இதுபோன்ற ஆராய்ச்சிகள் 1930-களில்தான் ஆரம்பித்தன. அச்சமயம் அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ் என்பவர் அன்றைய உலகப் பிரசித்தி பெற்ற அமெரிக்க அதிபர் ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட்டை சந்தித்த பின், ""இவர் இரண்டாம் தர புத்திசாலித்தனமும், முதல்தர உணர்ச்சிகளும் கொண்டவர்'' எனக் கூறினார். இது மிகப்பெரிய விவாதப்பொருளானது. காரணம் ரூஸ்வெல்ட்டை அகில உலகமும் முதல்தர புத்திசாலி என நினைத்தது. மேலும் உணர்ச்சிகளுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் தொடர்பில்லை எனப் பலரும் நினைத்தனர். அதாவது உணர்ச்சி மேலிட்டால் புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் தடைப்படும் எனக் கருதப்பட்டது. பின் வருங்காலங்களில் உணர்ச்சி கலந்த புத்திசாலித்தனம் எனும் குணம் விளக்கப்பட்டு அதுதான் தலைவர்களின் வெற்றிக்குக் காரணம் என வரையறுக்கப்பட்டது. அது என்ன? தனது உணர்ச்சிகளை நன்றாகப் புரிந்துகொண்டு தன்னைச் சுற்றியுள்ளவர்களின் உணர்ச்சிகள், குணாதிசயங்களைக் கட்டுப்படுத்தி வழிநடத்தும் திறமையே உணர்ச்சி கலந்த புத்திசாலித்தனம் என வரையறுக்கப்பட்டது. இது அதிகமாக உள்ள தலைவர்கள் மக்கள் மன்றத்தில் நல்ல செல்வாக்கைப் பெறுவார்கள் எனவும் அவர்கள் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றாகவும் இருக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அமெரிக்க அதிபர் நிக்சன் மிகச்சிறந்த புத்திசாலித்தனம் உடையவராக இருந்தும், உணர்ச்சி கலந்த புத்திசாலித்தனம் குறைவாக இருந்ததால் அதிபர் வேலையில் படுதோல்வி அடைந்தார். ஆனால் ரொனால்ட் ரீகன் ஏற்கெனவே நடிகராக இருந்தவர், நிறைய உணர்ச்சி கலந்த புத்திசாலித்தனம் கொண்டவர் என்பதால் மிகச்சிறந்த அதிபராகப் பெயரெடுத்தார். தமிழ்நாட்டின் முதல்வர்களுள் விஷயங்களைப் படித்துத் தெரிந்து கொண்டு, கடுமையாக உழைக்கும் முதல்வர் கருணாநிதியைவிட உணர்ச்சிகலந்த புத்திசாலித்தனம் அதிகமாக இருந்த எம்.ஜி.ஆர். வெற்றிகரமாக முதல்வர் பதவியை வகித்து கடைசி வரை தேர்தலில் வெற்றி பெற்றது சரியான உதாரணம். எம்.ஜி.ஆர். தனது உணர்ச்சிகள், குணாதிசயங்கள், மக்களின் மனநிலை, விருப்பு, வெறுப்புகள் மற்றும் தன்னைச் சுற்றியிருந்த கட்சியினர் பற்றியும் மிகத் தெளிவான கருத்துகளைக் கொண்டிருந்தார் என்பது மிக முக்கியமான ஓர் அம்சம். அதிமுக ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அன்றைய ஆளுங்கட்சி திமுக, எம்.ஜி.ஆரைக் கடுமையாகத் தாக்கிப் பல அறிக்கைகளை வெளியிடும். மதுரை முத்து ஒருமுறை சட்டமன்ற வளாகத்தில் கடுமையான வார்த்தைகளால் எம்.ஜி.ஆரைச் சாடினார். ஆனால் திண்டுக்கல் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பின் நிறையத் தலைவர்கள் கட்சி மாறினார்கள். அவர்களில் மதுரை முத்துவும் ஒருவர். எம்.ஜி.ஆரைச் சந்திப்பது மிகவும் கடினம். கட்சி வேலைகளுக்காக பலர் தலைமைக் கழக அலுவலகத்தில் காத்துக்கிடப்பதும், ராமாவரம் தோட்டத்தில் காத்துகிடப்பதும் சர்வசாதாரணம். பலர் காத்திருக்கும்போது திடீரென வந்து காரில் ஏறி சர்ரென சென்று விடுவார். எம்.ஜி.ஆர். ஒருமுறை மதுரை முத்துவுடன் பல தலைவர்களும் சேர்ந்து கொண்டு ராமாவரம் தோட்ட வாயிலில் எம்.ஜி.ஆரின் காரை மறிக்க, கார் கதவுக் கண்ணாடியை இறக்கிய எம்.ஜி.ஆரிடம் ""ஐயா, எங்களால் உங்களைச் சந்தித்து கட்சி விவரங்கள் குறித்துப் பேச முடியவில்லை. பல நாள்கள் காத்திருந்தும் உங்களைச் சந்திக்காமல் திரும்பி விடுகிறோம், மற்ற மாவட்டத் தலைவர்களும் இதையே சொல்கிறார்கள்'' எனக் கூறியுள்ளார். காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர். காத்திருந்த எல்லோரையும் தோட்டத்துக்குள் அழைத்து அமர வைத்துச் சொன்னாராம். ""நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள். அதிமுகவைப் பொருத்தவரை எனக்கும் மக்களுக்கும் நேரடித் தொடர்பு உண்டு. உங்களுக்குத் தனியாகக் கட்சி வேலை என்று ஒன்று கிடையாது. நான் தேர்ந்தெடுக்கும் நபர் எனது சார்பாக பல வேலைகளைச் செய்வதே கட்சி வேலை, எம்.எல்.ஏ., எம்.பி. ஆகியவை. இதை விரும்பாதவர்கள் திரும்பவும் திமுகவிற்கே சென்று விடலாம். அங்கு கருணாநிதியை எப்போது வேண்டுமானாலும் சந்தித்துக் கொண்டே இருக்கலாம்'' எனக் கூறினாராம். உணர்ச்சி கலந்த புத்திசாலித்தனம் அதிகம் இருந்த காரணத்தால் மக்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு தலைவர்கள் பலர் வெற்றி நடைபோட முடிகிறது. ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியைப் படித்துப் புரிந்து கொள்ளாமலேயே தாங்களாகவே நம் நாட்டில் இதன் அடிப்படையில் தலைவர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வெற்றி நடைபோடுகிறார்கள். அண்ணாதுரை இறந்தவுடன் அடுத்த முதல்வர் யார் எனும் கேள்வி எழுந்தது. நெடுஞ்செழியனிடம் நிருபர்கள் இதுபற்றிக் கேட்டபோது, ""அண்ணாவே என்னைத்தான் தேர்ந்தெடுத்தார், அதனால்தான் அமைச்சரவையில் இரண்டாவதாக என்னை வைத்தார்'' எனக் கூறினார். ஆனால் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தனர். உணர்ச்சி கலந்த புத்திசாலித்தனத்தால் நீண்டகாலம் கட்சியினரின் உணர்ச்சிகளோடு கலந்து உறவாடித் தலைமையைப் பிடித்தார் கருணாநிதி. இது வெகுவாகப் பரவி அதிகாரிகள் மத்தியில்கூட புத்திசாலித்தனத்தைவிட உணர்ச்சி மேலோங்குபவர்கள் முதல்வர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நிறைய புத்திசாலி அதிகாரிகள் ஓரங்கட்டப்பட்டு இரண்டாம் தரப் புத்திசாலித்தனமும் முதல் தர உணர்ச்சி கலந்த திறமையைப் பெற்று, அரசியல் தலைவர்களின் உணர்ச்சி, எண்ண ஓட்டங்கள் ஆகியவற்றைப் புரிந்து அவர்கள் என்ன கேட்க விரும்புகிறார்களோ அதையே யோசனையாகக் கூறித் தங்கள் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளும் அதிகாரிகள் முக்கியமான பதவிகளில் அமர்கிறார்கள். இதனால் ஆட்சியில் வேலைத்திறன் குறைந்து திட்டங்கள் சரியாக நிறைவேற்றப்படாமல் நாட்டின் முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களில் வெறும் புத்திசாலித்தனத்தை மட்டும் கணக்கில் எடுத்தால் சிதம்பரமே தலைவராக இருக்க வேண்டும். ஆனால் உணர்ச்சி கலந்த புத்திசாலித்தனம் அவரிடம் இல்லாத காரணத்தால் மிகச் சாதாரணமான புத்திக்கூர்மை படைத்த பலர் தலைமையேற்று நடத்துவதை நாம் பல ஆண்டுகளாகக் கண்டு வருகிறோம். அமெரிக்காவில் ஒபாமா, பிரான்ஸ் நாட்டில் சார்கோசி என்று பல இளைய தலைமுறைத் தலைவர்கள் உணர்ச்சி கலந்த புத்திசாலித்தனத்துடன் உருவாகி வருவதைப்போல, இந்தியாவிலும் பல இளைய தலைமுறைத் தலைவர்கள் உருவாகாமல் இருப்பதற்கு, நமது அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலை நம்புவதும், உள்கட்சி ஜனநாயகம் என்பதே வெறும் நாடகமாக இருப்பதும்தான் காரணம். முன்பு உள்கட்சி ஜனநாயகம் இருந்ததால்தான், காமராஜ் போன்ற அடிமட்டத் தொண்டர்கள் கல்வி அறிவு இல்லாவிட்டாலும், இயல்பாகவே உணர்வு கலந்த புத்திசாலித்தனம் இருந்ததால் தலைவர்களாக உருவாக முடிந்தது. அதுமட்டுமல்ல, தகுதியும் திறமையுமே தலைவர்களாக உருவாவதற்குத் தடையாக இருக்கும் நிலைமை எப்படி அரசியல் கட்சிகளிலும் ஏற்பட்டிருப்பது துரதிர்ஷ்டமான விஷயம். அடுத்த வேளைக் கஞ்சிக்கில்லாத, மாதச் சம்பளத்தில் வரவையும் செலவையும் ஈடுகட்ட முடியாத சராசரிக் குடிமகனின் உணர்வுகளையும், பிரச்னைகளையும் புரிந்து கொள்ளாமல், புத்திசாலித்தனத்தின் அடிப்படையில் மட்டுமே ஆட்சி நடத்தப்படுமானால், அது ஒரு வெகுஜன விரோத ஆட்சியாகத்தானே இருக்க முடியும்? அரசியல் கட்சிகளையும், அரசையும் ஒரு வர்த்தக நிறுவனத்துடன் ஒப்பிடுவது தவறு. காரணம், அரசியல் கட்சிகள் ரத்தமும் சதையும் மட்டுமல்லாமல் மனதும் படைத்த மனிதர்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் தன்மையது. இங்கே அறிவு மட்டுமே வேலை செய்ய முடியாது. உணர்ச்சியும் முக்கியமான பங்கு வகிக்கிறது. அதனால்தான் உணர்ச்சி கலந்த புத்திசாலித்தனம் வெற்றி பெறுகிறது!
This Article is indeed very good. Keep up the good work. Indeed this is what is happening in India. Hope this person who write the above article should be given more opportunaties to come with more articles for web viewers. Can we have his email id for Mr. Murugan!..
5/20/2009 6:09:00 PM
Excellent Article, Regards ashraf Ali
5/20/2009 3:56:00 PM
Fantastic article. I really enjoyed it.
5/19/2009 12:43:00 PM
எல்லாக்கட்சிகளிலுமே கொத்தடிமை முறைதான் இருக்கின்றது. எனவே, தலைவர்களைப் புகழ்வதிலும் அடிபணிவதிலும் கருத்து செலுத்துவோரே அடுத்த நிலையை வகிக்க முடிகிறது. இத்தகைய சூழலில் திரு. முருகன் அவர்கள் குறிப்பிடும் சூழல் மேலோங்குவது இயற்கைதானே! எனவே தான் எளிய தொண்டர்கள் முன்னேற இயலாமல் தலைவர்களின் குடும்பத்தினர் மட்டும் ஆட்சி செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு வேளை திரு இராகுல் உண்மையிலேயே தான் கூறுவது போல் உட்கட்சிக் குடிநாயகத்தைக் கொண்டு வந்தார் என்றால் பிற கட்சிகளிலும் பரவி நாடு உருப்பட வழி இருக்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்