புதன், 20 மே, 2009

ஈழப் போராட்டம் தொடரும்! வெல்லும்!

இனப்படுகொலையை தடுக்க தவறியது

.மாலைச் சுடர்

Wednesday, 20 May, 2009 02:55 PM
.
சென்னை, மே 20: இலங்கையில் தமிழர்களுக்கான தனி நாடு கோரிக்கை மேலும் தீவிரமடையுமே தவிர, அப் போராட்டத்தை ஒடுக்கிவிட முடியாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: 1948லிருந்து இன்று வரை தமிழர்களுக்கு எந்த உரிமையையும் சிங்களர்கள் தரவில்லை. ஜனநாயக அறவழியில் தந்தை செல்வா வழியில் உரிமைக்கான பல போராட்டங்களை தமிழர்கள் நடத்தினர். ஆனால் அது கிடைக்காது என்று தெரிந்த பிறகே, 1976ல் தமிழர்கள் வாழ தனி நாடு தேவை என்ற தீர்மானத்தை நிறைவேற்றினர்.

அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்கள் அனைத்திலும் தமிழர் ஐக்கிய முன்னணியையே தமிழர்கள் தேர்வு செய்தனர். தமிழர்களுக்கு தனி நாடு தேவை என்ற ஜனநாயக ரீதியான வாக்கெடுப்பாகவே அதைக் கருத வேண்டும்.

அமைதியான அறப்போராட்டத்தால் எந்த பலனும் கிடைக்காதது மட்டுமல்ல; தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்றது. அதன் விளைவாக தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தமிழ் இளைஞர்களால் உருவானது தான் விடுதலைப்புலிகள் இயக்கம்.

ஆனால் உலக நாடுகள் மூலம் ஆயுதங்களை வாங்கி குவித்துக் கொண்டும், இந்தியா, சீனா, பாகிஸ் தான், ஈரான் போன்ற நாடுகளின் துணையோடும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை அறவே அழித்து விட்டோம் என்று இலங்கை அரசு இன்று ஆர்ப்பரிக்கிறது.

சிங்களர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். தமிழர்களோ இருந்ததையும் இழந்து, பிணக் குவியல்களின் மத்தியில் அலைந்து திரிகின்றனர். நம் கண் எதிரே, நம் கைக்கு எட்டிய தூரத்தில் நடந்த தமிழினப் படுகொலையைக் கண்டு தமிழக மக்கள் ரத்தக் கண்ணீர் வடித்தனர். உலகமே போர் நிறுத்தம் செய்ய வற்புறுத்தியும் இலங்கை அரசு அதை ஏற்கவில்லை.

இந்த இனப்படுகொலையை இந்திய அரசு தடுக்கத் தவறியது தமிழர்களுக்கு செய்த மாபெரும் துரோகமாகும். இந்த துரோகத்துக்கு துணை போன முதல்வர் கருணாநிதியையும் வரலாறு மன்னிக்காது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தை வெற்றி பெற்று விட்டோம் என்று ஆர்ப்பரிக்கும் இலங்கை அரசு, தமிழர்களின் தனி நாடு கோரிக்கையைத் தவிர்த்து விட முடியாது. ஜனநாயக ரீதியில் தந்தை செல்வா போராடினார். விடுதலைப்புலிகள் இயக்கம் ஆயுதம் ஏந்தி போராடுகிறது. போர் முறைகளில் மாற்றம் ஏற்படலாம். ஆனால் லட்சியத்தில் மாற்றம் ஏற்படவில்லை.

இந்நிலையில் இலங்கை அரசால் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலை, தனிநாடு கோரிக்கையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது என்பதே உண்மை. இலங்கையில் நடந்த இந்த தமிழினப் படுகொலையைக் கண்டித்து தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் 3 தினங்களை, துக்க நாட்களாக கடை பிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தேமுதிகவின் கொடிகள் ஒரு வாரத்துக்கு அரைக் கம்பத்தில் பறக்கும் என விஜயகாந்த் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக