சனி, 1 ஜனவரி, 2011

new year greettings from Thamizh Eezha govt.: ருத்திரகுமாரன் புத்தாண்டு வாழ்த்து

தமிழ் ஈழ அரசிற்கு வாழ்த்துகள். ஆக்கமுறையிலான பணிகளால் உலக மக்களின் உள்ளங்களை வென்றெடுத்து விரைவில் தமிழ் ஈழக் குடியரசை அமைக்க  ௨௦௧௧ ஆம் ஆண்டுப் பிறப்பில் வாழ்த்துகிறேன். தமிழ்ஈழம் அமைந்தது. தமிழரெல்லாம் மகிழ்ந்தனர். தரணியெங்கும் வாழ்த்தினர். பாரெங்கும் தமிழ் ஈழக் கொடி பட்டொளி வீசி பறக்கிறது என்னும் செய்தி விரைவில் வரட்டும்!
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

ருத்திரகுமாரன் புத்தாண்டு வாழ்த்து

First Published : 01 Jan 2011 04:10:41 PM IST


கொழும்பு, ஜன.1- நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:புதிய ஆண்டு மலரும் இத் தருணத்தில் தமிழ் ஈழ, தமிழக மற்றும் உலகத் தமிழ் மக்களுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.கடந்து சென்ற 2010 ஆம் ஆண்டில் நாம் திட்டமிட்டபடியே நாடு கடந்த தமிழ் ஈழ அரசை மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கினோம். நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தினைப் பொறுத்தவரை மலரும் இப் புதிய ஆண்டு தனது செயற்பாடுகளை விரிவுபடுத்திச் செல்வதற்கான ஆண்டாக அமைகிறது. அமைக்கப்பட்டுள்ள பத்து அமைச்சசகங்களும் தனித்தனியான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்துச் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன. இன்றைய புத்தாண்டுத் தினத்தில் நாம் வழங்கும் செய்தியாக நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கும் தாயகத்துக்கும் இடையிலான தொடர்பு தற்போதய சூழலில் எத்தகையதாக அமையமுடியும் என்பது குறித்து சில கருத்துகளை பதிவு செய்ய விரும்புகிறோம். நமது பாரம்பரியத் தாயகம் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்குப் பகுதியில் அமையப் பெற்றது. நமது தேசத்துக்கான அரசு இத் தாயக பூமியிலேயே அமையப்போகிறது. நமது பூமி சிங்கள பௌத்த இனவாதக் குழுவினரால் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தமிழ் ஈழத் தனியரசினை அமைப்பதற்காக நாம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் சிங்களத்தின் பிடிக்குள் வாழும் மக்களால், அரசியல் தலைமைகளால் பங்குகேற்பதோ அல்லது இணைந்து கொள்வதோ தற்போதைய சூழலில் முடியாத காரியம் என்பதனை நாம் தெளிவாகப் புரிந்து கொள்கிறோம்.இலங்கைத் தீவில் சிங்கள பௌத்தத்தின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கீழ்ப்படிவதற்கு ஈழத் தமிழர் தேசம் தயாராக இல்லை. இதனைத் தாயக மக்கள் தமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புகளிலும் வெளிப்படுத்தி வருகின்றனர். தேவையினைப் பொறுத்து தாயகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு உறுதுணையான போராட்டங்களை இலங்கைத்தீவுக்கு வெளியே முன்னெடுக்கவும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம் ஆவன செய்யும். தாயக மக்களின் சமூக பொருளாதார வாழ்வு உறுதியாகக் கட்டியெழுப்பப்படுவதில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம் பெரும் அக்கறை கொண்டுள்ளது. தற்போதய சூழலில் நேரடியாக நமது தாயக மக்களை நாம் உதவிகளுடன் அணுக முடியாமல் இருந்தாலும்கூட அவர்களது சமூக பொருளாதார வாழ்வு கட்டமைக்கப்படுவதில் இரு வகை வாய்ப்புக்களை நாம் கவனத்திற் கொண்டுள்ளோம். ஒன்று, சிங்களத்தின் சூழ்ச்சிக்குள் சிக்கிக் கொள்ளாது அதேவேளையில் அங்கு கிடைக்கக்கூடிய சிவில் வெளியினைப் பயன்படுத்தி தனிப்பட்ட முறையிலும் மற்றும் புலம்பெயர் மக்கள் மத்தியில் இயங்கும் பல்வேறு வகையிலான அமைப்புகள் தாயகத்தில் மேற்கொண்டுவரும் கல்வி, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகள் ஊடாக தாயக மக்களின் சமூக பொருளாதார வாழ்வினைப் பலப்படுத்துவது. இரண்டாவதாக, சர்வதேசரீதியிலான அமைப்புக்களுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி நமது தாயக மக்களுக்கு உதவிகள் சென்றடைவதில் அனைத்துலக சமூகத்தினைக் கூடுதலாக ஈடுபடுத்துவது. புதிய ஆண்டில் தனது முயற்சிகளை வேகப்படுத்;த நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுடன் தம்மை இணைத்துக் கொள்ள முன்வருமாறு தமிழ் ஈழ, தமிழக, உலகத் தமிழ் மக்களிடம் நாம் இன்றைய தினத்தில் வேண்டுதல் செய்கிறோம்.இவ்வாறு ருத்திரகுமாரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக