வெள்ளி, 31 டிசம்பர், 2010

confusiont in priority to tamil medium : தமிழ் வழி நியமன முன்னுரிமை அறிவிப்பில் குழப்பம்

அரசாணைக்கிணங்கத் தமிழ்வழி படித்தோர் என்பது குறிப்பிட்ட பணிக்கான கல்வித் தகுதியில் தமிழ்வழி பயின்றிருக்க வேண்டும் என்பதுதான். எனவே, குழு ௨ இன் அடிப்படைக் கல்வித் தகுதி பட்ட வகுப்பாக உள்ளமையால் பட்ட வகுப்பில் தமிழில்  தேறியிருக்க வேண்டும். ஆனால், அரசு  இதனை மாற்ற வேண்டும். குறிப்பிட்ட கல்வித் தகுதியில் தமிழ் வழி பயின்றோர் இல்லாத பொழுது அதற்குக் குறைந்த கல்விநிலையில் தமிழ் வழி பயின்றோருக்கும் முன்னுரிமை தர வேண்டும். மேலும்  இதனை ௮௦ விழுக்காடாக உயர்த்துவதே நீதியாகும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


தமிழ் வழியில் படித்தோருக்கு வேலைவாய்ப்பு: நியமன முன்னுரிமை அறிவிப்பில் குழப்பம்

First Published : 31 Dec 2010 01:57:29 AM IST


சென்னை, டிச.30: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 எழுத்துத் தேர்வு குறித்த அறிவிப்பாணையில், தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் நேரடி நியமனங்களில் 20 சதவீத இட முன்னுரிமை என்ற அரசாணை குறித்து போதிய விளக்கம் அளிக்கப்படாதது மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்த அரசாணை குறித்த அரசின் விளக்கத்துக்காக காத்திருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. குறிப்பிட்டுள்ளது. எனவே, இதுகுறித்து தமிழக அரசு உரிய அறிவுறுத்தல் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் நேரடி நியமனங்களில் 20 சதவீத முன்னுரிமை அளிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதுதொடர்பான அரசாணை தமிழக அரசால் செப்டம்பர் 30-ம் தேதி வெளியிடப்பட்டது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 2 எழுத்துத் தேர்வு அறிவிப்பாணையில், தமிழ் வழியில் படித்தோருக்கான 20 சதவீத வேலைவாய்ப்பு முன்னுரிமை குறித்து அரசின் விளக்கத்துக்கு காத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழ் வழியில் படித்தோர் என்பது, எந்தப் படிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தெளிவுப்படுத்தவில்லை. தமிழ் வழிப் படிப்பு என்பது பிளஸ் 2 வரையா அல்லது இளநிலைப் படிப்பு வரையா என்பது குறித்து விரிவான அறிவிப்பு இல்லாததால், மாணவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.எனவே இதுபற்றி போதிய விளக்கத்தையும், 20 சதவீத இடங்களில் எத்தனை பணியிடங்கள் கிடைக்கும் என்பதை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கிட வேண்டும்.தமிழக மாணவர்களைப் பொறுத்தவரையில் பிளஸ் 2 வரையில் தமிழ் வழியிலும், இளநிலைப் படிப்பை ஆங்கில வழியிலும்தான் பெரும்பாலானோர் படித்துள்ளனர். அறிவியல் பாடம் பெரும்பாலும் ஆங்கில வழி மூலமே கற்பிக்கப்பட்டு வருகிறது. தமிழ் வழிப் படிப்பு எதுவரை என்ற அளவுகோலில், பிளஸ் 2 வரை என்று கணக்கில் எடுத்துக் கொண்டால் ஏராளமான மாணவர்கள் பயன் பெறுவர் என்று மாணவர்களும், தமிழ் ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.800 பணியிடங்கள்: சுமார் 4,300 பணியிடங்களில் அரசு வேலைவாய்ப்பு நேரடி நியமனங்களில் 20 சதவீத முன்னுரிமை அரசாணையின்படி, சுமார் 800 பணியிடங்களுக்கு மேல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஒரே நாளில் யு.பி.எஸ்.சி. - டி.என்.பி.எஸ்.சி தேர்வு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உதவி வணிக வரி ஆணையர், உதவி வேலைவாய்ப்பு அலுவலர், உதவி பிரிவு அலுவலர், வருவாய்த் துறை உதவியாளர் உள்ளிட்ட 4,300-க்கும் அதிகமான காலி பணியிடங்களுக்கான குரூப்-2 எழுத்துத் தேர்வு குறித்த அறிவிப்பு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.இத்தேர்வுக்கான எழுத்துத் தேர்வு 2011 ஜூன் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் 2011 பிப்ரவரி 12-ம் தேதி என குறிப்பிடப்பட்டுள்ளது.ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு குறித்த தேர்வு அட்டவணையும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல்நிலைத் தேர்வு ஜூன் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டி.என்.பி.எஸ்.சி. எழுத்துத் தேர்வும், யு.பி.எஸ்.சி.யின் முதல்நிலைத் தேர்வும் ஒரே தேதியில் நடைபெற உள்ளன. டி.என்.பி.எஸ்.சி.யின் இந்த குரூப் 2 எழுத்துத் தேர்வு அறிவிப்பு, யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக