செவ்வாய், 28 டிசம்பர், 2010

dinamani editorial: 28.12.10: தலையங்கம்: சொல் செயலாக வேண்டும்

தண்ணீரை நம்பி வாழும் மீனவரகள் கண்ணீர் சிந்தியபடியே வாழக் கூடாது என உணர்த்தும் ந்ல்ல தலையங்கம். துயர வெளிப்பாடு என்பது சடங்காகிப் போவதை விட வரும் முன் காப்பதாக அமைய வேண்டும் என உணர்த்தியுள்ளமைக்குப் பாராட்டுகள்.


தலையங்கம்: சொல் செயலாக வேண்டும்!

ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களுக்காக உறவினர்களும் சுற்றமும் நட்பும் துக்கம் அனுசரித்த அதே வேளையில், ஒருங்கிணைந்த கடலோர மேலாண்மைத் திட்டத்தை  வேதாரண்யம் பகுதியில் தொடங்கி வைத்திருக்கிறார் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.இத் திட்டத்தின் ஒரு பகுதியாக, எம்.எஸ். சுவாமிநாதன் ஆய்வு நிறுவனத்தால் மேற்கொள்ளப்படவிருக்கும் ஒருங்கிணைந்த சுரபுன்னை மீனளப் பண்ணைத் திட்டத்தையும் தொடங்கிவைத்து, சுரபுன்னை மரக்கன்றுகளை வழங்கியிருக்கும் அமைச்சர், மீனவர் உரிமைச் சட்டம்  விரைவில் நடைமுறைக்கு வந்துவிடும் என்றும் உறுதி கூறியுள்ளார். இந்த இரு நடவடிக்கைகளுமே மீனவர்களுக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கும்.ஒருங்கிணைந்த கடலோர மேலாண்மைத் திட்டம் நான்கு அம்சங்களை உள்ளடக்கியது. கடலோரம் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைத்தல், கடலோர உயிர்கள் மற்றும் பொருளுடைமைகளைக் காத்தல், கடலோர மக்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துதல், நீடிக்கச் செய்தல் ஆகியவைதான். இவை கடல் மற்றும் கடல் சார்ந்த பல்லுயிர் இனப் பெருக்கத்துக்கு மட்டுமன்றி மீனவர் வாழ்வையும் நலனையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.இத் திட்டம் மேற்கு வங்கம், குஜராத், ஒரிசா ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டன. இப்போது தமிழ்நாடும் இத்திட்டத்திற்குள் வந்துள்ளது. தொடர்ந்து கடல்பகுதியில் நிலநடுக்கம் ஏற்படுவதும், பேரலைகள் உண்டாவதும் அல்லது கடல் உள்வாங்குவதும் அடிக்கடி நடைபெறும் நிகழ்வுகளாக மாறிவிட்ட சூழ்நிலையில், கடலோரம் வாழ் மீனவர்களின் நலனுக்காகச் சுரபுன்னை என்கிற அலையாத்திக் காடுகள் பெருகுவது மிகமிக அவசியம். ஆழிப்பேரலையால் பல ஆயிரம் உயிர்களை இழந்த பின்னரும் நாம் போதுமான அளவு விழிப்புணர்வு இல்லாமலும், அலையாத்திக் காடுகளை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தாமலும் இருந்து வருகிறோம். ஆண்டுதோறும் கடலில் பால் ஊற்றி, கண்ணீர் விட்டு அழுது துக்கத்தை வெளிப்படுத்துவதோடு, இத்தகைய அலையாத்திக் காடுகளை உருவாக்கும் முயற்சியில் பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமே ஈடுபட்டிருந்தாலும்கூட, இந்நேரம் போதுமான அளவுக்கு கடலோரக் காடுகள் உருவாகியிருக்கும் என்பது திண்ணம். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ம் தேதி நினைவுநாள் அனுசரிப்பதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நலஉதவிகள் கிடைக்கவில்லை என்பதுமான செய்திகள் அன்று மட்டும் வெளியாவதும் சடங்குபோல ஆகிவிட்டது. இனி இத்தகைய பேரிடர்களில் எத்தகைய பாதுகாப்பு பலன்தரும்? அதற்கான நடைமுறைகள் என்ன என்பது குறித்த விழிப்புணர்வை கடலோரம் வாழ்கின்ற மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவில்லை.ஆசிவாசிகளுக்காக வன உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டதைப்போலவே மீனவர் உரிமைச் சட்டமும் கொண்டுவரப்படும் என்று அமைச்சர் கூறியிருந்தாலும், அது குறித்து அவர் சரியான விளக்கம் தெரிவிக்கவில்லை. இருப்பினும், இந்தச் சட்டத்தின் அடிப்படையாக, மீனவர்களுடைய குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படும் என்பதற்கான வாய்ப்புகளை அமைச்சர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.மீனவர்களின் வாழ்க்கை கடல் சார்ந்தது. அவர்கள் கடற்கரையைவிட்டு வேறு எங்கும் போய் வாழ்தல் என்பது இயலாது. ஆனால், தற்போதைய நகர் விரிவாக்கம் என்பது, மீனவர் குடியிருப்புகளை மெல்லமெல்ல நகரத்துக்கு வெளியே நகர்த்திக் கொண்டுபோய் விடுவதிலேயே இருக்கிறது. கடற்கரையின் அழகு கருதி, அங்கே மீன்வலைகள் உலர்த்தக் கூடாது என்று மெல்ல ஆரம்பிக்கும் இத்தகைய ஆலோசனை போன்ற தடைகள், மீனவர் குடியிருப்பைக் காலி செய்யும் நடவடிக்கையாக மாறி, மீனவர்களின் வாழ்வுரிமையைப் பாதிக்கின்றன. மீனவர்கள் குடிசை கடல் அலைகளிலிருந்து 100 மீட்டருக்குள் இருக்கலாமா அல்லது 200 மீட்டருக்குள் இருக்கலாமா என்கிற வரையறைகளைக் காட்டிலும், மீனவர்களுக்கான நிரந்தரமான கான்கிரீட் வீடுகளை - அடுக்குமாடிகளாக இருந்தாலும் பரவாயில்லை-500 மீட்டருக்கு அப்பால் கட்டித்தரவும், தொழில் ரீதியான பயன்பாட்டுக்கு மட்டும் 100 மீட்டருக்குள் அரசின் தடைகள், கட்டுப்பாடுகள் இல்லாமல் இருக்கவும் செய்வதுதான் மீனவர்களுக்குப் பாதுகாப்பானதாக இருக்க முடியும். வெறுமனே 100 மீட்டருக்கு அப்பால் மீனவர்கள் குடிசைகளை அமைத்துக் கொள்ளலாம் என்று சலுகை அளித்தால், மீண்டும் ஆழிப்பேரலையால் உயிரிழப்புகளைச் சந்திப்பதும் அல்லது கடல்அரிப்புகளால் வீடுகளை இழப்பதும் மீனவர்களாகத்தான் இருப்பார்கள்.காடுகளில் வாழும் ஆதிவாசிகளுக்கு வன உரிமைச் சட்டத்தின்படி, அவர்கள் வசிக்கும் பகுதி மற்றும் அவர்கள் விவசாயம் செய்யும் வனப்பகுதியை அவர்கள் பெயருக்கே பட்டா வழங்க வேண்டும் என்று விதிமுறை இருந்தாலும், இதுவரை அந்தச் சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை, ஆதிவாசிகள் பயன்பெற முடியாத நிலைதான் இன்றளவும் காணக்கிடைக்கிறது. அதே நிலைமை மீனவர் உரிமைச் சட்டத்திலும் ஏற்பட்டு விடக்கூடாது.அதேபோன்று கடலோர ஒழுங்காற்று மண்டலச் சட்டம் தொடர்பாக எதிர்ப்பு ஏற்பட்டதையடுத்து, மறுஆய்வுக்காக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது அது தொடர்பான அறிக்கை விரைவில் வெளியாகும் என்றும் அமைச்சர் கூறியிருக்கிறார். ஒவ்வொரு வகைப் படகுக்கும் விதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்தால் அதற்கான தண்டனை மற்றும் அபராதம் குறித்து ஆட்சேபணைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இந்த ஆட்சேபணைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் என்று நம்புவோமாக. இந்திய மீனவர்கள் இன்னமும்கூட, அமைப்புசாரா தொழிலாளர்களாகவும், அவர்கள் உழைப்பின் பலனை வியாபாரிகளே அனுபவிக்கும் நிலைமைதான் இருந்துவருகிறது. கவிஞர் வாலி பாடியதைப் போல, "ஒருநாள் போவார் மறுநாள் வருவார் ஒவ்வொருநாளும் துயரம்...' என்கிற அவர்களது நிலையற்ற வாழ்வுக்கு நிலையான பாதுகாப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது சமுதாயத்தின் கடமை. அரசின் கடமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக