செவ்வாய், 28 டிசம்பர், 2010

குழந்தைகளிடம் அறிவியல் சிந்தனை விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்: கருணாநிதி

தாய்மொழிக் கல்வி இருந்தால்தான் அறிவியல் சிந்தனை வளரும்; தமிழ்நாட்டிலும் அறிவியல் மேதைகள் தோன்றுவார்கள். அதுவரை எல்லாமே எட்டாக்கனிதான்.  எனவே, அனைத்து நிலைகளிலும் தாய்மொழியாம் தமிழ்வழிக் கல்வி நிலவ முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


குழந்தைகளிடம் அறிவியல் சிந்தனை விழிப்புணர்வை 
உருவாக்க வேண்டும்: கருணாநிதி


தாம்பரம், டிச.27: குழந்தைகளிடம் அறிவியல் சிந்தனை விழிப்புணர்வை உருவாக்க வேண்டுமென்று முதல்வர் மு.கருணாநிதி வலியுறுத்தினார்.சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில், "நில வளத்தை வளமைக்காகப் பயன்படுத்தி வருங்கால தலைமுறைக்காகப் பாதுகாப்போம்' என்ற கருத்தில் டிசம்பர் 27 முதல் 31 வரை 18-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியது:தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பான 1.30 கோடி ஹெக்டேரில் 57.7 சதவிகிதம் விவசாயத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. நிலவளத்தைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மனித வாழ்விற்கு இன்றியமையாத தேவையான நீரும், நிலமும், மனிதர்களின் தவறான கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் பாழ்படுகிறது.நவீன விஞ்ஞானத்தின் மூலம் விவசாய உற்பத்தி பெருகினாலும், அதிகமாகப் பயன்படுத்தப்படும் ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் மண் வளம் பாதிக்கப்படுகின்றது. பல்வேறு காரணங்களால் தண்ணீர் கெட்டு வருகிறது.பூமியின் வெப்பம் அதிகரிப்பதாலும், சுற்றுச்சூழல் கெடுவதாலும் விவசாயம் பாதிக்கப்படுகின்றது. நகர்ப்புறங்களில் பெருகி வரும் மக்கள்தொகை அதிகரிப்பும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஒரு காரணம். நில வளத்தைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன என்றார்.விழாவில் சந்திராயன் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கூட்டமைப்பின் தேசியத் தலைவர்கள் கமல்காந்த் திவேதி, ஆர்.என்.ரே, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கூட்டமைப்பின் உறுப்பினர் செயலர் எஸ்.வின்சென்ட், தமிழக அமைச்சர்கள் க.பொன்முடி, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே.கணேஷ், துணைவேந்தர் எஸ்.ராமச்சந்திரன், தேசிய அறிவியல் கழகச் செயலர் சி.ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக