திங்கள், 22 நவம்பர், 2010

தமிழர் பகுதிகளில் சேவையைக் குறையுங்கள்:

சேவை செய்தது போதும் என்றுதான் சிங்கள அரசு சொல்லியுள்ளது. தொண்டினைக் குறைத்துக் கொள்ளுமாறு சொல்லவில்லை. இருக்கின்ற தமிழர்களையும் அழிக்கின்ற பொழுது, இனிமேல் தமிழர் பகுதி என ஒன்று இலலாமல் ஆக்கி வரும் சூழலில் எந்தத் தமிழர் பகுதிக்கு அவர்களின் தொண்டு தேவைப்படப் போகிறது என்னும் நல்லெண்ணத்தில்தான் சிங்கள அரசு அவ்வாறு கூறியுள்ளது. அதையும் மீறி அவர்கள் தொண்டு செய்ய முற்பட்டுக்  கொட்டடிகளில் அடைபட்டு வதைபட வேண்டா என்னும் நல்லெண்ணத்தில்தான் சிங்கள அரசு எச்சரித்துள்ளது. எனவே, சிங்கள-இந்திய அரசுகளுக்குத் தொல்லை கொடுக்க விரும்பாதவர்கள்  தமிழர் பகுதி என ஒன்று இல்லை என்பதை உணர்ந்து உடனடியாகச் சிங்களத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  என்ன கொடுமையடா இது! வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்



தமிழர் பகுதிகளில் சேவையைக் குறையுங்கள்: செஞ்சிலுவைச் சங்கத்துக்கு இலங்கை அரசு கட்டளை

First Published : 22 Nov 2010 12:26:40 AM IST


கொழும்பு,நவ.21: இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகளில் இப்போது செய்துவரும் சேவையைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு இலங்கை அரசு அறிவுறுத்தியிருக்கிறது.இதை சங்கத்தின் பத்திரிகைத் தொடர்பாளர் சரஸி விஜரத்ன கொழும்பில் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.சேவையை ஏன் குறைக்க வேண்டும், சேவை இனி தேவைப்படவில்லையா, அந்தச் சேவைகளை இலங்கை அரசே செய்ய மாற்று ஏற்பாடுகளைச் செய்துவிட்டதா என்ற விளக்கம் ஏதும் இல்லாமல், சேவை செய்தது போதும் என்று மட்டும் அரசு அழுத்தம்திருத்தமாகச் சொல்லியிருக்கிறது.தமிழ் ஈழ விடுதலைக்காகப் போராடிய போராளிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான சண்டை கடந்த 30 ஆண்டுகளாக நடந்து வந்தது. அப்போதெல்லாம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு ஒரே ஆறுதலாக, உற்ற துணையாக களத்தில் நின்றது இந்த செஞ்சிலுவைச் சங்கம்தான். வாழைச் சேனையில் சின்னஞ்சிறு குழந்தைகள் தங்கவைக்கப்பட்டிருந்த இல்லத்தை, விடுதலைப் புலிகளின் பாசறை என்று கூறி வான்வழித் தாக்குதலை இலங்கை விமானப்படை நடத்தியபோது உயிரிழந்தவர்களின் சடலங்களை அகற்றவும் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்யவும் ஓடோடி வந்தது இந்த செஞ்சிலுவைச் சங்கம்தான். அந்த ஒரு சம்பவம் என்று மட்டும் இல்லை, தமிழர்கள் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு சம்பவத்திலும் உறுதுணையாக இருந்தது இந்தச் சங்கம்தான். இது சர்வதேச அமைப்பு. இதில் உறுப்பினர்களாக இருப்பவர்களில் சிங்களர்களும் அடங்குவர்.முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த தமிழர்கள் இப்போது என்ன நிலையில் இருக்கிறார்கள், முகாம்களிலிருந்து ஊர் திரும்பியவர்களுக்கு அவர்களுடைய பழைய வீடுகளே கிடைத்தனவா, அவர்கள் பழையபடி வேலையில் ஈடுபட முடிகிறதா, தமிழர்களின் மறுவாழ்வுப் பணிகள் எந்த நிலையில் இருக்கிறது என்பதெல்லாம் விவரமாக எதுவும்தெரிவிக்கப்படவில்லை. அரசு சாராத தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எதுவாக இருந்தாலும் இலங்கை அரசிடம் தகவல் தெரிவித்து பதிவு செய்து கொண்ட பிறகே சேவையைத் தொடங்க வேண்டும், அது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கும் பொருந்தும் என்று இந்த மாத முற்பகுதியில் இலங்கை அரசு கடுமையான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. பதிவு செய்யாமல் தவிர்க்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் அந்த சுற்றறிக்கையில் அரசு கூறியிருக்கிறது. இதைப் பார்க்கும்போது தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இனி தொடர்ந்து கண்காணிப்புக்கும் அரசின் கெடுபிடிக்கும் உள்ளாகும் என்பது தெளிவாகிறது.2009 மே மாதம் விடுதலைப் புலிகளுடனான சண்டை முடிவுக்கு வந்தது. போராளிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான போரில் சுமார் 70,000 பேர் இறந்ததாக அரசின் தகவல் தெரிவிக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக