முதலில் தமிழ்நாட்டு அரங்கங்களில் தமிழிசை மட்டுமே நிகழ்த்தப்பட உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். பிற மொழிப்பாடல்களைப் பாட எண்ணுபவர்கள் அம் மொழி வழங்கும் பகுதிகளில் சென்று பாடட்டும். நாமும் அவர்களை ஊக்கப்படுத்துவோம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 26 Nov 2010 03:27:47 AM IST
Last Updated : 26 Nov 2010 08:04:06 AM IST

கடந்த இரண்டு ஆண்டுகளாக நமது விமர்சனங்களின் மூலமும், இசைவிழா மலர்களின் மூலமும் "தினமணி' இசை உலகத்துக்கு விடுத்துவரும் கோரிக்கைக்குச் சில முன்னணி இசைக் கலைஞர்கள் செவிசாய்த்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மார்கழி மாதம் வந்தால், உலகெங்கிலும் உள்ள கர்நாடக இசைப் பிரியர்களின் வேடந்தாங்கலாக சென்னை மாறிவிடுகிறது. நல்ல சங்கீதம் கேட்பதற்கு வரும் ரசிகர்கள் ஏமாற்றப்படக்கூடாது என்கிற நமது ஆதங்கத்துக்கு ஆதரவளித்திருக்கும் இந்த இசைக்கலைஞர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.சென்னையிலும், சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் மட்டுமே நூற்றுக்கும் அதிகமான சங்கீத சபாக்கள் இருக்கின்றன. அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்பு விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலிருந்த சபாக்கள் இப்போது மலிந்து விட்டிருப்பதன் காரணம், மக்கள்தொகை பெருகி இருப்பது மட்டுமல்ல, போக்குவரத்து நெரிசலால் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் பயணிப்பதில் உள்ள சிரமங்களும்கூட. தொழில் நிறுவனங்கள், அரசுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் என்று பலதரப்பட்ட புரவலர்களும் இசை நிகழ்ச்சி நடத்தும் சபாக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதும்கூட, சபாக்கள் மலிந்துவிட்டதற்குக் காரணம்.சபாக்கள் அதிகரித்திருக்கும் அளவுக்கு ரசிகர்களின் ஆதரவும் அதிகரித்திருக்கிறதா என்று கேட்டால், குறிப்பிட்ட சில பழமையான சபாக்களைத்தவிர, பெருவாரியான சபாக்களுக்கு ரசிகர்களின் ஆதரவு பெரிய அளவில் இல்லை என்பதுதான் உண்மை. இரண்டு மாத இடைவெளியில் நூற்றுக்கணக்கான சபாக்களில் 3,000-க்கும் அதிகமான நிகழ்ச்சிகள் நடக்கும்போது, அதிலும் குறிப்பாக, அலுவலக நாள்களில் பகல் நேர நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் வருகை இல்லாமல் இருப்பதில் வியப்பென்ன இருக்கிறது?எல்லா சபாக்களும் எல்லா முன்னணிக் கலைஞர்களின் நிகழ்ச்சியையும் வழங்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால், அப்படி அத்தனை சபாக்களிலும் பாடுவது என்பது எந்த ஒரு கலைஞருக்கும் சாத்தியமில்லை. தினமும் ஒரு நிகழ்ச்சி என்று கச்சேரி பாடத் தொடங்கினால், அவர் சங்கீத சாம்ராட்டே ஆனாலும் அந்த சங்கீதத்தின் தரம், தராதரமில்லாததாகிவிடும்.அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் போன்ற இசை விற்பன்னர்கள், புகழின் உச்சியில் இருக்கும்போதுகூட, மார்கழி சீசனில் இரண்டு கச்சேரிகளுக்கும் அதிகமாக ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அரியக்குடியின் சங்கீதத்தைக் கேட்க வேண்டும் என்பதற்காக அந்த இரண்டு கச்சேரிகளும் நடக்கும் நாள்களில் ரசிகர்கள் வெளியூர்களிலிருந்து வந்து குவிவார்கள். நல்ல தரமான சங்கீதத்தை மட்டுமே ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் எல்லா மூத்த வித்வான்களும் குறியாகவும் இருந்தனர்.அந்த நிலைமை மாறி, இப்போது காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள நினைக்கும் இளைய தலைமுறைக் கலைஞர்கள் பலர் இருப்பது வேதனை அளிக்கிறது. தங்களது திறமையை முன்வைத்துத் தங்களுக்கு இசை உலகில் நிரந்தர இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்கிற தன்னம்பிக்கை இவர்களிடம் இல்லாததுதான் இதற்குக் காரணம் என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.அருணா சாய்ராம், கே.ஜே.ஜேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ போன்ற ஒருசிலர் மட்டும் ஆரம்பம் முதலே குறைந்த கச்சேரிகளை ஏற்றுக்கொண்டு நிறைந்த சங்கீதத்தை ரசிகர்களுக்குத் தருவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். சீசனில் பதினைந்தும், இருபதும் அதற்கு மேலும்கூடக் கச்சேரிகளை ஏற்றுக்கொண்டு, அதில் பாதிக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளில் ரசிகர்களை முழுமையாகத் திருப்திப்படுத்தாமல் முகம் சுளிக்க வைத்தவர்கள், இப்போதாவது கச்சேரிகளைக் குறைத்துக் கொள்ள முடிவெடுத்திருப்பதை வரவேற்க வேண்டும்.பிரபலமான கலைஞர்கள் தங்களது நிகழ்ச்சிகளைக் குறைத்துக்கொண்டு, குறைந்தபட்சம் வாரத்துக்கு ஒரு கச்சேரிக்கு மேல் ஏற்றுக்கொள்வதில்லை என்று வரம்பு விதித்துக் கொண்டால்தான், ரசிகர்கள் சலித்து வெறுக்கும் அளவுக்குப் பாடிக் களைத்துத் தங்கள் சாரீரத்தைத் தொலைத்துவிடாமல் காப்பாற்ற முடியும். இதை சுதா ரகுநாதன், டி.எம். கிருஷ்ணா, ஒ.எஸ். அருண் போன்ற கலைஞர்கள் காலம் கடந்துவிடுவதற்கு முன்னால் புரிந்துகொண்டு சுதாரித்திருப்பதை நாம் பாராட்டியாக வேண்டும்.தினமும் ஒரு கச்சேரி பாடுவது அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் பாடுவது என்பதெல்லாம் அந்தக் கலைஞர்களுக்கு வருமானம் சேர்க்க உதவுமே தவிர, அவர்களது இசைக்கு மேன்மை சேர்க்காது. இசைக் கலைஞனுக்கு அடிப்படையான விஷயங்கள் சாரீரமும் (குரல்) அவனது கற்பனையும். அது மோகனமோ, கல்யாணியோ, காம்போதியோ, பைரவியோ அதை எத்தனை முறை எத்தனைபேர் ஆலாபனை செய்தாலும் சலிப்புத் தட்டாமல் இருப்பதன் காரணம், அந்த ராகங்களின் அடிப்படை சிதைந்துவிடாமல் தங்களது கற்பனையைப் புகுத்தி அவரவர் பாணியில் இசைப்பதால்தான். நாங்கள் கச்சேரிக்குக் கச்சேரி வெவ்வேறு ராகங்களைத்தானே பாடுகிறோம் என்று இவர்கள் வாதிட்டாலும், கலைஞரின் கற்பனாசக்திக்கும் ஓர் எல்லை இருக்கிறதுதானே?இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா ஒருபடி மேலேபோய், மார்கழி மாதம் முதல் பாதியில் தான் எந்தக் கச்சேரியும் ஒத்துக்கொள்ளப் போவதில்லை என்றும், ஒரு ரசிகனாக மற்றவர்கள் பாடுவதைக் கேட்கப் போவதாகவும் கூறியிருப்பது "சபாஷ்' போட வைக்கிறது. மூத்த கலைஞர்களின் கச்சேரிகளில், இன்றைய கலைஞர்கள் முன்வரிசையில் அமர்ந்து அவர்களது சங்கீத ஞானத்தைக் கிரகித்துக் கொள்வது என்பதுபோல சங்கீத மேன்மைக்கு வேறு எதுவுமே உதவாது. டி.எம். கிருஷ்ணாவைப் பின்பற்றி ஏனைய கலைஞர்களும், பிற கலைஞர்களின் நிகழ்ச்சிகளில் ரசிகர்களாகப் பங்கேற்கும் நாகரிகத்தை உருவாக்குவார்கள் என்று நம்புவோமாக.சீசனுக்கு ஆறே ஆறு கச்சேரி என்று பிரபல கலைஞர்கள் நிகழ்ச்சிகளைக் குறைத்துக்கொண்டு, அந்த ஆறு கச்சேரிகளுக்காக ரசிகர்களை ஏங்க வைக்கும் நிலைமை ஏற்பட வேண்டும். புதியவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களது நிகழ்ச்சியில் ரசிகர்களில் ஒருவராக அமர்ந்து இசை வளர்ச்சிக்குப் பங்களிக்க வேண்டும். நல்லதொரு தொடக்கத்துக்கு வித்திட்டிருக்கும் கலைஞர்களுக்கு நமது வாழ்த்துகளும், பாராட்டுகளும்!
கருத்துகள்


By பொதிகைச்செல்வன்
11/26/2010 6:16:00 PM
11/26/2010 6:16:00 PM


By ASHWIN
11/26/2010 5:13:00 PM
11/26/2010 5:13:00 PM


By ASHWIN
11/26/2010 5:00:00 PM
11/26/2010 5:00:00 PM


By ponnivalavan
11/26/2010 3:35:00 PM
11/26/2010 3:35:00 PM


By Murugaiyan
11/26/2010 12:52:00 PM
11/26/2010 12:52:00 PM


By S. Krishnamoorthy
11/26/2010 11:19:00 AM
11/26/2010 11:19:00 AM


By S Raj
11/26/2010 8:30:00 AM
11/26/2010 8:30:00 AM


By LK
11/26/2010 8:07:00 AM
11/26/2010 8:07:00 AM


By Khadhar
11/26/2010 8:05:00 AM
11/26/2010 8:05:00 AM


By VARAGUNAN
11/26/2010 8:04:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 11/26/2010 8:04:00 AM
(Press Ctrl+g or click this to toggle