வெள்ளி, 26 நவம்பர், 2010

"தமிழ் இலக்கியக் கருத்துகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும்': தமிழறிஞர் தமிழண்ணல்

நல்ல கருத்துகள். உரியவர்கள் நடைமுறைப்படுத்தித் தமிழ் வளர்ச்சியில் கருத்து செலுத்த வேண்டும். தமிழை வாழ்த்துவோரும் எதிர்ப்போரும் தமிழின் உண்மைச் சிறப்பை  அறியாதவர்களாக இருக்கின்றனர். 
அனைவரையும் தமிழறியச் செய்ய வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

"தமிழ் இலக்கியக் கருத்துகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும்': தமிழறிஞர் தமிழண்ணல்

First Published : 25 Nov 2010 12:48:50 PM IST


மதுரை, நவ.24: தொன்மைவாய்ந்த தமிழின் சங்ககால இலக்கியங்களின் கருத்துகள் நூலகம் உள்ளிட்ட பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்; அப்போதுதான் தமிழை வளர்த்தெடுக்க முடியும் என்று தமிழறிஞர் தமிழண்ணல் கேட்டுக்கொண்டார்.செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியின் தமிழ்த் துறை ஆகியவை இணைந்து தமிழ் இலக்கிய வகைகள் ஒரு வரலாற்றுப் பார்வை என்ற தலைப்பில் 10 நாள் பயிலரங்கை நடத்தி வருகின்றன. புதன்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவுக்குத் தலைமை வகித்து தமிழண்ணல் பேசியதாவது:செம்மொழித் தகுதி பெற்று 6 ஆண்டுகள் ஆகிவிட்ட தமிழின் வளர்ச்சிக்கான பணிகளை இன்னும் விரைவுபடுத்த வேண்டிய நிலையில்தான் நாம் உள்ளோம். மூவாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் இலக்கியங்களை, அகராதி வைத்து படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் கைக்கொள்ள வேண்டும்.தமிழ் இலக்கியம் தனித்தன்மை மிக்கது. சம்ஸ்கிருதம் காலாவதியான மொழி என்று, நம் மொழியை உயர்த்தியும், பிற மொழிகளைப் பழித்தும் பேசினால் மட்டும் தமிழ் வளர்ந்து விடாது. தமிழ் மொழியை வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் நாம் ஆர்வம் காட்ட வேண்டும்.ஒப்பிலக்கிய நோக்கில் பிற நாட்டு அறிஞர்கள் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றினால், தமிழில் உள்ள சிறந்த கருத்துகளைப் பிற மொழியினருக்கு எடுத்துச்செல்வது எளிதாகும்.மழலையர் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை தமிழ்வழியிலேயே பயிற்றுவிப்பது அவசியம்.பிற மொழிகள் தேவையில்லை என்ற கருத்தும் தேவையற்ற ஒன்றாகும். உயர்கல்வியில் ஆய்வுப் படிப்புகளை மேற்கொள்ளும்போது ஆங்கிலம் அவசியமாகிறது.தமிழ் இலக்கியம், சங்க கால இலக்கியம், திருக்குறள், இரட்டைக் காப்பியம் ஆகியவை விளங்கவில்லை என்ற மாயத் தோற்றத்திலிருந்து மாணவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும்.தமிழாசிரியர்கள் ஆங்கில நூல்களையும் படிக்கும் மரபாக தங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தமிழின் மிகப் பெரிய செல்வங்களான இலக்கியங்களின் கருத்துகளை உலகத்தாரிடம் கொண்டுசென்று நம் மொழியின் பெருமையை உணர்ந்திடச் செய்ய முடியும். தமிழை நன்கு கற்றபோதிலும் ஆங்கிலத்தையும்,  பிறிதொரு ஏதேனும் இந்திய மொழியையும் படிக்கும் பழக்கத்தை தமிழாய்வு மாணவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.ஏனெனில், செம்மொழித் தகுதி பெற்றுவிட்டோம் என்பதல்ல முக்கியம். செம்மொழியை வளர்த்து நாமும் வளர வேண்டும். தமிழாய்வாளர்களின் வளர்ச்சியில்தான் தமிழ் இலக்கிய வளர்ச்சி உண்டு என்பதை உணர வேண்டும்.பிற மொழிகள் பற்றி நினைக்கும்போது அதில் உள்ள செல்வங்களையும் நினைக்க வேண்டும். மேடையில் ஏறி தமிழ் வாழ்க என்று பேசினால் மட்டுமே தமிழ் வளர்ந்து விடாது. வளர்ப்பதற்குரிய வழிகளைச் செய்தாக வேண்டும்.தமிழ் செவ்வியல் இலக்கியங்கள் உலக செவ்வியல் இலக்கியத்தில் இருந்து வேறுபடுபவை. மனித வாழ்வின் அனுபவத்தை நேரடியாக பாடுபவை. உலகில் வேறு எந்த இலக்கியத்திற்கும் இதுபோன்ற ஒரு சிறப்பு இல்லை. அதனால், நமது பெருமை பற்றி பேசுவதைவிட அதன் சிறப்புகளை மொழிபெயர்த்து பிறருக்கும் அளிக்க வேண்டும்.தமிழ் சங்கப் பாடல்கள், இலக்கியங்களில் உள்ள நல்ல பல கருத்துகளை வணிக இடங்கள், நூலகங்கள், கல்வி நிறுவனங்களில் காட்சிப்படுத்த உடனடியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் நாம் தமிழை வளர்த்தெடுக்க முடியும் என்றார் அவர்.டோக் பெருமாட்டி கல்லூரி முதல்வர் ஆ.மெர்சி புஷ்பலதா பேசியது: தமிழ் இலக்கியக் கருத்துகள் கல்லூரியின் நுழைவு வாயிலிலும், நூலகத்திலும் உள்ள கரும்பலகைகளில் எழுதிவைத்து காட்சிப்படுத்தப்படும். தமிழ்த் துறையும், பிற துறையும் இணைந்து தமிழ் வளர்ச்சிக்கான ஆய்வை மேற்கொள்வது குறித்து ஏற்பாடு செய்யப்படும். இளைய தலைமுறையினருக்கு தமிழில் உள்ள சிறப்புகளை எடுத்துக் கூறி, சரியான வாழ்க்கை வாழக் கற்றுக்கொடுக்கும் இலக்கியங்களை அலமாரியில் வைத்து அழகு பார்க்காமல் பயனுள்ளதாக மாற்ற அனைவரும் முயல வேண்டும் என்றார் அவர்.நிகழ்ச்சியில், மதுரை வானொலி நிலைய நிகழ்ச்சிப் பொறுப்பாளர் சுந்தர ஆவுடையப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.பயிலரங்கின் முதல் அமர்வில் ஆற்றுப்படை இலக்கிய வளர்ச்சி எனும் தலைப்பில் முனைவர் ராமசுந்தரமும், கலம்பக இலக்கியங்கள் எனும் தலைப்பில் முனைவர் பா. மதிவாணனும் பேசினர். கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் செ.அனந்தம்மாள் வரவேற்றார். துணைத் தலைவர் அஞ்சலி அன்னாபாய் நன்றி கூறினார்.டிசம்பர் 4-ம் தேதி வரை இந்தப் பயிலரங்கம் நடைபெறுகிறது.
கருத்துகள்

தமிழறிஞர் தமிழண்ணல் அவர்களின் சொல்லைச் சான்றோர் சொல்லாகக் கொள்ளவேண்டும்.
By நாடோடி
11/25/2010 5:56:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக