புதன், 24 நவம்பர், 2010

பழங்குடிகள் பாதுகாவலர்களே!

நல்ல கருத்து. அதே நேரம் புலிகளைக் காப்பாற்றச்செயல்படும் அரசு மனிதப் புலிகளை அழிக்கிறதே என மாவீரர் வாரத்தில் சிந்தனை வருகிறது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


பழங்குடிகள் பாதுகாவலர்களே!

First Published : 24 Nov 2010 12:00:00 AM IST


அண்மையில் ராஜஸ்தானில் உள்ள சரிஸ்கா புலிகள் காப்பகத்தில் ஒரு புலி மர்மமான முறையில் இறந்துபோனது பரபரப்புக்கு உள்ளாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இங்கு பார்வையிட வந்தவுடன், இங்குள்ள பழங்குடி கிராம மக்களை வேறுஇடங்களில் குடியமர்த்தும் பணிக்காக ரூ. 30 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவித்தார்.இந்தியாவில் உள்ள புலிகள் காப்பகம் அனைத்திலும் இவ்வாறு பழங்குடிகளை இடம்பெயரச் செய்வதில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மிகவும் கறாராக இருக்கிறது. மனிதர்களை வெளியேற்றினால் புலிகள் இனப்பெருக்கம் அடைந்துவிடும், அவை அருகிவரும் உயிரினப் பட்டியலிலிருந்து விலக்கப்பட்டு, பெருகிவரும் உயிரினமாக மாறிவிடும் என்கிற நம்பிக்கை எப்படி ஏற்பட்டது என்பது யாருக்கும் புரியாத புதிர். காலம்காலமாக காட்டில் வாழும் ஆதிவாசிகளை அவர்களது இருப்பிடத்திலிருந்து வெளியேற்றிவிட்டால், காட்டில் பல்லுயிர்ப் பெருக்கம் தானே நிகழ்ந்துவிடும் என்கிற எண்ணம்தான் இதற்கு அடிப்படை. ஆனால், ஒரு காட்டில் பல்லுயிர்ப் பெருக்கம்  வெறும் விலங்குகள், மற்றும் தாவரங்கள் மட்டுமல்ல, அது ஆதிவாசிகள் என்கிற மனிதர்களையும் சேர்த்ததுதான் என்பதை மட்டும் எண்ணிப் பார்க்கத் தவறிவிடுகின்றனர்.அருகிவரும் உயிரினமான புலிகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்க முடியாது. புலிகள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதால் என்ன லாபம் என்று கேட்கலாம். சுற்றுச்சூழல் அறிவியலின்படி ஒவ்வோர் உயிரினமும் மற்றோர் உயிரினத்தைச் சார்ந்துள்ளன. இவற்றில் ஒன்று அழிந்துபோகுமானால், இந்த சங்கிலித்தொடர் அறுந்துபோகும். பல்லுயிர்ப் பெருக்கம் என்பது மெல்லமெல்ல இல்லாமல் போகும். இந்த தொடர்நிகழ்வை உணவுப் பிரமிடு மூலம் விளக்குகிறார்கள். இந்த பிரமிடின் மேல்பகுதியில் இருக்கும் உயிரினங்களில் புலியும் ஒன்று. புலியைக் காப்பாற்றி, அவை பெருகி வளரும்படி செய்தால், அந்தக் காடு முழுமையும் வளரும்.ஆகவேதான் இப்போது ரஷியாவில், உலகின் 13 நாடுகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி, அருகிவரும் புலிகளை எவ்வாறு காப்பாற்றலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். நவம்பர் 21-ம் தேதி தொடங்கியுள்ள இந்தப் புலிகள் மாநாட்டில் எடுத்த எடுப்பிலேயே தெரிவிக்கப்பட்ட கருத்து, புலிகளுக்கு எதிரான அம்சங்களைத் தடுத்து, அவற்றைக் காப்பாற்ற உலக நாடுகள் தவறும்பட்சத்தில், இன்னும் 12 ஆண்டுகளில் ஒரு புலிகூட உலகில் இருக்காது என்பதுதான்.உலக வனஉயிர் நிதியம் (டபிள்யு.டபிள்யு.எப்) தெரிவித்துள்ள புள்ளிவிவரத்தின்படி உலகில் 3,200 புலிகள் மட்டுமே உள்ளன. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு லட்சம் புலிகள் இருந்துள்ளது என்கிறது இந்த அமைப்பு.பங்களாதேஷ், பூடான், கம்போடியா, சீனா, இந்தியா இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, மியன்மர், நேபாளம், தாய்லாந்து, வியட்நாம், ரஷியா ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ள இந்த மாநாட்டில், புலிகளைக் காப்பாற்ற வேண்டும் என்றால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 35 கோடி டாலர் செலவிட்டாக வேண்டும் என்றும் மதிப்பீடு செய்திருக்கிறார்கள். இந்தத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு, புலிகளையும் புலிகளின் உணவாகக் கருதப்படும் சிறு விலங்குகளைகளையும் வேட்டையாடுதலைத் தடை செய்வதற்காகச் செலவிடப்படும். இந்த மாநாட்டின் நோக்கம் இன்னும் 10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காகப் பெருக்குதல் வேண்டும் என்பதுதான்.புலிகளையும், புலிகளின் உணவாகும் சிறுவிலங்குகளையும் வேட்டையாடுவதைத் தடை செய்வது சரியான நடவடிக்கை என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், பழங்குடியினர்தான் வேட்டையாடுகிறார்கள் என்றும் அவர்களை வெளியேற்றிவிட்டால் புலிகள் வாழ்ந்துவிடும் என்றும் சொல்லும்போதுதான் மறுக்க வேண்டியது அவசியமாகிறது.இத்தனை நூற்றாண்டுகளாக காடுகளில் வாழ்ந்து புலிகளின் நடமாட்டத்தை அதன் கால்  தடங்களையும், சாணங்களையும் வைத்தே வகைப்படுத்தவும், அதன் தாக்குதலைச் சமாளிக்கவும் தெரிந்திருந்த இந்தப் பழங்குடியினர், புலியால் தங்கள் ஆடு மாடுகளை இழந்தாலும், உறவுகளை உடல்உறுப்புகளை இழந்தபோதிலும் புலிகளோடு வாழ்ந்தார்கள். புலிகளும் வாழ்ந்தன. அருகிவிடவில்லை.புலிகள் அருகிப் போனதற்குக் காரணம் அவை தோலுக்காகவும், மருத்துவப்  பயன்பாட்டுக்காகவும் கட்டுப்பாடு இல்லாமல் வேட்டையாடப்பட்டதுதான். 1972-ம் ஆண்டு வரை புலிவேட்டை என்பது இந்தியாவில் தடை செய்யப்படாத வனப் பொழுதுபோக்காக இருந்தது. சுடப்பட்ட புலியை காலிடையில் கிடத்தி, துப்பாக்கியுடன் புகைப்படத்துக்கு காட்சிதரும் படங்கள் பல வீடுகளில் மிக இயல்பாகவே காணப்பட்டன. புலித் தோலும், புலி நகங்களும் மிகச் சாதாரணமாக விற்பனையில் இருந்தன. 1972-க்குப் பின்னர்தான் புலி வேட்டை தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் புலிகள் வேட்டையாடப்பட்டு கடத்தப்படுவது தொடங்கியது. இதைச் செய்தவர்கள் காடுவாழ் பழங்குடிமக்கள் அல்லர். அந்த மக்கள் துணையாளாக மிரட்டி அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்பதே உண்மை. புலிகளை வேட்டையாடி கடத்தல் செய்யும் பேர்வழிகளைப் பிடித்து தண்டிப்பதற்குப் பதிலாக, பழங்குடியினரை வெளியேற்றவும் அதற்காக பல நூறு கோடிகள் செலவிடவும் தயாராக இருக்கிறது அரசு.காடுவாழ் பழங்குடியின மக்களை இடம்பெயரச் செய்யாமல் அவர்கள் உதவியோடு புலிகள் எண்ணிக்கையைப் பெருகச் செய்தல் நடைமுறைக்கு உகந்ததாக அமையும். மேலும், புலிகளுக்கு உணவாகும் சிறு வனவிலங்குகளை வேட்டையாடுவதைத் தடுப்பதும்கூட உதவியாக அமையும். பழங்குடியினரை வெளியேற்றச் செலவிடும் பணத்தை, மிகச்சிறிய அளவு என்றாலும் பழங்குடியினரிடம் கொடுத்தாலும் போதுமே, கடத்தல்காரர்களுக்கு உதவும் எண்ணம் வருமா? கடத்தல்காரர்களைப் பற்றி அரசுக்கு தகவல்தரும் நபர்களாக மாறிவிடுவார்கள், அல்லவா! காட்டுக்குள் இயல்பாக வாழ்பவனை அதற்குக் காவலாளியாக மாற்றாமல், அவர்களை வெளியேற்றுதல் சரியானதாக இருக்குமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக