புதன், 24 நவம்பர், 2010

மூப்பனார் சிறப்பு அஞ்சல்தலை இருட்டடிப்பு?

1. மத்தியில் காங்.ஆளும் கட்சியாக இருக்கும் பொழுது காங்.தலைவருக்கு இருட்டடிப்பு ஏன் செய்யப் போகிறார்கள்? சரியாக உசாவி அறியுங்கள். 2.  சிறப்பு  அஞ்சல் தலை  ஒருவரின் சிறப்பு கருதியே வெளியிடப்படுகின்றது. அவ்வாறிருக்க அவ்வஞ்சல் தலை நாடெங்கும் நிலையான பயன்பாட்டில் இருந்தால்தானே மக்கள் அஞ்சல்தலைக்குரியவரைப் பற்றி அறிவர். அவ்வாறிருக்க 72 சிறப்பு அஞ்சல்  நிலையங்களில் மட்டும் கிடைக்கும் வண்ணம் வெளியிட்டு அவையும் சேமிப்பாளர்களிடம் முடங்கிக் கிடப்பதில் என்ன பயன்? அரசு தன் கொள்கையை மாற்றி அனைத்துச சிறப்பு அஞ்சல்தலைகளயும் மக்கள் பயன்பாட்டிற்கு எனத் தொடர்ந்து வெளியிட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
மூப்பனார் சிறப்பு அஞ்சல்தலை இருட்டடிப்பு?

First Published : 24 Nov 2010 02:56:13 AM IST


திருச்சி நவ. 23: மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஜி.கே. மூப்பனாரின் சிறப்பு அஞ்சல்தலை இருட்டடிப்பு செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இந்திய அஞ்சல்துறை பொதுப் பயன்பாட்டுக்காக அஞ்சல்தலைகளை வெளியிடுகிறது. இதுதவிர, அரசியல் தலைவர்கள், வரலாற்றுச் சின்னங்கள், முக்கிய நிகழ்வுகளைச் சிறப்பிக்கும் வண்ணம் அவ்வப்போது, சிறப்பு அஞ்சல்தலைகளையும் வெளிட்டு வருகிறது.பொதுப்பயன்பாட்டுக்கான அஞ்சல்தலைகள் நாடு முழுவதும் உள்ள 1,60,000 அஞ்சலகங்களில் கிடைக்கும். ஆனால், சிறப்பு அஞ்சல்தலைகள், தமிழகத்தில் உள்ள 5 அஞ்சலகங்கள் உள்பட நாடு முழுவதும் உள்ள 72 சிறப்பு அஞ்சல் நிலையங்களில் மட்டுமே கிடைக்கும். பொதுவாக, சிறப்பு அஞ்சல்தலை வெளிடப்படும்போது, அஞ்சல்தலை, முதல் நாள் உறை, விளக்கக் குறிப்பு ஆகிய மூன்றும் வெளியிடப்படும். வெளியிடப்படும் நாளன்றே நாடு முழுவதும் உள்ள 72 அஞ்சலகங்களிலும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்.அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் இந்தச் சிறப்பு அஞ்சல்தலைகள் வெளியிடப்படும் நாளன்றே அஞ்சலகங்களில் வாங்குவதை விரும்புவர்.ஆனால், சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜி.கே. மூப்பனாரின் சிறப்பு அஞ்சல்தலை தமிழகத்தில் உள்ள அஞ்சலகங்களில் வெளியிடப்பட்ட நாளிலிருந்தே கிடைக்கவில்லையாம்.இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் கூறியது: "தமிழக முன்னாள் முதல்வர் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியாரின் சிறப்பு அஞ்சல்தலை ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியானது. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 30-ம் தேதி தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஜி.கே. மூப்பனாரின் சிறப்பு அஞ்சல்தலையும் வெளியிடப்பட்டது.இந்த இரண்டு சிறப்பு அஞ்சல்தலைகள், வெளியிடப்பட்ட நாளிலிருந்தே தமிழகத்திலும், கேரளத்திலும் கிடைக்கவில்லை. இன்னும் வரவில்லை என அஞ்சலக அதிகாரிகள் கூறுகின்றனர்' எனத் தெரிவித்தனர்.அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக மூப்பனாரின் அஞ்சல்தலைகள் அஞ்சலங்களில் விற்கப்படாமல் தடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், தமிழகம், கேரளம் தவிர மற்ற மாநிலங்களில் எளிதாகக் கிடைக்கிறது.மேலும், ஜி.கே. மூப்பனாரின் அஞ்சல்தலை வெளியீட்டுக்கு முன்பு, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் மறைந்த ஒய். ராஜசேகரரெட்டியின் சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.அந்த அஞ்சல்தலை ராஜசேகர ரெட்டியின் அழகான புகைப்படத்துடன், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மூப்பனாரின் அஞ்சல்தலையில் அவரது உருவப்படம் தெளிவில்லாமல் இருக்கிறது.எனவே, மூப்பனாரின் சிறப்பு அஞ்சல்தலையை இருட்டடிப்பு செய்வதற்காகத்தான் இதுபோல செய்யப்பட்டுள்ளது என்ற புகார்கள் எழுந்துள்ளன.இதுகுறித்து திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்புக் குழு உறுப்பினர் புலியூர் ஏ. நாகராஜன் கூறியது: "மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் நேசிக்கப்பட்டவர். எந்தப் பதவிக்கும் ஆசைப்படாதவர். பிரதமர் பதவியே தேடி வந்தபோது அதை நிராகரித்தவர். பல பிரதமர்களை உருவாக்கியவர். அவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு அஞ்சல்தலை வெளியிட்டது பாராட்டத்தக்கது. ஆனால், அந்த அஞ்சல்தலை மூப்பனாரின் சொந்த மாநிலமான தமிழகத்திலேயே கிடைக்காதது வருத்தமாக இருக்கிறது' என்றார் நாகராஜன்.எனவே, மத்திய அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு ஜி.கே. மூப்பனாரின் சிறப்பு அஞ்சல்தலைகள் தமிழகத்தில் உள்ள அஞ்சலகங்களில் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியினர், அஞ்சல்தலை சேகரிப்பாளர்களின் எதிர்பார்ப்பு.
Fa

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக