புதன், 24 நவம்பர், 2010

ஒழுக்கத்தின் மேன்மையை உணர்த்தியவர் சுரதா

பேராசிரியர் பேச்சு அருமையாக உள்ளது. ச.ம.உ. இரவிக்குமார் கூறுவதுபோல் நூல் வெளியிட்டுக் கொளகையை அரசு உருவாக்க வேண்டும். பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
ஒழுக்கத்தின் மேன்மையை உணர்த்தியவர் சுரதா: அன்பழகன் புகழாரம்
First Published : 24 Nov 2010 02:05:54 AM IST

சென்னை, நவ. 23: தன்னுடைய வாழ்க்கை, தான் படைத்த கவிதைகள் மூலம் ஒழுக்கத்தின் மேன்மையை உணர்த்தியவர் உவமைக் கவிஞர் சுரதா என்று நிதியமைச்சர் க. அன்பழகன் புகழாரம் சூட்டினார்.மறைந்த கவிஞர் சுரதாவின் 90-வது பிறந்த நாள் விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அவருடைய 28 நூல்கள், சுரதாவின் மகன் கல்லாடன் எழுதிய "கனவில் சாம்பல்', சுரதாவின் மருமகள் ராஜேஸ்வரி கல்லாடன் எழுதிய "மெüனமும் பேசும்' என்பன உள்ளிட்ட 30 நூல்கள் மணிவாசகர் பதிப்பகம் சார்பில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டன. விழாவுக்குத் தலைமையேற்று க.அன்பழகன் பேசியதாவது: சுரதாவை எனக்கு 47 ஆண்டுகளாகத் தெரியும். ஆனால் சுரதாவை பற்றிய நினைவுகளை அவரைப் போல உவமை காட்டி என்னால் பேச இயலாது. அந்தத் திறன் எனக்கு வாய்க்கவில்லை. நான் உணர்ந்த வகையில் சுரதா, ஒரு சுயசிந்தனையாளர். பாரதிதாசனிடம் பழகி அவர் கற்றுக்கொண்டவை ஏராளம் என்றாலும் தான் யாரையும் முன் உதாரணமாகக் கொள்ளவில்லை எனக் கூறியவர். அதன்படியே தனக்கென ஒரு புதிய பாணியை உருவாக்கி அதன் வழியில் தன் படைப்புகளை பரவவிட்டவர்.சுயமரியாதை கொண்டவராக,  பகுத்தறிவுவாதியாக, நாத்திகராகத் திகழ்ந்தவர். நாத்திகம், ஆத்திகம் இவை இரண்டையும் கடந்த நிலையில் மனித மாண்புகளைப் போற்றியவர். அவருடைய எழுத்துகளைப் படிக்கும்போது அன்பு, அறிவு ஆகியவற்றை விட அவர் ஒழுக்கத்தைத்தான் அதிகமாக நம்புவது தெரிகிறது. அதை தன்னுடைய வாழ்க்கையிலும் கடைப்பிடித்து ஒழுக்கத்தின் மேன்மையை உணர்த்தியவர். தமிழில் புதுக்கவிதையை அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் ஒருவர். அதே சமயம் புதுக்கவிதை எனப்படுவது எண்ணங்களின் வெளிப்பாடுதான். அது கவிதை அல்ல என்றும் கூறியவர். சுரதாவின் எண்ணங்களும் எழுத்துகளும் தமிழ் மொழியின் ஏற்றத்துக்குப் பயன்பட்டிருக்கின்றன. இன்னும் பயன்படும். தமிழ்ப்பற்று, இனப்பற்று, இலக்கியப்பற்று மிகுந்தவர்களுக்கு சுரதாவின் புத்தகங்கள் வரப்பிரசாதமாக அமையும். கவிஞர் வாலி: நான் ஓர் ஆத்திகன். சுரதா ஒரு நாத்திகர். ஆனால் இந்த ஆத்திகமும் நாத்திகமும் என்றைக்கும் எங்கள் நட்புக்குத் தடையாக இருந்ததில்லை. ஏனென்றால் ஒருவருடைய கருத்துச் சுதந்திரத்தில் மற்றவர் தலையிடுவதில்லை. சுரதா பரந்த மனம் படைத்தவர். எளிமையானவர். அவருடைய கவிதைகளில் இடம்பெறும் உவமைகள் உயர்ந்த கலைநயம் படைத்தவை. மரபு தெரிந்து புதுக்கவிதை இயற்றியவர். சுரதாவின் எழுத்துத் திறமைக்கு அவர் இன்னும் மிகப் பெரிய அளவில் வந்திருக்க வேண்டும் என்பதுதான் என் ஆதங்கம். உவமைக் கவிஞர் சுரதாவுக்கு உவமையே இல்லை.ரவிக்குமார் எம்.எல்.ஏ.: இன்றைய காலகட்டத்தில் சில தனியார் பதிப்பகங்கள்தான் தொடர்ந்து புத்தகங்களைப் பதிப்பித்து வெளியிட்டு வருகின்றன. பல சிறு பதிப்பகங்கள் பொருளாதாரச் சிக்கலால் நசிந்துவிட்டன. நல்ல புத்தகங்களைப் பதிப்பித்து வெளியிட, மாநில புத்தக ஆதரவுக் கொள்கை ஒன்றை தமிழக அரசு கொண்டு வர வேண்டும். இந்த புத்தக மேம்பாட்டுக் கொள்கை மூலம் ஏராளமான நல்லப் புத்தகங்களை வெளியிட உதவ வேண்டும் என ரவிகுமார் வேண்டுகோள் விடுத்தார். விழாவில் சீர்காழி கோ.சிவசிதம்பரம், கவிஞர் கலி.பூங்குன்றன், பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியன், குமரி அனந்தன், மணிவாசகர் பதிப்பக உரிமையாளர் ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம், சென்னை தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக