சனி, 27 நவம்பர், 2010

தொல்காப்பிய காலத்தை விஞ்ஞான அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்

தொல்காப்பியர் காலக் கல்வெட்டு எதுவும் இல்லை. மேலும், செம்மொழி மத்திய நிறுவனம்தான் கோவிலூர் மடத்துடன் இணைந்து (திசம்பர் ௨௬,௨௭,௨௮,௨௦௦௯) நடத்திய தொல்காப்பியர்  கால  ஆய்வுக்  கருத்தரங்கத்தில்   தமிழண்ணல் தலைமையில் கூடிய அறிஞர் குழு தொல்காப்பியர் காலம் கி.மு.௭ ஆம்  நூற்றாண்டு என அறிவித்தது. அதிகாரிகள் மாறும் பொழுதெல்லாம் ஆய்வு முடிவை மாற்ற வேண்டும்  என இயக்குநர் பொறுப்பு எண்ணுகிறாரா? அப்படியாயின்  அந்த ஆய்வு முடிவை  ஏற்கவில்லை எனத் தெரிவிக்கட்டும்.  அல்லது முந்தைய முடிவு எதுவும் தெரியாமல் பேசுகிறாரா?தே.தொ.நு.ஆ.ப.ஆ.(National Institute of Technical Teachers' Training and ரெசெஅர்ச்) நிறுவன இயக்குநரின் கூடுதல் பொறுப்பில் அவர் தமிழார்வலராக இருப்பினும் வைப்பது தவறு என்றாகிறது. தமிழறிஞர்களின் பொறுப்பில் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் விடப்பட்டால் இப்படித்தான்  நிகழும் என்று சொல்லாமல் ‌சொல்வதற்கு நன்றி. 
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

தொல்காப்பிய காலத்தை விஞ்ஞான அடிப்படையில் 
ஆய்வு மேற்கொள்ள வேண்டும்

First Published : 27 Nov 2010 01:21:25 PM IST


தஞ்சாவூர், நவ. 26:  தொல்காப்பியத்தின் காலத்தை கல்வெட்டு, செப்பேடுகளைக் கொண்டு விஞ்ஞான அடிப்படையில் ஆய்வு செய்து, அதன் காலத்துக்கு இறுதி விளக்கம் கொடுக்க வேண்டும் என்றார் சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநர் ச. மோகன்.தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக மொழிபெயர்ப்புத் துறை, சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆகியன சார்பில் தமிழ்க் காப்பிய, நீதி இலக்கிய மொழிபெயர்ப்புகள் சிக்கல்களும், தீர்வுகளும் என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசியக் கருத்தரங்க நிறைவு விழாவில் அவர் மேலும் பேசியது:மொழிபெயர்ப்பதும், அதன் அர்த்தங்களை சுவை குன்றாமல் கொண்டு வருவதும் மிகக் கடினமான பணி என்றாலும், அவசியம் செய்ய வேண்டிய பணியாகும். தமிழகத்தில் ஆராய்ச்சிக் கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு மிக அரிதாக உள்ளது. சங்க இலக்கியத்தில் நம்முடைய கருத்துச் செல்வங்கள், தொழில்நுட்பங்கள், வாணிபம் ஆகியவற்றுக்கு சரியான மொழிபெயர்ப்பு தேவை.   தமிழில் கற்பு என்ற சொல்லுக்கு உண்மையான மொழிபெயர்ப்பு இதுவரை செய்யவில்லை. இதையே ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளலாம். ராமாயணத்தை படிப்பவர்களின் மனநிலையைப் பொருத்து கருத்துகளில் வித்தியாசம் காணப்படும். ஆனால், அறிவியல் தொழில்நுட்பத்தை யார் படித்தாலும் ஒரே அர்த்தம்தான். மொழியைப் படிக்கும் போது சுவையோடு படிக்க வேண்டும். அதற்கு சுவை குன்றாமல் மொழிபெயர்க்க வேண்டும்.தமிழ்ச் சங்க இலக்கியங்களை மற்ற மொழியில் மொழிபெயர்ப்பது, பிற மொழிகளிலுள்ள சிறந்த படைப்புகளை தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பது, சுவடிகளைப் பாதுகாத்து அதிலுள்ள கருத்துகளை கணினியில் பதிவு செய்வது உள்ளிட்ட பணிகளில் தமிழகம் மட்டுமன்றி கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் உள்ள தமிழ்த் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.   தமிழ்மொழி செம்மொழித் தகுதி பெற்ற பிறகு வெளிநாடுகளில் உள்ள தமிழறிஞர்கள் மொழி வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். இலங்கைத் தமிழர்கள் நிறைய வெளியீடுகளை வெளியிட்டு தமிழ் மொழிக்குத் தொண்டாற்றி வருகின்றனர்.சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள 5 தினைகளின் கருப்பொருள், உரிப்பொருள்களை இன்றைய சூழலியல், சுற்றுச்சூழல் துறை கூறி வருகிறது. சங்க இலக்கியத்தில் ஆழமான கருத்துகளை, தொழில்நுட்பங்களை, செய்திகளை வெளிக் கொண்டு வர வேண்டும். தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தேவையானவற்றை செய்ய எவ்வளவு நிதியுதவி வேண்டுமானாலும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அளிக்கத் தயாராகவுள்ளது.தமிழ்ப் பல்கலைக்கழகத்திலிருந்து ஏராளமான திட்டங்கள் வர வேண்டும். முக்கிய ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும். மொழிபெயர்ப்புத் துறை நல்ல எதிர்காலத்தை கொடுக்குமெனில், இளைஞர்கள் இந்தத் துறையில் அதிகம் ஈடுபட வேண்டும் என்றார் மோகன்.விழாவுக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. ராசேந்திரன் தலைமை வகித்து பேசியது:மொழிபெயர்ப்பு என்பது மொழி மட்டுமன்றி உடல் சார்ந்ததாகவும் உள்ளது. வணக்கம் கூறுதல், அசைவுகளில், பதில் கூறுவதில்கூட மொழிபெயர்ப்பு இருக்கிறது. மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழி. சொல், பொருள் என்ன என்பதை அறிந்து பார்த்தால் பொருளை மொழியாக்குகிறோம் என்பதை உணர முடியும்.ஒரு மொழியில் உன்னதமாகக் கருதப்படும் இலக்கிய நயம், சொல்லாட்சி போன்றவை பிற மொழியில் மொழிபெயர்க்கும் போது அப்படியே கொண்டு வர வேண்டும். கடந்த காலங்களில் மொழிபெயர்ப்புகள் மதம், நீதி, காப்பியக் கதைக்கு, அரசியல் சார்பாக இருந்தது. தற்போது வியாபார ரீதியில் மொழிபெயர்ப்பு உள்ளது. மொழிபெயர்ப்பு இல்லாமல் உலகம் இல்லை என்ற நிலை உள்ளது.தமிழ்ப் பல்கலைக்கழக வலைதளம் மறுசீரமைக்கப்படுகிறது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் "கடலுக்குள் சென்ற பூம்புகார், தென்குமரி கண்டம் அகழாய்வு செய்யப்படும்' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.அதனடிப்படையில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்சி மன்றக் கூட்டத்தில் பூம்புகார், தென்குமரிக் கண்டம் ஆகியன குறித்து அகழாய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் நல்லத்தம்பி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அகழாய்வு மூலம் தமிழர்கள், தமிழின் தொன்மை தெரிய வரும் என்றார் ராசேந்திரன்.விழாவில் மொழிபெயர்ப்புத் துறைத் தலைவர் ச. ராதாகிருஷ்ணன், மொழிபெயர்ப்பாளர் அ. சச்சிதானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவர் சீ. வெங்கடேஷ் வரவேற்றார். சே. முரளி நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக