சனி, 14 ஆகஸ்ட், 2010

ஆங்கில மொழியாக்கம் செய்யப்படாததால் மக்களவையில் டி.ஆர்.பாலு ஆட்சேபம்


புதுதில்லி, ஆக. 13: அவையில் அமைச்சர் பதில் அளித்தபோது அது ஆங்கிலத்தில்  மொழியாக்கம் செய்யப்படாததால் திமுக எம்பி டி.ஆர்.பாலு ஆட்சேபம் தெரிவித்தார். அவருடன் அவரது கட்சியின் மற்ற உறுப்பினர்களும் சேர்ந்து அவரது கோரிக்கையை வலியுறுத்தவே அவையில் அமளி ஏற்பட்டு அவை 11.45 மணி வரை 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.ஆங்கில மொழியாக்கம் செய்ய முடியாதபடி சிக்கல் நேர்ந்ததால் அதற்காக மன்னிப்பு கோருவதாக அவைத் தலைவர் மீரா குமார் தெரிவித்தார்.மக்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது நாட்டில் உள்ள நீர்மின் உற்பத்தித் திட்டங்கள் பற்றி பாஜக உறுப்பினர் ஒருவர் இந்தியில் கேள்வி கேட்டார். இதற்கு எரிசக்தித்துறை இணை அமைச்சர் பரத்சிங் சோலங்கி இந்தியில் பதில் அளித்தார். அவரது பதில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. இதை டி.ஆர்.பாலு சுட்டிக்காட்டினார். இந்த பிரச்னை சரிசெய்யப்படும் என்று அவைத்தலைவர் மீரா குமார் தெரிவித்தபிறகும் பாலு சமாதானமடையவில்லை. ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கும்வரை அவை நடவடிக்கைகளை நிறுத்திவையுங்கள், இல்லையெனில் நாங்கள் அவையை புறக்கணிப்போம் என்று தெரிவித்த பாலு, அவையின் வழிநடைப் பகுதிக்கு சென்றார். அவருடன் சேர்ந்து அவரது கட்சியின் மற்ற உறுப்பினர்களும் சென்றனர். இந்நிலையில் பதிலை ஆங்கிலத்தில் சொல்ல தயார் என அமைச்சர் பரத்சிங் சோலங்கி முன் வந்தார். இதை பாஜக உறுப்பினர்கள் எதிர்த்தனர். பாஜக உறுப்பினர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் கேள்வி கேட்டது இந்தியில் என்பதால் பதிலும் இந்தியில்தான் இருக்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். தேசிய மொழியான இந்தியில் பதில் கொடுத்தால் அது அந்த மொழியை கெüரவப்படுத்துவதாகும் என்றார் ஹுகும் தேவ் நாராயண் யாதவ்.பாஜக உறுப்பினர்கள் இப்படி பேசிக்கொண்டே இருக்கவே கூச்சல் குழப்பம் அதிகமானதால் அவையை 15 நிமிடங்களுக்கு 11.45 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் மீரா குமார் உத்தரவிட்டார். அவை மீண்டும் கூடியதும் பேசிய மீராகுமார் ஆங்கில மொழியாக்கம் செய்ய முடியாத வகையில் சில குளறுபடி ஏற்பட்டுவிட்டது. அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆங்கில மொழியாக்கம் இல்லாததால் சில உறுப்பினர்கள் சங்கடம் அடைந்திருக்கலாம். பிரச்னை சரி செய்யப்பட்டுவிட்டது என்றார். எனினும் இந்தி மொழியையே பயன்படுத்தவேண்டும் என்று ரகுவம்ச பிரசாத் சிங் (ராஷ்ட்ரீய ஜனதா தளம்) கோஷம் எழுப்பினார். அவருடன் மற்ற உறுப்பினர்கள் சிலரும் சேர்ந்துகொண்டு சப்தம் போட்டனர். அப்போது தலையிட்ட நிதியமைச்சரும் அவை முன்னவருமான பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சராக இருந்தவர் தான் நீங்கள். அதை மறந்துவிடாதீர்கள், இருக்கையில் அமருங்கள் என சப்தம் போட்டார்.
கருத்துக்கள்

இந்தி மட்டும்தான் இந்தியாவின்தேசியமொழி என அறியாமையில் உழல்வோரை முதலில் நெறிப்படுத்துங்கள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By ilakkuvanar Thiruvalluvan
8/14/2010 3:26:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக