திங்கள், 9 ஆகஸ்ட், 2010

வாயைத் திறந்து பாடுவோம்!
First Published : 09 Aug 2010 12:00:00 AM IST


ஓரு வழியாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தியாகி விட்டது. கடைகளின் பெயர்களைத் தமிழில் (சில கடைகளிலாவது) எழுதியாகிவிட்டது. தமிழில் படித்தவருக்குப் படி எடுக்கும் அரசு வேலையும் வழங்கியாகிவிட்டது. தமிழில் பொறியியல் பட்டப் படிப்பும் வந்தாகிவிட்டது. இத்தோடு எல்லாம் முடிந்து விட்டதா? இல்லை. இன்னும் தமிழுக்கு, தமிழில் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உண்டுதான். ஆனால் அவற்றில் எல்லாம் முதன்மையாக, முக்கியமாகச் செய்ய வேண்டிய பணி ஒன்று உண்டு என்றால் அது "தமிழ்த்தாய் வாழ்த்து'ப் பாடலை எல்லோரையும், குறைந்தபட்சம் கல்வி அறிவு பெற்றவர்களையாவது வாயைத் திறந்து பாட வைப்பதுதான். பொது நிகழ்ச்சிகளில், அரசு நிகழ்ச்சிகளில், பள்ளி விழாக்களில் என தமிழ்த் தாயை வாழ்த்திப் பாட வேண்டிய தருணங்கள் நமக்கு ஏராளம் உண்டு. அந்தத் தருணங்களில் எல்லாம் நாம் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம்? ஒலி நாடாவை அல்லது குறுந்தகட்டை ஓடவிட்டுவிட்டு எல்லோரும் பிடித்து வைத்த சிலையாக நின்று கொண்டிருக்கிறோம். இது கல்லாதவர் சபையில் மட்டும் நடப்பது அல்ல. கற்றவர் சபையிலும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. விதிவிலக்காக ஒரு சில நிகழ்ச்சிகளில் மட்டும் நான்கைந்து பேர் மேடைக்கு வந்து பாடிவிட்டுச் செல்வர். தமிழ்த் தாயை எல்லோரும் வாயைத் திறந்து வாழ்த்திப் பாடலாமே. தமிழ்த் தாய்  வாழ்த்தின் முதல் அடியைக் கடந்து இரண்டாவது அடிக்குக்கூட நம்மில் பலரால் செல்ல முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. தமிழ் குறித்தும், அதன் பழமை குறித்தும், பெருமை குறித்தும், செம்மொழித் தகுதி குறித்தும் வாயாறப் புகழ்ந்து பேசி களைத்திருக்கும் இந்த வேளையில், தமிழ்த் தாயை வாழ்த்தி நம்மால் தொடர்ந்து நாலு வரி பாட இயலவில்லை என்பது வெட்கப்பட வேண்டிய விஷயமே. அதற்குக் காரணம் உண்டு. கடந்த 1972-க்கு முன்பு பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாயை வாழ்த்த விரும்பியோர் அவரவருக்குப் பிடித்த தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் ஒன்றை பாடி வந்தனர். அதுவும் அவரவருக்குப் பிடித்த இசை வடிவத்தில். அந்தக் குழப்பத்துக்கு முடிவு கட்டும் வகையில் 1973-ல் அப்போது முதல்வராக இருந்த தற்போதைய முதல்வர் கருணாநிதி, மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான "நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்' பாடலை அதிகாரப்பூர்வ பாடலாக அறிவித்து அதற்கான அங்கீகரிக்கப்பட்ட இசை வடிவத்தையும் வெளியிட்டார். அந்தப்  பாடலைத்தான் அரசு மற்றும் பொதுநிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாகப் பாட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. அந்த இசைத் தட்டு காலம் தொடங்கி, பின்னர் வந்த ஒலி நாடா காலம் போய் இப்போது குறுந்தகடு காலம் வரையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் "வேறு ஒருவரால்' பாடப்படுகிறது, நாம் காது குளிரக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அரசு நிகழ்ச்சிகளில், "தமிழ்த்தாய் வாழ்த்து' என்று அறிவித்த உடன் முக்கிய விருந்தினர்களும், பங்கேற்பாளர்களும் எழுந்து நின்ற பிறகுதான் ஒலிபெருக்கி ஊழியர் அந்தக் குறுந்தகட்டை அல்லது ஒலி நாடாவைத் தேடுவார். தேடிக் கண்டுபிடித்து அதை அதற்கான கருவிக்குள் நுழைத்த உடன் அதிர்ஷ்டம் இருந்தால் "தமிழ்த்தாய் வாழ்த்து' வரலாம். அல்லது வேறு ஏதேனும் ஒரு குத்தாட்டப் பாடலாகவும்கூட இருக்கலாம். சில சமயங்களில் தேசிய கீதத்தின் கடைசி வரி (பெரும்பாலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும், தேசிய கீதத்தையும் ஒரே குறுந்தகட்டில் பதிவு செய்து வைத்திருப்பார்கள்) ஒலித்து முடிந்து தமிழ்த்தாய் வாழ்த்து வரும். சில வேளைகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் இருந்து வரும். இடையில் விபரீதமான ஒலிகளும் வரும். இதெல்லாம்கூட பரவாயில்லை. சில வேளைகளில் தமிழ்த்தாயை வாழ்த்த அந்த ஒலிபெருக்கிக்கு மனது வராது போலும். சேஷ்டை செய்யும். இறுதியில் அங்கு இருப்பவர்களில் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க பங்கேற்பாளர்களே பாட வேண்டிய நிலை ஏற்படும். அப்போதுதான் இத்தனை நாளும் ஒலிபெருக்கியைப் பாட வைத்துவிட்டு நாம் கேட்டுக் கொண்டிருந்ததன் பலன் தெரியும். ஒரு சிலர் பாடுவர், சிலர் சிலையாக நின்று கொண்டிருப்பார்கள். இப்படியே 37 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒலி கேட்காத குழந்தைதான் ஊமையாகும். நாம் காது குளிர தமிழ்த்தாய் வாழ்த்தைக் கேட்டும் திரும்பப் பாடத் தெரியாத ஊமைகளாக இருக்கிறோம். சரி, இதுவரையில் அப்படி இருந்தாகி விட்டது. இனிமேலும் அப்படி இருந்தால் எப்படி? செம்மொழி கொண்டாட்டத்துக்குப் பொருள் வேண்டாமா? அன்று முறையற்ற ஒன்றை முறைப்படுத்த இசைத்தட்டு வடிவம் வந்தது. இத்தனை ஆண்டுகள் கழித்தும் நாம் அந்த முறையைப் பின்பற்றாமல் இன்னும் ஒலி நாடாவையும், குறுந்தகட்டையும் நம்பிக் கொண்டிருந்தால் எப்படி? பள்ளி, கல்லூரிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாணவ, மாணவிகள்தான் பாட வேண்டும். அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவிகளைக் கொண்டோ அல்லது பாடத் தெரிந்தவர்களைக் கொண்டோ பாடச் செய்ய வேண்டும். அதற்கு வழி இல்லை என்றால் குறுந்தகட்டின் உதவியுடன் ஒலி பெருக்கியின் ஒலியைக் குறைத்து வைத்து அதனோடு இணைந்து அனைவரும் சத்தமாக தமிழ்த் தாயை வாழ்த்திப் பாட வேண்டும். மழலைச் சொல் கேட்டு மகிழும் தாயைப் போல நாம் வாயைத் திறந்து பாடும் வாழ்த்தைக்  கேட்டால்தான் தமிழ்த்தாய் ஆனந்தம் அடைவாள்.
கருத்துக்கள்

தமிழ்த்தாயை வாழ்த்த மனம் இருக்கின்றதோ இல்லையோ வாழ்த்து நேரத்தில் அனைவரும வாய்விட்டுப்பாட வேண்டும் என்பதே சரியாகும். பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள் தம்முடைய தமிழ்க்காப்புக கழக நிகழ்ச்சிகளில் சுந்தரனாரின் நீராருங்கடலுடுத்த எனத் தொடங்கும் பாடலைத்தான் தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடச் செய்தார். அனைவரும் கூட்டத்தொடக்கத்தில் தமிழ்த்தாய்ப் பாடலாக இப்பாடலைப்பாட வேண்டும் என்று தமிழகப் புலவர் குழுவில் தீர்மானமும் கொண்டு வந்து நிறைவேற்றினார். அவரது கனவு கலைஞரின் அறிவிப்பால் நனவானது. இப்பொழுது இசக்கியின் வேண்டுகோளும் தினமணி மூலமாக நிறைவேறும் என எதிர்பார்ககலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/9/2010 4:18:00 AM
தமிழக சட்ட சபையில் கூட தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது கிடையாது வேறு என்ன சொல்ல இருக்குகிறது?
By NAGARAJAN
8/9/2010 1:35:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக