செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

பேரறிவாளன் மடல்...

பேரறிவாளன் மடல்...

''மரணத்தை வெல்வேன்!''

'தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்' என்ற புத்தகம் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன் என்கிற அறிவு இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார். நீதியரசர்கள் வி.ஆர்.கிருஷ்ணய்யர், எ.சுரேஷ், பத்திரிகையாளர் குல்தீப்நய்யார், அரசியல் தலைவர்கள் வைகோ, ராமதாஸ், நெடுமாறன் ஆகியோர் அணிந்துரை எழுதி இருக்கும் இந்தப் புத்தகம் தமிழக அரசியல் தளத்தில் பலத்த அதிர்வுகளைக் கிளப்பி இருக்கிறது.
பேரறிவாளன் எழுதியிருக்கும் திறந்த மடலின் சில பகுதிகள் இங்கே...

''மதிப்பிற்குரிய அம்மா/அய்யா!
வணக்கம்!

நான், அ.ஞா.பேரறிவாளன். ராஜீவ் கொலை வழக்கில் பொய்யாகப் பிணைக்கப்பட்டு மரண தண்டனைச் சிறைவாசியாக அடைக்கப்பட்டுக் கிடப்பவன். எனது கருணை மனு மேதகு குடியரசுத் தலைவர் அவர்களின் மேலான பரிசீலனையில் இருப்பதால் உயிர்வாழ அனுமதிக்கப்பட்டுள்ளவன். 19 வயதில் அடைக்கப்பட்ட நான், 34 வயது நிரம்பிவிட்ட நிலையில், கடந்த 14 ஆண்டுகளைத் தனிமைச் சிறையின் மன இறுக்கத்திலும், துன்பப் பொருமல்களிலும் காலம் கரைப்பவன். வயதின் முதிர்ச்சியும் உயிர்க்காப்புப் போரின் அயர்ச்சியும் தந்துவிட்ட மாறாத தழும்புகள் சுமந்து திரியும் பெற்றோரின் ஒரே புதல்வன் நான். துன்பம் சூழ்ந்த தீவில் நிற்பினும் நான் நம்பிக்கை இழக்கவில்லை. தங்களைப் போன்ற மனித நேய உள்ளங்களின் துணையிருப்பதால், மரணத்தை வெல்வேன் என்ற நம்பிக்கை உண்டு.
எமது வழக்கின் முன்னாள் தலைமைப் புலனாய்வு அதிகாரி யாகவும், பல்நோக்குக் கண்காணிப்புக் குழுவின் (MDMA) அதிகாரி யாகவும் அங்கம் வகித்து 2005 மார்ச் திங்களில் ஓய்வு பெற்றவரான திரு.இரகோத்தமன் அவர்கள் இக்கொலை தொடர்பாக, 'குறுந்தகடு' (CD) ஒன்றை வெளியிட்டு, அது தொடர்பாக ஏடுகளுக்கு ஒரு பேட்டி வழங்கியுள்ளார். 31-7-2005 தேதியிட்ட 'ஜூனியர் விகடன்' வாரமிருமுறை இதழின் பேட்டியில் இறுதிக் கேள்வியும் அவரின் பதிலும்:
'ராஜீவ் கொலை வழக்கில் கண்டுபிடிக்க முடியாத விஷயம் ஏதாவது உண்டா?'
'ஒரே ஒரு விஷயம் இருக்கிறது... தனு தனது இடுப்பில் கட்டி இருந்த வெடிகுண்டு 'பெல்ட்'டைச் செய்து கொடுத்த நபர் யார்? என்கிற விஷயம்தான்!'
- ஆம். இதுவரை வெளிவராத, கண்டுபிடிக்கவே முடியாமல் உள்ள பல்நோக்குக் கண்காணிப்புக் குழு விசாரணைக்கான கருப் பொருளாக உள்ள இந்த வெடிகுண்டு பற்றிய ரகசியத்தோடுதான், எனது வாழ்வும் கல்வியும் பொய்யாகப் பிணைக்கப்பட்டு என்னைத் தூக்குக் கயிற்றில் நிறுத்தி இருக்கிறது.
எந்த வெடிகுண்டு பற்றி இதுவரை கண்டுபிடிக்கவே முடிய வில்லை என்று முதன்மைப் புலனாய்வு அதிகாரி இன்று சொல் கிறாரோ... அந்த வெடிகுண்டைச் செய்ததே நான்தான் என்பதாக என்மீது பொய்யான பிரசாரத்தை இதே மத்தியப் புலனாய்வுத் துறையினர்தான் 1991-ம் ஆண்டு நான் கைது செய்யப்பட்டபோது ஏடுகள் வாயிலாகப் பரப்பினர்.
என்னை விசாரணைக்கென அழைத்துச் சென்ற முதல் நாளே சிறப்புப் புலனாய்வுத் துறையின் (SIT) அலுவலகம் அமைந்திருந்த 'மல்லிகை' கட்டடத்தின் முதல் மாடியில் இருந்த டி.ஐ.ஜி. (DIG) ராஜு அவர்கள் முன்பு நிறுத்தப்பட்டபோது, அவர் எனது படிப்பு பற்றி விசாரிக்கிறார். நான் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பட்டயப்படிப்பு (DECE)படித்தவன் என்றபோது, 'நீதான் குண்டு தயாரித்துத் தந்தவனா?' - என்று கேட்டார்.
எனது பெற்றோர், கல்வி ஒன்றே பெரும் சொத்து எனக் கருதி என்னைப் படிக்க வைத்தனர். எனது பெற்றோரின் உழைப்பாலும், எனது உழைப்பாலும் நான் பெற்ற கல்வி எனக்கும் என் குடும்பத்தாருக்கும் பயன்பட்டதோ இல்லையோ... புலனாய்வுத் துறையினர்க்கு இவ் வழக்கில் என்னைப் பொய்யாகப் பிணைத்துத் தூக்கு மேடையில் நிறுத்தப் பயன்பட்டது.
அவ்வாறு 'குண்டு நிபுணராக' முதலில் சித்திரிக்கப் பயன்படுத்தப் பட்ட எனது கல்வி இறுதியில் பெட்டிக் கடையிலும் மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் அன்றாட வாழ்வில் பயன்படும் 9 வோல்ட் மின்கலம் (பேட்டரி செல்) வாங்கித் தந்தேன் என்பதான குற்றச்சாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டது. சிவராஜன், எல்.டி.டி.ஈ.-யின் சீனியர் அங்கத்தினர் என்பதால்தான் அவருக்கு நான் மின்கலம், கார் மின்கலம், மோட்டார் சைக்கிள் வாங்கித் தந்ததாகக் கூறுவதே பொருத்தம். ஆனால், ராஜீவ் கொலைச் சதிக்கு ஒப்புக் கொண்டதாகக் கூறமுடியாது. சதியின் நோக்கத்துக்கு உடன்பட்டால்தான் இந்திய தண்டனை சட்டம் எ.120-ன்படி குற்றவாளியாக முடியும்.
எனது வாக்குமூலத்தை முழுமையாக வாசித்தீர் களேயானால், அவ்வாறு கொலைச் சதிக்கு ஒப்புக் கொண்டதாக, உதவுவதாக எந்தவொரு சிறு சொல்லை யேனும் தங்களால் காண முடியுமா?
எனக்கு தனு, சுபா ஆகியோருடன் அறிமுகம் இருந்ததாக எவ்வித ஆதாரங்களும் கிடையாது. சிவராசனுடன் மட்டுமே தொடர்பு இருந்ததற்கு ஆதாரங்கள் காட்டப்படுகின்றன. எனவே சிவராசன் மட்டுமே எனக்குக் கொலைச் சதி குறித்துக் கூறியிருக்க வேண்டும். எனது ஒப்புதல் வாக்குமூலத்தில் அதற்கான எவ்விதக் குறிப்பும் காணப்படவில்லை என்பதுடன், சிவராசனுடன் எந்த உரையாடலிலும் நான் பங்கு பெறவில்லை என்பதையே காட்டுகிறது.
ராஜீவ் படுகொலையில் சதிகாரர்களை நான்கு பரந்த வகையினங்களாகக் கூறு பிரிக்கலாம். முதலாவதாக ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்ய முடிவெடுத்த உறுதியான கரு மையமாக அமைந்திருப்பவர்கள். இரண்டாவதாக, சதி வளையத்தில் சேர்ந்து கொள்ளும் படி மற்றவர்களைத் தூண்டி, சதியில் தீவிரப் பங்கும், மேற்பார்வைப் பங்கும் வகித்தவர்கள். மூன்றாவதாக, கருத்தாக்கத்தின் வாயிலாகவோ, வேறு வழியிலோ தூண்டப்பட்டு சதியில் சேர்ந்தவர்கள். நான்காவது, உள்ள படியே கொலை செய்வதில் பங்கேற்ற சதிகாரர்கள்.
இக்கொலைச் சதியில் வேறு எவரையும் ஈடுபடுத்தி யதாக எந்த ஆதாரமோ குற்றச்சாட்டோ என்மீது கிடையாது. இக்கொலைச் சதியில் மேற்பார்வைப் பணி மேற்கொண்டதாகவோ, என்மீது எவ்விதக் குற்றச்சாட்டும் கிடையாது. என் மீதான குற்றச் சாட்டெல்லாம், சிவராசன் கேட்ட பொருள்களை நான் வாங்கிக் கொடுத்தேன் என்பது மட்டுமே. இந்நிலையில் எவ்வாறு என்னை நீதியரசர் தாமஸ் இரண்டாவது பிரிவில் இணைத்துத் தூக்குத் தண்டனை வழங்கினார்?
'உண்மை' அரசின் வழக்குக்கு முற்றிலும் புறம்பானதாகவும், கசப்பு மிகுந்ததாகவும் இருப்பினும் அதை நிரூபிக்கும் ஆற்றல், வசதி இந்த எளியவனுக்குக் கிடையாது. 'கடவுள் தந்த உயிரைப் பறிக்கும் உரிமை மனிதனுக்கு இல்லை; உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது' என்று மனிதநேயத்தின் உச்சத்தில் நின்று காந்தியடிகள் சொன்னவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதால், நான் எனது தண்டனை மாற்றத்தைக் கோரவில்லை. இன்றைய எனது சூழலில் மனித நேயம் குறித்து நான் பேசுவது உள்நோக்கத்தோடு பார்க்கப்படும் என்பதால் தவிர்க்கிறேன்.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்ட பின் நிரபராதி எனத் தெரியவந்த எத்தனையோ நீதியியல் தவறுகளை நாம் கண்டுவருகிறோம். தமிழகத்தில் பாண்டியம்மாள் கொலை வழக்கை எவரும் மறந்திருக்க முடியாது. கொலை செய்துவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த கணவன் கூண்டில் நிற்க, கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட பாண்டியம்மாள் நீதிமன்றத்தில் தோன்றிய காட்சியை நாடு இன்னும் மறந்துவிடவில்லை.
இறுதியில் வள்ளுவனின் உலகப் பொதுமறை ஒன்றோடு என் முறையீட்டை நிறைவு செய்கிறேன்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.
தங்கள் உண்மையுள்ள...
பேரறிவாளன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக