திங்கள், 9 ஆகஸ்ட், 2010

மருத்துவரின் கவனக்குறைவுக்கு மருத்துவமனையைத் தண்டிக்க முடியாது


புது தில்லி, ஆக. 8: மருத்துவரின் கவனக்குறைவால் ஒரு நோயாளிக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டாலோ அல்லது மரணம் ஏற்பட்டாலோ அதற்கு அவர் வேலை பார்க்கும் மருத்துவமனை நிர்வாகத்தை தண்டிக்க முடியாது என்று தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2007-ம் ஆண்டு தில்லியில் உள்ள இந்திரப்பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இதய நோயாளி ஒருவர் அறுவை சிகிச்சைக்கு பின் சில மாதங்களில் இறந்தார். மருத்துவர்களின் கவனக்குறைவால் அவருக்கு முறையாக அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை என்றும் அதனால்தான் அவர் இறந்து விட்டார் என்றும் நோயாளியின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.இதற்கு மருத்துவமனை நிர்வாகம்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி இறந்தவரின் உறவினர்கள் தில்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம்,இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் மருத்துவமனை நிர்வாகம் மேல் முறையீடு செய்தது. "அறுவைச் சிகிச்சைக்கு பின் நோயாளி சில மாதங்கள் உயிருடன் இருந்துள்ளார். அதன் பின்னர் அவரது வீட்டில் இயற்கையாக மரணம் அடைந்துள்ளார். இதற்கு எந்த விதத்திலும் மருத்துவமனை நிர்வாகம் பொறுப்பேற்க முடியாது' என்று நிர்வாகத்தின் தரப்பில் வாதிடப்பட்டது.ஆனால் சிகிச்சை அளித்த 3 மருத்துவர்களின் கவனக்குறைவான சிகிச்சையால்தான் நோயாளி இறந்தார் என்றும் இதற்கு நிர்வாகம்தான் பொறுப்பு என்றும் உறவினர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் விவரம்:  "மருத்துவர்கள் தனிப்பட்ட முறையில் கவனக்குறைவாக நடந்து கொண்டு அதன் காரணமாக ஒரு நோயாளி இறந்தால் அதற்கு அவர் வேலை பார்க்கும் மருத்துவமனையை தண்டிக்க முடியாது. ஆனால் மருத்துவமனை சரியான முறையில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் அதன் காரணமாக நோயாளி இறந்தால் அதற்கு மருத்துவமனைதான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.  அதே சமயம் மருத்துவர்கள் அல்லாத மருத்துவப் பணியாளர்களின் கவனக்குறைவால் ஒரு நோயாளி மரணம் அடைந்தால் அதற்கு மருத்துவமனை, மருத்துவர் ஆகிய இருவருமே பொறுப்பாக மாட்டார்கள்.மருத்துவர்தான் ஒரு நோயாளியை பரிசோதித்து மருந்துகளை பரிந்துரை செய்கிறார். அறுவைச் சிகிச்சை செய்வதும் மருத்துவரின் பணிதான். எனவே மருத்துவரின் கவனக்குறைவால் மரணம் ஏற்பட்டால் அதற்கு மருத்துவமனைதான் பொறுப்பேற்க வேண்டும் என்ற வாதத்தையும் அந்த மருத்துவமனையின் மீது நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

என்ன தீர்ப்போ! மண்ணாங்கட்டி! மருத்துவரின் திறமையால் பெயர் பெறுவதும் விளம்பரம் பெறுவதும் பண அறுவடைசெய்வதும் மருத்துவமனைதானே! மருத்துவரின் திறமையின்மையால் ஏற்படும் இழப்புகளுக்கும் அதுதானே பொறுப்பேற்க வேண்டும். அதுதானே முறை. பொறுப்பேற்க வேண்டிய மருத்துவமனை உரிய தொகையை உரிய மருத்துவரிடம இருந்து பெறத் தடையில்லையே! எனவே, மருத்துவமனையை நம்பி வந்த நோயாளியின் இறப்பிற்கு மருத்துவமனையே பொறுப்பு! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.
By Ilakkuvanar Thiruvalluvan
8/9/2010 3:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக