
ஒரு பேச்சுக்கு யோசித்துப் பார்ப்போம். ஈழத்தமிழர் பிரச்னையில் மத்திய அரசின் முடிவுக்கும், கண்ணோட்டத்துக்கும் எதிரான நிலைப்பாட்டை, தமிழக அரசும், கூட்டணிக் கட்சியான திமுகவும் எடுத்திருந்தால், வெளிப்படையாக ராஜபட்ச அரசைக் கண்டித்துப் போராடவும், விடுதலைப் புலிகளுக்குச் சாதகமாகச் செயல்படவும் முனைந்திருந்தால் மத்திய அரசு அதை மௌனம் காத்து ஜீரணித்திருக்குமா? மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு இருக்கும் துணிவு தமிழக முதல்வர் கருணாநிதிக்கு இல்லாமல் போய்விட்டது என்பதா? இல்லை, தமிழகத்தில் திமுகவைத் தட்டிக் கேட்கத் தைரியமுள்ள மத்திய அரசுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியையும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியையும் பகைத்துக் கொள்ளும் துணிவு இல்லை என்பதா?மத்திய அரசால் பயங்கரவாதக் கும்பல் என்று வர்ணிக்கப்பட்டு, ராணுவத்தின் மூலம் அடக்க மாநில அரசுக்கு ஒத்துழைப்பும் தரப்படும் மாவோயிஸ்ட்டுகளுடன், ஒரு மத்திய அமைச்சர் தொடர்பு வைத்துக் கொள்கிறார். பிரதமரால், இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் என்று வர்ணிக்கப்பட்ட அதே மாவோயிஸ்ட்டுகளின் துணையோடு ஒரு மிகப்பெரிய பேரணியை மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி மேற்கு வங்கம் லால்கரில் கூட்டுகிறார். மத்திய அரசும் பிரதமரும் மௌனமாக வேடிக்கை பார்க்கிறார்கள். "லால்கர் சலோ' என்கிற கோஷத்துடன் மாபெரும் பேரணியைத் தனது கட்சியின் சார்பில் கூட்டாமல், "மாவோயிஸ்ட்' தீவிரவாதிகளின்மீது அரசு இயந்திரம் மனிதாபிமானமற்ற முறையில் முடுக்கி விடப்பட்டிருப்பதை எதிர்க்கும் அறிவுஜீவிகளின் பெயரில் கூட்டினார் மம்தா பானர்ஜி. அந்தப் பேரணியில் பேசியவர்கள் யாருமே மாவோயிஸ்ட்டுகள் பற்றியோ, தீவிரவாதத்தைக் கைவிடுவது பற்றியோ, சமாதானம் ஏற்பட வழிகோலுவது பற்றியோ பேசினார்களா என்றால் இல்லை. எல்லோருடைய அறைகூவலும், மாவோயிஸ்ட்டுகளை அகற்றுவது பற்றியல்ல, மேற்கு வங்க ஆட்சியிலிருந்து மார்க்சிஸ்ட்டுகளை அகற்றுவது பற்றி மட்டுமே இருந்ததுதான் குறிப்பிடத்தக்க விஷயம்.மம்தா பானர்ஜியின் பேரணியின் வெற்றிக்குப் பாடுபட்டவர்கள் யார் தெரியுமா? மத்திய உள்துறை அமைச்சரால் மாவோயிஸ்ட்டுகளின் முகமூடிகள் என்று வர்ணிக்கப்பட்ட "காவல்துறை அடக்குமுறைக்கு எதிரான மக்கள் குழு' என்கிற அமைப்பினர். தலைமறைவாக இருக்கும் மாவோயிஸ்ட் தலைவர்களான கிஷண்ஜி, மனோஜ் மஹாதோ போன்றவர்கள், மம்தா பானர்ஜியின் லால்கர் பேரணியை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று அறைகூவலே விடுத்திருந்தனர்.பல தலைமறைவு மாவோயிஸ்ட் தலைவர்கள் அந்தப் பேரணியில் காணப்பட்டனர் என்று தெரிகிறது. ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தின் பின்னணியில் செயல்பட்டதாகக் கூறப்படும் ஆஷிஷ் மஹாதோ அந்தப் பேரணியில் கலந்து கொண்டிருக்கிறார் என்று காவல்துறை தகவல் அனுப்பி இருக்கிறது. மத்திய, மாநில அரசுக்கு எதிராகவும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மதிக்காமலும் நடந்து கொள்ளும் அமைப்புகளின் ஆதரவில், மத்திய அமைச்சர் ஒருவர் பேரணி நடத்துகிறார். அதைப் பிரதமரும், மத்திய அரசும் வேடிக்கை பார்க்கிறது.பேரணியில் மத்திய ரயில்வே அமைச்சரின் கொள்கை முழக்கங்களைக் கேட்டால், மெய்சிலிர்க்கிறது. ஆந்திரப் பிரதேச அடிலாபாத் பகுதியில் சமீபத்தில் காவல்துறையினருடனான துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்தார், மாவோயிஸ்ட்டுகளின் செய்தியாளரான செருக்குரி ராஜ்குமார் என்கிற ஆசாத். இவரைக் காவல்துறையினர் கொன்றது தவறு என்று முழங்கி இருக்கிறார் மம்தா பானர்ஜி. ஒரு மத்திய அமைச்சர் அரசின் நடவடிக்கையைப் பகிரங்கமாக விமர்சிக்கலாமா என்று கேட்கக் கூடாது. ஏனென்றால், மம்தா பானர்ஜியைத் தட்டிக் கேட்கும் துணிவு மத்திய அரசுக்குத்தான் கிடையாதே! "ஆப்பரேஷன் கிரீன்ஹன்ட்' என்பது, மத்திய, மாநில காவல்படைகளால், மேற்கு வங்கத்தில் லால்கர் பகுதியில் மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக நடத்தப்படும் தேடுதல் வேட்டைக்குப் பெயர். இந்த "ஆப்பரேஷன் கிரீன்ஹன்ட்' நிறுத்தப்படும் என்கிற கொள்கைமுடிவை அந்தப் பேரணியில் அறிவித்திருக்கிறார் மம்தா பானர்ஜி. பிரதமரோ, உள்துறை அமைச்சரோ, முதலமைச்சரோ அறிவிக்க வேண்டிய இதுபோன்ற கொள்கை முடிவை, மத்திய அமைச்சரவைகூடி எடுக்க வேண்டிய முடிவை, ரயில்வே அமைச்சரும், கூட்டணிக் கட்சியின் தலைவியும் எப்படி அறிவிக்கலாம் என்று அசட்டுத்தனமாகக் கேள்வி எழுப்பக் கூடாது. காரணம், மம்தா பானர்ஜியைத் தட்டிக் கேட்கும் துணிவு பிரதமருக்கோ, காங்கிரஸ் கட்சிக்கோ கிடையாதே!மாவோயிஸ்ட்டுகளுடன் சமரசம் பேசி அவர்களை வன்முறையைக் கைவிட்டுப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதுதான் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியின் நோக்கம் என்றேகூட வைத்துக் கொள்வோம். அப்படியானால் என்ன செய்திருக்க வேண்டும்? மத்திய அமைச்சரவையில் விவாதித்து, அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம், பிரதமருடனும், உள்துறை அமைச்சருடனும் கலந்தாலோசித்து, அவர்களது அனுமதியுடன் பேரணியில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.தன்னிச்சையாக, அறிவிப்புகளைச் செய்ய மம்தா பானர்ஜி யார் என்று கேட்காதீர்கள். அவர் 19 மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட கூட்டணிக் கட்சித் தலைவி! அது போதாதா?எல்லாவற்றையும்விட வேடிக்கை என்ன தெரியுமா? தனது கூட்டணிக் கட்சியான காங்கிரûஸப் பேரணிக்கு அழைத்திருக்க வேண்டாமா? பெயருக்காவது, மேற்கு வங்க காங்கிரஸ் கமிட்டித் தலைவரையாவது கூப்பிட்டிருக்க வேண்டாமா? மாவோயிஸ்ட்டுகளே அவர் பின்னால் இருக்கும்போது மம்தா பானர்ஜி ஏன் காங்கிரஸ் கட்சியைப் பற்றியோ, மத்திய அரசைப் பற்றியோ, அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு பற்றியோ கவலைப்படப் போகிறார்?மேற்கு வங்கத்தில் ஆளும் இடதுசாரிக் கூட்டணி ஆட்சி எல்லா வகையிலும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிரான ஆட்சி என்பதை மறுக்கவில்லை. ஆனால், அதற்கு மாற்றாக அமைய இருப்பது மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் தலைமையிலான மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் கூட்டணியாக இருக்கப் போகிறதே என்னும்போது அச்சமும் பீதியுமாக இருக்கிறது!மேற்கு வங்கத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறதோ இல்லையோ, மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கூட்டுப் பொறுப்பு நகைப்புக்கிடமாகி இருக்கிறது. பாவம், பிரதமர்!
கருத்துக்கள்


By Ilakkuvanar Thiruvalluvan
8/11/2010 4:20:00 AM
8/11/2010 4:20:00 AM


By BAALAA
8/11/2010 4:03:00 AM
8/11/2010 4:03:00 AM


By கரிகால்சோழன்
8/11/2010 2:58:00 AM
8/11/2010 2:58:00 AM


By கரிகால்சோழன்
8/11/2010 2:53:00 AM
8/11/2010 2:53:00 AM


By Rafeei,Madina Munawara
8/11/2010 2:06:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 8/11/2010 2:06:00 AM