64-வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றுகிறார் முதல்வர் கருணாநிதி. தமிழகம் முழுவதும் குடிசை வீடுகளு
சென்னை, ஆக.15: குடிசை வீடுகளுக்குப் பதிலாக கான்கிரீட் வீடு கட்டுவதற்கான மானியம் |60 ஆயிரத்திலிருந்து |75 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.குடிசை வீடுகளை மாற்றி கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தை தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவித்தது. 64-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றிய பிறகு, கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.இந்தத் திட்டத்தின் கீழ் 31 பேருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளையும் வழங்கினார். தமிழ்நாட்டின் 31 மாவட்டங்களிலிருந்தும் தலா ஒருவர் இதற்காக அங்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.புதிய திட்டம் தொடர்பாக சுதந்திர தின விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியது:தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் உள்ள 21 லட்சம் குடிசை வீடுகளை, 6 ஆண்டுகளில் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படுகிறது.குடிசை வீடுகளே தமிழகத்தில் இல்லை எனும் வரலாற்றைப் படைக்க உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 3 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற |1,800 கோடியைத் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள 3 லட்சம் பயனாளிகளுக்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கப்படுகின்றன.இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் ஒவ்வொரு கான்கிரீட் வீட்டிற்கும் அரசின் சார்பில் |60 ஆயிரம் வழங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கோரிக்கையை ஏற்று ஒவ்வொரு வீட்டுக்கும் |15 ஆயிரம் கூடுதலாக வழங்கிட அரசு முடிவு செய்துள்ளது. கான்கிரீட் வீடு ஒன்றுக்கு |75 ஆயிரம் வீதம் மானியம் வழங்கப்படும்.ஓட்டைக் குடிசையிலே, கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் வாடிக்கிடந்த மக்களின் வாழ்வில் விடிவு அளிக்கும் இந்தத் திட்டத்தை தொடங்கி வைப்பதில் உள்ளம் எல்லாம் இன்ப வெள்ளம் நிறைந்தது போன்ற உணர்வைப் பெறுகிறேன்.ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒருவர் வீதம் 31 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு, இந்த மகத்தான திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது என்ற செய்தியை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
கருத்துக்கள்
குடிசை இல்லாக் குவலயத்தை அமைக்க எண்ணுவதற்குப் பாராட்டுகள்! ஊழலில்லாத் திட்டமாகச் செயற்படுத்த வாழ்த்துகள்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
8/16/2010 7:27:00 AM
8/16/2010 7:27:00 AM