வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

ஸ்.எம். கிருஷ்ணாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு பழ.நெடுமாறன் கோரிக்கை


சென்னை, ஆக. 12: கடலில் எல்லை தாண்டும் மீனவர்களைப் பாதுகாக்க முடியாது என்று நாடாளுமன்றத்தில் அறிவித்த வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.÷இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:இலங்கை கடற்பகுதிக்குள் எல்லை மீறி நுழையும் தமிழக மீனவர்களைப் பாதுகாக்க முடியாது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா நாடாளுமன்றத்திலேயே அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.÷உலகெங்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் அவர்களை அறியாமல் எல்லைத் தாண்டிச் செல்வதுண்டு. ஆனால் அவர்களையெல்லாம் யாரும் சுட்டுக்கொல்வதில்லை. குஜராத் மாநில மீனவர்கள் பாகிஸ்தான் கடலில் நுழைந்து விட்டால் அவர்கள் சுடப்படுவதில்லை. மாறாக பாகிஸ்தான் கடற்படை அவர்களைக் கைது செய்து சிறையில் வைக்கிறது. மேற்கு வங்க மீனவர்கள் வங்க எல்லைக்குள் புகுந்துவிட்டால் அவர்களை வங்க தேச கடற்படை கைது செய்கிறதே தவிர சுடுவதில்லை. ஏன் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை இதுவரை சுட்டதில்லை.÷1983-லிருந்து இதுவரை 27 ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 500 பேருக்கு மேல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மீனவர்கள் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். பல நூறு கோடி ரூபாய் பெறுமான மீனவர்களின் படகுகளும் வலைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நமது கடல் எல்லைக்குள்ளாகவே இவ்வளவும் நடைபெறுகிறது. ராமேசுவரத்திற்கு அருகேயுள்ள வாழைக்குடா என்ற தமிழகச் சிற்றூரில் சிங்களக் கடற்படை வந்திறங்கி அங்குள்ள மீனவர்களை சுட்டும் அவர்களின் குடிசைகளைக் கொளுத்தியும் அட்டூழியம் செய்துவிட்டுத் திரும்பியுள்ளது. இந்தியக் கடற்படை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.÷இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட நமது மீனவர்களுக்குச் சர்வதேச சட்டங்களின்படி இழப்பீடு பெற்றுத்தர மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.எஸ்.எம். கிருஷ்ணா ராஜபட்சவின் குரலில் பேசுகிறார். இவரைப் போன்றவர்கள் வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும்வரை தமிழக மீனவர்களுக்கு மட்டுமல்ல, இந்திய குடிமக்களுக்கே எத்தகையப் பாதுகாப்பும் ஒருபோதும் இருக்காது.÷சொந்த நாட்டு மக்களைப் பாதுகாக்க முடியாது எனப் பகிரங்கமாக அறிவித்துள்ள எஸ்.எம். கிருஷ்ணா அந்த பொறுப்பிலிருந்து உடனடியாக விலகவேண்டும் அல்லது அவரை பிரதமர் விலக்க வேண்டும் என்று பழ. நெடுமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துக்கள்

காங்கிரசு அரசின் கொள்கையைத்தான் கிருட்டிணா தெரிவித்தார். மன்மோகன்சிங்கின் கோட்பாட்டைத்தான் அவர் அறிவித்தார். சோனியாவின் இலட்சியத்தைத்தான் அவர் வெளிப்படுத்தினார். எனவே, அவருக்கு வெகுமதிகள் காத்துள்ளன. அவரை நீக்குமாறு சொல்வது நமது அறியாமையைத்தான் காட்டும். எங்களுக்கு ஆரியனையும் சிங்களனையும்தான் தெரியும். தமிழனைத் தெரியாது என அடம்பிடிக்கும் காங்கிரசை ஆட்சியில் இருந்து அகற்றப் போராட வேண்டும். கூட்டணி அமையாமல் வெளியேற்றப்படும் சூழலில் வெளியேறுவதுபோல் நாடகம் ஆடாமல் மத்திய அரசில் இருந்து வெளியேறுமாறு தி.மு.க. வை வலியுறுத்த வேண்டும்.தமிழர்க்குஎதிரான காங்கிரசைத் தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல் இந்தியாவில் இருந்தே விரட்டப் போராட வேண்டும். பிற அறிக்கைகளில் என்ன பயன்? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/13/2010 4:41:00 AM
பாகிஸ்தானில் கேவலப்பட்டு வந்த கிருஷ்ணாவை அப்போதே பதவி நீக்கம் செய்து இருக்கவேண்டும். அதை விட தேசிய அவமானம் இருக்க முடியாது. இப்போ, தன் நாட்டு மக்களையே பாதுகாக்க முடியாதுன்னு தைரியமாய் நாடாளுமன்றத்திலேயே சொல்றாரு, நம்ம ஊரு 40 எம்பிக்களும் வாயிலே விரலை சூப்பிக்கிட்டு கேட்டுட்டு வந்திருக்கானுங்க. இலங்கை அரசாங்கம் கூட இவ்வளவு தைரியமா, "தமிழன் எல்லை தாண்டி வந்தால் சுடுவேன்"னு சொன்னதில்லை. இந்த ஆளு தமிழனுக்கு நல்லதுதான் செய்ய மாட்டான்னு நினைச்சேன், இவன் ராஜபக்சேவை விட கொடுங்கோலனா இருக்கான். மதுரைக்காரன்.
By மதுரைக்காரன்.
8/13/2010 4:25:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக