சென்னை, ஆக.13: தமிழக அரசு தனியாக ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்த முன்வர வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார். இதுதொடர்பாக, அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தலாம் என மத்திய அமைச்சர்கள் குழுமுடிவு எடுத்துள்ளதாக செய்தி வந்தபோது அதனை வரவேற்றோம். தொடர்ந்து வரும் செய்திகளைப் பார்த்தால், "கணக்கெடுப்பு நடப்பது போல வெளியே தெரிய வேண்டும்; ஆனால், அது நடந்து முடிந்துவிடக் கூடாது' என்ற மறைமுகத் திட்டம் ஒளிந்திருக்கிறது என்று தெரிகிறது. இதுவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிரான உயர் சாதிக்காரர்களின் மற்றுமொரு சதி என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசு மேற்கொள்ள இருக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்பு பயனுள்ளதாக இருக்கும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள பொறுப்பை தட்டிக்கழிப்பது போல் உள்ளது. சமூகநீதி ஆர்வலர்கள் அனைவருக்கும் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பு எப்போது, எந்த அடிப்படையில் நடைபெறும் என்பதை முடிவு செய்யவே இன்னும் பல மாதங்கள் பிடிக்கும். அதோடு, இப்போது ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தாமல், பல்நோக்கு பயன்பாட்டு அடையாள அட்டை பணிக்கான கணக்கெடுப்பில் இதைச் சேர்ந்தால் பணி முடிய 10 முதல் 15 ஆண்டுகள் வரை ஆகும். ஒரு ஜாதியில் எத்தனை பேர் என்பதை மட்டும் கணக்கெடுத்தால் அது போதாது. அவர்கள் எந்த அளவுக்கு முன்னேறியுள்ளனர், பட்டதாரிகள், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் அந்த ஜாதியில் எத்தனை பேர் உள்ளிட்ட விவரங்களையும் சேகரிக்க வேண்டும். அதற்கேற்றவாறு வாய்ப்புகளையும், சலுகைகளையும் பகிர்ந்தளித்தால்தான் உண்மையான சமூகநீதியை எட்ட வழிபிறக்கும். மத்திய அரசு மேற்கொள்ளும் கணக்கெடுப்பில் இவை சாத்தியமில்லை. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான கணக்கெடுப்பை நடத்த வேண்டும். மாநில மக்கள்தொகையில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக அவர்கள் இருந்தால் அதனை தகுந்த ஆதாரத்துடன் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் அளிக்க வேண்டும். அந்த ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் புதிதாக இடஒதுக்கீட்டுச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரு மாநிலத்தின் இடஒதுக்கீட்டின் அளவை முடிவு செய்யும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் தானாகவே தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. இந்த வாய்ப்பை நழுவவிடக் கூடாது. தமிழகத்தில் தனியாக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மாநில அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும். அப்போதுதான் உச்ச நீதிமன்றம் அளித்த வாய்ப்பை பயன்படித்திக்கொள்ள முடியும். தனியாகக் கணக்கெடுப்பு நடத்த |400 கோடி செலவாகும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு |60 ஆயிரம் கோடி பட்ஜெட் தயாரிக்கும் மாநில அரசுக்கு இது கடினமான காரியம் அல்ல. பெரும்பான்மையான மக்களின் நலன் கருதி இந்தக் கணக்கெடுப்பை நடத்தலாம்.
சரியான கோரிக்கையே! அரசு ஆவன செய்க! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By ilakkuvanar Thiruvalluvan
8/14/2010 3:13:00 AM
மத்திய அரசு அதன் செலவில் இந்த காரியத்தை செய்யும் பொழுது தமிழ் நாடு அரசு ஏன் ரூ 400 ய் செலவிட வேண்டும்? நேற்று மாநில அரசை கிண்டல் செய்துவிட்டு இன்று கோரிக்கை. மர வெட்டி மாநிலத்தை மேலும் துண்டாக்க நினைத்து விட்டார்.
8/14/2010 3:13:00 AM
8/14/2010 3:11:00 AM
8/14/2010 12:00:00 AM