காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டிருப்பதாக வரும் செய்தி சற்று ஆறுதல் தருவதாக இருந்தாலும், காஷ்மீர் பள்ளத்தாக்கு பழையபடி சகஜ நிலைக்குத் திரும்புமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. கலவரம் ஓய்ந்திருப்பது என்பது அடுத்த சில நாள்களுக்கான உணவுப் பொருள்களைச் சேகரித்து வைத்துக் கொள்வதற்காகக்கூட இருக்கலாம். நாம் அதற்காக காஷ்மீரத்து மக்களைக் குறை கூறிவிட முடியாது. இந்த நிலைமைக்குக் காரணம் நிச்சயமாக அவர்கள் அல்ல என்பதை முன்பே ஒருமுறை தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தோம்.தீவிரவாதத்தின்மீது சலிப்பு ஏற்பட்டிருந்த மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன், தேர்தலில் பங்கு பெற்றனர். சட்டப்பேரவைத் தேர்தலும், மக்களவைத் தேர்தலும் வன்முறையோ, அசம்பாவிதங்களோ இல்லாமல் நடந்தன. தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணி அரசு உடனடியாக உள்ளாட்சித் தேர்தல்களையும் நடத்தி, அதிகாரப் பகிர்வுக்கு வழிகோலியிருந்தால், அதன் மூலம் வளர்ச்சிப் பணிகள் முடுக்கி விடப்பட்டிருந்தால் இன்றைய நிலைமை ஏற்பட்டிருக்காது. உள்ளாட்சித் தேர்தல் நடந்து எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி வலுப்பெற்று விடுமோ என்கிற பயத்தில், நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தாதன் விளைவுதான் மக்களின் அதிருப்திக்கு முக்கியமான காரணம்.மக்கள் தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கியது ஸ்ரீநகரில் மட்டுமல்ல, பட்காம், கந்தர்பால், குப்வாரா, அனந்த்நாக், பாரமுல்லா, குல்காம், பந்திபோரா, சோபியான், புல்வாமா என்று காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் மக்கள் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கி விட்டனர். சாதாரணமாகக் காஷ்மீரத்தில் பெண்கள் வெளியே வருவதில்லை. இப்போது பெருமளவில் குடும்பப் பெண்கள் கையில் கல்லுடன் தெருவில் இறங்கி ராணுவத்துக்கும், காவல்துறையினருக்கும் எதிராகப் போராடத் தொடங்கி இருக்கிறார்கள் என்றால் அதிருப்தி எந்த அளவுக்குக் கட்டுக்கடங்காமல் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தல்களில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களையும், தடைகளையும் மீறி வாக்குச்சாவடிக்கு வைராக்கியத்துடன் விரைந்த அதே காஷ்மீர் மக்கள் இப்போது அரசுக்கு எதிராகக் கோபம் கொந்தளிக்கத் தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கி இருப்பது ஏன் என்பதை நமது ஆட்சியாளர்கள் யோசிக்க மறுக்கிறார்கள். 1991-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வடக்கு காஷ்மீரில் உள்ள குனான் போஷ்புரா என்கிற கிராமத்தில் நுழைந்த ராணுவ வீரர்கள் நூற்றுக்கும் அதிகமான பெண்களைக் கற்பழித்தனர். அரசு நீதி வழங்கவில்லை. காஷ்மீர் பற்றி எரிந்தது. அந்த ஜுவாலையை அடக்கப் பத்தாண்டுகள் பிடித்தன.கடந்த ஆண்டு ஜூன் மாதம் சோபியன் என்ற ஊரில் வீட்டில் இருந்த இரண்டு பெண்களை சில ராணுவ வீரர்கள் கடத்திச் சென்று கற்பழித்தனர். அந்த இரண்டு இளம் பெண்களின் சடலங்கள் ஓர் ஓடையில் கிடந்தன. அவர்கள் தண்ணீரில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டதாக மரண அறிக்கை தயாரிக்கப்பட்டது. வேடிக்கை என்னவென்றால், அந்த ஓடையில் ஓர் அடி ஆழத்துக்குக்கூடத் தண்ணீர் கிடையாது.விசாரணை என்கிற பெயரில் உண்மை மூடி மறைக்கப்பட்டது. தவறு செய்தவர்களைத் தண்டித்தால் ராணுவத்தினர் மனத்தளர்வு அடைந்து விடுவார்கள் என்று சாக்குப்போக்கு சொல்லப்படுகிறது. என்ன அபத்தமான வாதம்? கலவரத்தை அடக்கத் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதைத் தவறு என்று கூறவில்லை. ஆனால், வீட்டில் தனியாக இருக்கும் இளம் பெண்களைக் கடத்திச் சென்று கற்பழிப்பது ராணுவமாக இருந்தாலும், காவல்துறையாக இருந்தாலும், ஏன் யாராக இருந்தாலும் தவறுதானே? தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தானே?அரசு தவறு செய்த ராணுவ அதிகாரிகளைக் காப்பாற்ற முற்பட்டதில் தொடங்கி, ஒன்றன்பின் ஒன்றாகச் செய்துவரும் தவறுகள் ஏராளம், ஏராளம். முதல்வர் ஒமர் அப்துல்லா நல்லவராக, ஊழலற்றவராக இருக்கலாம். ஆனால், நிர்வாகத் திறமையும், அரசியல் அனுபவமும் இல்லாதவர் என்பதைக் கடந்த ஓராண்டு காலமாக அவர் நிர்வாகம் செய்த விதமும், கடந்த ஒருமாத காலமாக அவர் கலவரத்தைக் கையாண்ட விதமும் வெட்டவெளிச்சமாக்குகிறது.பாகிஸ்தானின் இன்றைய மேல்மட்ட ராணுவத் தளபதிகளான ஜெனரல் கயானி, தாரிக் மஜீத், காலித் ஷமீம் வைன், சையத் அப்சர் ஹுசைன், அகமத் பாஷா, ஜவீத் ஜியா என்று அனைவருமே 1971-ல் பாகிஸ்தானிய ராணுவம் இந்தியாவிடம் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தபோது அந்த ராணுவத்தில் சமீபத்தில் சேர்ந்திருந்த இளம் தளபதிகள். சுமார் 90,000 பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள் இந்திய ராணுவத்திடம் சரணடைந்ததையும், வங்கதேசம் பிளவுபடுத்தப்பட்டு தனி நாடாக்கப்பட்டதையும், தேசிய அவமானமாகக் கருதி மனத்திற்குள் வெம்பித் தவிப்பவர்கள். அன்றைய தோல்விக்குப் பழிக்குப் பழி வாங்கத் துடிக்கும் இவர்களது வெறிக்கு இன்று காஷ்மீர் கைக்கெட்டும் தூரத்து வாய்ப்பாகத் தெரிகிறது.நாம் ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்தலாம். ஆனால், பாகிஸ்தான் ராணுவமும், மக்களின் அதிருப்தியைச் சாதகமாக எடுத்துக் கொண்டு, பின்னணியில் இருந்து எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டிருக்கும் பிரிவினைவாதத் தீவிரவாதக் கும்பலும் அமைதி ஏற்படுவதை அனுமதிக்காது. நவம்பரில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுக்கு வரும்போது காஷ்மீர் கலவரம் உச்சகட்டத்தை எட்ட வேண்டும் என்பதுதான் இவர்கள் திட்டமாக இருக்கும்.இனியும் நாம் தாமதிக்க முடியாது. காஷ்மீரில் ஒமர் அப்துல்லா ஆட்சி கலைக்கப்பட வேண்டும். உடனடியாகக் காஷ்மீர் கலவரப் பகுதியாக அறிவிக்கப்பட வேண்டும். இன்னும் பத்தாண்டுகள் பழையபடி போராட வேண்டும். வேறு வழியேதும் புலப்படவில்லை.தொலைநோக்குப் பார்வையும், நிர்வாகத் திறமையும், தவறை மூடிமறைக்கப் பார்க்கும் நேர்மையின்மையும்தான் காஷ்மீரின் இன்றைய நிலைமைக்குக் காரணம். வங்கதேசம் பிரிந்ததுபோல, இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிக்கப்பட்டு பழி வாங்கப்பட வேண்டும் என்கிற பாகிஸ்தானிய ராணுவ ஜெனரல்களின் எதிர்பார்ப்பை முதலில் முறியடித்தாக வேண்டும். அதுதான் உடனடி குறிக்கோளாக இருக்க முடியும்!
கருத்துக்கள்
நிறையப் படிப்பவர்களால்தான் சிறப்பாக எழுத முடியும். தினமணி ஆசிரியர் குழுவினர் மிகுதியாக உடனுக்குடன் பிற செய்திகளைப் படிக்கிறார்கள் எனப் புரிகின்றது. அதனால்தான் எந்தப் பொருண்மையாக இருந்தாலும் அது குறித்த விரிவான செய்தியையும் வாசகர்களுக்கு அளிக்கின்றார்கள். ஆசிரியர் குழுவினருக்குப் பாராட்டுகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/9/2010 4:05:00 AM
8/9/2010 4:05:00 AM
, இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிக்கப்பட்டு பாகிஸ்தானிய Naikalen எதிர்பார்ப்பை முதலில் முறியடித்தாக வேண்டும்.
By Rafeei,Madina Munawara
8/9/2010 2:46:00 AM
8/9/2010 2:46:00 AM
A BIG COUNTRY LIKE INDIA NEEDS STRONG POLICY MAKING POLITICIANS AND A STRONG ADMINISTRATION IN DEALING THIS TYPE OF AGITATIONS...PAKISTAN WILL ALWAYS INTERVENE TO CONFUSE THE KASHMIR PEOPLE ON THE BASIS OF RELIGION..STRONG ACTIONS ARE NEEDED TO SOLVE THIS PROBLEM.
By rangaraj
8/9/2010 1:59:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்8/9/2010 1:59:00 AM