திங்கள், 9 ஆகஸ்ட், 2010

தினமணி செய்தி எதிரொலி: பெருமழைப் புலவர் இல்லத்தில் அதிகாரி ஆய்வு


திருத்துறைப்பூண்டி, ஆக. 8: வறுமையில் வாடும் பெருமழைப் புலவரின் வாரிசுகள் என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை தினமணியில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அன்றைய தினமே புலவரின் இல்லத்துக்கு தஞ்சை தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் க.கபிலர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரை ஆசிரியராகத் திகழ்ந்தவர் மேலப் பெருமழை கிராமத்தைச் சேர்ந்த பெருமழைப் புலவர் என்று அழைக்கப்பட்ட பொ.வே. சோமசுந்தரனார்.இவர் தனது தமிழ்ப் புலமைத் திறத்தால் சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, பட்டினத்தார் பாடல்கள், நற்றிணை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை உள்ளிட்ட பல இலக்கிய நூல்களுக்கு உரை எழுதியதுடன், மானனீகை, செங்கோல் முதலிய உரைநடை நூல்களையும், பெருங்கதை உரைநடையும், பண்டிதமணி வரலாறு உள்ளிட்ட பல இலக்கிய நூல்களையும் படைத்தவர்.பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு இணையான அறிவு பெற்ற இவர், பள்ளி ஆசிரியராக இருந்திருந்தால்கூட அவரது மறைவுக்குப் பின்னர் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகள் கிடைத்திருக்கும். தற்போது இவரது மகன்கள் 100 நாள் வேலை திட்டத்தில் தினக்கூலிகளாகப் பணியாற்றி வருகின்றனர்.இதுகுறித்த செய்தி தினமணியில் விரிவாக வெளியானது.விரைந்து செயல்பட்ட தமிழ் வளர்ச்சித் துறை: இதைத் தொடர்ந்து, செய்தி வெளியான அன்றைய தினமே விடுமுறை நாளாக இருந்த போதிலும், சென்னை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கூ.வ.பூவரசு ஆணையின்படி, திருவாரூர் மாவட்டத்துக்கும் கூடுதல் பொறுப்பு வகிக்கும் தஞ்சை தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் க.கபிலர் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேலப் பெருமழை கிராமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று புலவரின் வாரிசுகளைச் சந்தித்தார்.அவரிடம் புலவரின் மகன்கள் எஸ்.பசுபதி, எஸ்.மாரிமுத்து ஆகியோர் தங்களது தந்தை பெயரில் மணிமண்டபம் அமைக்க வேண்டுமென்றும், திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தமிழ்த் துறைக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டுமென்றும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் புலவர் பெயரில் பன்னாட்டு அறிஞர்கள் பங்கேற்கும் இருக்கை ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர்.மேலும், புலவர் எழுதிய நூல்களுக்கு பரிவுத்தொகை மற்றும் வறுமையில் வாடும் குடும்பத்தினருக்கு அரசின் நிதி உதவி, வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு போன்ற கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர்.இந்தக் கோரிக்கைகளை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் மூலமாக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும் என கபிலர் உறுதி அளித்தார்.செப்டம்பர் 5-ம் தேதி புலவரின் நூறாவது ஆண்டு பிறந்த தினமாகும். அதற்குள் அரசின் சார்பில் உரிய அறிவிப்புகள் வெளியாகும் என அவரது மகன்கள் பசுபதி, மாரிமுத்து ஆகியோர் நம்பிக்கை தெரிவித்தனர்.
கருத்துக்கள்

முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுப்பார் என்று நேற்றே நான் குறிப்பிட்டது உண்மையாவதில் மகிழ்ச்சியே! நூல்களை நாட்டுடைமையாக்கிப் பரிவுத் தொகையை வழங்குவார் என்பதில் ஐயமில்லை. மணிமண்டபம் முதலான பயனற்ற ஆசை களைக் குடும்பத்தினர் விடுதலே நன்று. செய்தியில் குறிப்பிட்டாற்போன்று த.வ.இய்க்குநர் பூவரசு அன்று; முனைவர் கூ.வ.எழிலரசு. விரைவான நடவடிக்கைக்ககுக்காரணமான செயலர் /முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் /முதல்வர் ஆகியோருக்கும் செய்தியை வெளியிடச் செய்த செய்தியாளருக்கும வெளியிட்ட தினமணிக்கும் நன்றி.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/9/2010 3:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக