வெள்ளி, 14 மே, 2010

அரசியலை என்னிடமிருந்து பிரிக்க முடியாது: முதல்வர் கருணாநிதி

சென்னை, மே 13: இலக்கியத்தையும், அரசியலையும், மக்கள் பணியையும் இறுதி மூச்சு இருக்கும் வரையில் என்னிடம் இருந்து பிரிக்க முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.திமுக ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி அவர் அளித்துள்ள பேட்டி:எனது இறுதி மூச்சு இருக்கும் வரையில் இலக்கியத்தையும், அரசியலையும், மக்கள் பணியையும் என்னிடம் இருந்து எதுவும் பிரித்துவிட முடியாது. ஏதோ ஒரு வகையில் என் தொண்டு மக்களுக்காகத் தொடர்ந்து கொண்டே இருக்கும்.அதிகாரப் பணிக்கு ஓய்வளித்து, முழு நேரமும் சமுதாயப் பணிக்கு அர்ப்பணிக்கலாம் என்பது எனது விருப்பம். அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மற்றவர்கள் விரும்புகிறார்கள். இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை.எனது சிந்தனை, செயல்பாடு, உழைப்பு, அனைத்துக்கும் உந்து சக்தி, மக்கள் தரும் ஆதரவும் நிறைவான அன்பும்தான்.மாநிலங்களவைத் தேர்தலில் அன்புமணிக்கு ஆதரவு கேட்டு பா.ம.க. பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகக் கூறப்படுவது குறித்து, ஜூன் 7-ம் தேதிக்குள் தெரியும். வேட்புமனு தாக்கல் மே 31-ல் தொடங்கி ஜூன் 7 வரையில் இருக்கிறது.எதிர்க்கட்சிகள் தேர்தலுக்காக புதிய கூட்டணி உருவாக்க தீவிரம் காட்டுவது குறித்து அக்கறை காட்டுவதைவிட, எந்த வகையில் மக்களுக்கு நன்மைகள், சலுகைகள் செய்யலாம் என்பதில்தான் நாங்கள் முக்கிய கவனம் செலுத்துகிறோம்.ஆட்சியில் தொடருகிறோமா இல்லையா என்பதைவிட, ஆட்சியில் இருக்கும்போது மக்களுக்காக என்ன செய்தோம் என்பதுதான் முக்கியம்.மக்களுக்கு வேண்டிய திட்டங்களை முறையாகச் செய்தால், அவர்களும் நமக்குச் செய்ய வேண்டியதை முறையாகச் செய்வார்கள். ஆட்சியில் இருக்கும்போது அவர்களை அலட்சியம் செய்தால், தேர்தல் வரும்போது, அவர்கள் நம்மை அலட்சியப்படுத்தி ஒதுக்கி விடுவார்கள் என்பதை நன்றாக அறிவேன்.தமிழகத்தில் சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தலை முன்னதாகவே நடத்துவது என்ற கருத்து குறித்து சிந்தனை எதுவும் என்னிடத்தில் இல்லை.கிராமங்களில் வேலை வாய்ப்பு பெருக வேண்டும் என்பதற்காக, புதிய தொழிற்சாலைகளை கிராமப் பகுதிகளில் தொடங்குமாறு முதலீட்டாளர்களை அரசு வலியுறுத்துகிறது. அவற்றில் அந்தப் பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தரக் கோருகிறோம்.கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு அங்கு வேலை கிடைத்தால், நகரங்களுக்குப் படையெடுக்கும் சூழல் குறைந்துவிடும்.இலங்கைத் தமிழர்: இலங்கைத் தமிழர் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும், அங்குள்ள தமிழர்கள் அமைதியான நல்வாழ்வு வாழ வேண்டும், பிரச்னைகளுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதுதான் இங்குள்ள மத்திய, மாநில அரசுகளின் பெரிய விருப்பமாகும்.இலங்கை அந்நிய நாடு என்பதால்தான், அவர்களின் உள்நாட்டுப் பிரச்னைகளில் நாம் தலையிடும்போது, முள்மேல் விழுந்த துணியை கிழியாமல் எடுப்பது போல எடுக்க வேண்டியுள்ளது. அந்த அளவுக்கு மத்திய மாநில அரசுகள் செயல்படும்போது, இங்குள்ள சில அரசியல்வாதிகள் அரசியல்ரீதியான உள்நோக்கங்களோடு, தாங்கள்தான் இலங்கைத் தமிழர்களுக்காகப் பாடுபடுபவர்களைப் போல நடிக்கிறார்கள்.உதாரணமாக பார்வதி அம்மாள் பிரச்னையில், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே அவர்களுக்குத் தெரியாத நிலை உள்ளது. இருந்தாலும் ஒரு சிலர் தங்கள் அரசியல் லாபங்களுக்காக, அவரது உடல்நிலையை வைத்து, தாங்கள் தான் அவர் மீது அக்கறையும், பாசமும், பற்றும் உள்ளவர்கள் என்பதைப் போல திட்டமிட்டு எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் தாக்கப்படும் துன்பத்தைக் களைய பல ஆண்டுகளாக முடிந்த முயற்சிகளை செய்து வருகிறோம். எனினும் மீண்டும், மீண்டும் அந்தக் கொடுமை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.கிரிக்கெட்: கிரிக்கெட் போட்டியில் டி 20 போட்டிகள் விளையாட்டு வீரர்களின் திறமையைப் பொருத்து முடிவுகள் அமைய வேண்டுமே தவிர, சூதாட்டக்காரர்களின் முடிவுகளாக அமைந்துவிடக் கூடாது என்று நினைக்கிறேன்.டெண்டுல்கர் தொடர்ந்து பொறுப்புணர்வோடு விளையாடுவது என்னைக் கவர்ந்த ஒன்று. அண்மைக் கால வீரர்களில் சுúஷ் ரெய்னா, மகேந்திரசிங் டோனி, ஷேன் வாட்சன், ஜாக்கஸ் காலிஸ் போன்றவர்கள் என்னைக் கவர்ந்தவர்கள்.
கருத்துக்கள்

தமிழக அரசை மத்திய அரசு கலந்துபேசி முடிவெடுப்பதாக மூலப் பேட்டியில் இருக்கிறது. 19.05.10 அன்று மக்களவையில் பேசிய தி.மு.க.நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு வீரஅன்னை பார்வதியம்மாள் நாடு கடத்தப்பட்ட நிகழ்வில் உரிய கருததினைத் தமிழக அரசிடம் கேட்காததைக் கடுமையாகச் சாடிப் பேசிய செய்தி எல்லாச் செய்தித்தாள்களிலும் வந்திருநதது. இந்த உண்மைக்கு மாறாகக் கலைஞர் கருத்து தெரிவித்ததால் தினமணி அதனைக் குறிப்பிடவில்லையா? வாழ்க தினமணி! 2) உயிர் போய்க் கொண்டிருக்கும்போது துணி கிழியுமோ என்றா அஞ்சிக் கொண்டு இருப்பார்கள்? ஆதரவாளர்களாக நடிப்பவர்களாவது உணர்வை ஊட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆதரவாக இருந்து எதிர்ப்பிற்குத் துணைபோனவர்கள், போகிறவர்கள், இனப்படுகொலையை அல்லவா அரங்கேற்றியிருக்கின்றனர். பதவிநலன்களுக்காகக் கொலைகாரக் கூட்டணியில் இருப்பவர்களை விட அரசியல் ஆதாயங்களுக்காக ஈழத்தமிழர்களின் பக்கம் இருக்கிறவர்கள் பலகோடி மடங்கு மேல். பழுதெண்ணும் மநதிரியின் பககத்துள் தெவ்வோர் எழுபதுகோடி உறும் என்பது தெய்வப்புலவர் திருவள்ளுவர் வாக்கல்லவா?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/14/2010 5:46:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக