தமிழகத்தில் சிகிச்சை பெற பிரபாகரன் தாயாருக்கு அனுமதி
சென்னை, மே 10: தமிழகத்தில் சிகிச்சை பெற பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் விதி 110-ன் கீழ் அவர் படித்த அறிக்கை: "கடந்த ஏப்ரல் 16-ம் தேதி மலேசியாவில் இருந்து சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள், சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டதாக ஏப்ரல் 17-ம் தேதி ஊடகங்களில் செய்தி வெளியானது. இது பற்றி ஏப்ரல் 19-ம் தேதி சட்டப் பேரவையில் விவாதிக்கப்பட்டது. தமிழகம் வருவது குறித்து பார்வதியம்மாளிடமிருந்தோ, அவருக்கு துணைபுரிய விரும்புவபர்களிடமிருந்தோ தமிழக அரசுக்கு கடிதமோ, தகவலோ வரவில்லை. இந்தப் பயணம் குறித்து மத்திய அரசுக்கும், அவருக்கும் இடையேதான் செய்தித் தொடர்பு உள்ளது. தமிழக அரசுக்கு இதில் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. பார்வதியம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற விரும்பினால் அதனை பரிசீலனை செய்து மத்திய அரசுக்கு எழுத மாநில அரசு தயாராக உள்ளது என்று சட்டப் பேரவையில் நான் தெரிவித்தேன். சிகிச்சைக்காக கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வர, மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் ஏற்பாடு செய்யுமாறு பார்வதியம்மாள் தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதம் ஏப்ரல் 30-ம் தேதி மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டது. அதன்படி, சிகிச்சைக்காக பார்வதியம்மாள் தமிழகம் வந்து செல்ல சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு மத்திய அரசு அனுமதிக்கலாம் என்று மத்திய உள்துறைச் செயலாளருக்கு மே 1-ம் தேதி தமிழக அரசு கடிதம் அனுப்பியது. இந்த விவரங்களை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் மே 3-ம் தேதி பேரவையில் அறிவித்தார். மே 3, 4 தேதிகளில் தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோரிடம் இது குறித்து தெரிவித்து அவர்களின் உதவியை நாடினேன். தினமும் மத்திய அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நல்ல பதில் கிடைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டோம். அதனைத் தொடர்ந்து சில நிபந்தனைகளுடன் சிகிச்சைக்காக தமிழகத்துக்கு வர அனுமதிக்கலாம் என்று மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு மத்திய அரசு மே 7-ம் தேதி கடிதம் எழுதியுள்ளது. அதன் நகல் தமிழக அரசுக்கும் வந்துள்ளது. சிகிச்சைக்காக மட்டுமே அவர் தமிழகம் வர வேண்டும். மருத்துவமனையைத் தவிர வேறெங்கும் தங்கக் கூடாது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பினால் அதற்கான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும். அர சியல் கட்சியினர், குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு நண்பர்களாக இருப்பவர்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. பெயர் குறிப்பிடப்பட்ட அவருடைய உறவினர்களோடு மட்டுமே தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசின் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் பார்வதியம்மாளைத் தொடர்பு கொண்டு 6 மாத காலத்துக்கு விசா வழங்கலாம் என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கு எந்தவிதமான குந்தகமும் இல்லாமல் மத்திய அரசினால் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.சாதாரணமாக இதுபோன்ற நிகழ்வுகளில் முடிவு எடுப்பதற்கு சில காலம் பிடிக்கும் என் றாலும், அந்த அம்மையாரின் உடல்நிலை கருதி மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்குமேல் மலேசியாவில் உள்ள அந்த அம்மையாரின் முடிவுக்கு இணங்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்றார் முதல்வர் கருணாநிதி. முசிறியில் சிகிச்சை? விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாளுக்கு திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள அவரது உறவினர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
கருத்துக்கள்
மிகப் பெரிய சாதனை! வீரத்தாயைப் பாதுகாப்புக் கைதியாக அடைத்து வைப்பதற்கு விரைவில் மத்திய அரசின் ஆணையைப் பெற்றது மிகப் பெரிய சாதனை! மருத்துவ உதவி பெற அழைப்பும் விடுத்து, வந்தால் தடுப்புக் காவல் கைதியாக்க ஏற்பாடும் செய்து இரட்டைவேடமிட்டு வெற்றி பெற்ற மிகப் பெரும் சாதனை! மந்திரிப் பதவிகளுக்காக அல்லாமல் (சத்தியாமாக நம்புங்கள்) மத்திய அமைச்சர்களைச் சநதித்தும் நாள்தோறும் தொடர்பு கொண்டும் விரைவில் சிறைவைப்பு ஆணையைப் பெற்றது மிகப் பெரும் சாதனை! உடனே பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்யுங்கள்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/11/2010 3:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *5/11/2010 3:43:00 AM