ஞாயிறு, 9 மே, 2010


செம்மொழி மாநாட்டுக்கு வருவோர் கவனிக்க… — பாமரன்


”ஆமாம். அப்படித்தான் செய்வோம். உங்களால் என்ன புடுங்க முடியும்?” இதுதான் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு தமிழ் மக்கள் முன்பாக வைத்துள்ள கேள்வி. மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வந்த பிரபாகரன் அவர்களது அன்னையார் பார்வதி அம்மையாரை திருப்பி அனுப்பியதன் வாயிலாக அவர்கள் மிக நேரடியாகவே தமிழ் மக்கள் முன்பாக இந்த சவாலை வைத்திருக்கிறார்கள்.

பக்கவாத நோயினால் எழுந்து நடமாடக் கூட இயலாத ஒரு மூதாட்டியை இப்படி நடத்துவது மனிதாபிமானமற்ற செயல்…… நாகரீகமும் பண்பாடும் அற்ற கொடுஞ்செயல்…… மனித உரிமைகளை மீறிய செயல்……. என்றெல்லாம் நாமும் நம் பங்குக்குச் சொல்லலாம்தான்.

இந்த மனிதாபிமானம்….. நாகரீகம்….. பண்பாடு….. என்பதையெல்லாம் மனிதர்களிடம் எதிர்பார்க்கலாம். ஆனால் மத்திய அரசிடம் எதிர்பார்க்கலாமா?

அதுவும் எப்படிப்பட்ட “மனிதாபிமானி”களிடம்……?

மழலைகளையும்….. முதியவர்களையும்கூட கூட்டம் கூட்டமாகக் கொன்று குவித்து நகர்களையே புதைகுழிகளாக்கி புல்டோசர் விட்டு நிரவியதற்கு ”தொழில் நுட்ப உதவி”யும்…… ”ஆயுத உதவி”யும் அளித்தார்களே அந்த ”காந்தீயவாதி”களிடமா கருணையை எதிர்பார்ப்பது?

நடந்த அவ்வளவு கொடூரங்களையும் உலகெங்கும் உள்ள மனிதநேயர்கள் கவலை ததும்ப கண்ணீரோடு கண்டித்துக் குரல் கொடுத்த பின்பும் ஐக்கிய நாடுகள் அவையில் சிங்களச் சாத்தான்களுக்கு ஆதரவாக கைகோர்த்து நின்றார்களே அந்த ”அகிம்சாவாதி”களிடமா பண்பாட்டை எதிர்பார்ப்பது?

இல்லை தோழர்களே….. அது சாத்தியமேயில்லை.

இன்று மட்டுமில்லை 1985 திம்பு பேச்சுவார்த்தைகளின் போது ராஜீவ் காந்தியின் ”அரசகட்டளைக்கு” அடிபணிய மறுத்தார்கள் என்பதற்காக பாலசிங்கம், சத்தியேந்திரா, சந்திரகாசன் மூன்று பேரும் நாடுகடத்தப் பட்டார்கள் அன்றைக்கு.

மொத்த தமிழகமே (கதர் சட்டைகள் தவிர்த்து) கொந்தளித்து எழுந்ததைக் கண்டு அதிர்ந்துபோய் அடிபணிந்தது அன்றைய ராஜீவ் அரசு. அதன் பின்பு வந்த ஒப்பேறாத ஒப்பந்தமும்……. அமைதியை நிலைநாட்டுகிறோம் என்கிற பேரால் மயான அமைதியை தவழ விட்ட வரலாற்றையும் அறிவோம் நாம்.

இப்போது அந்த வரலாறு மீண்டும் திரும்பியிருக்கிறது.

அன்று : ராஜீவ்.

இன்று : சோனியா.

அவ்வளவுதான் வித்தியாசம்.

ஆனால் அன்றிருந்த தமிழகம்?

அதைப் பிறகு பார்ப்போம்.

ஆனால் முந்தைய படுகொலைகளின் தளகர்த்தராக இருந்த சந்திரிகா குமாரதுங்க தனது தாய்வீடு போல இங்கே வந்து செல்ல முடிகிறது.

அவரது தாயான சிறிமாவோ பண்டாரநாயக கேரளாவிலுள்ள கோட்டக்கல் ஆர்ய வைத்ய சாலைக்கு வந்து தங்கியிருந்து சிகிச்சை பெற்றுச் செல்ல முடிகிறது.

அவ்வளவு ஏன் நவீன யுகத்தில் நரமாமிசம் சாப்பிடும் ராஜபக்சேவே திருப்பதி கோயிலுக்கு வந்து செல்ல முடிகிறது.

”தெய்வம் நின்று கொல்லும்” என்றார்கள் முன்னோர்கள். ஆனால் அந்தப் படுபாதகன் ராஜபக்சேவை தெய்வம் நின்றும் கொல்லவில்லை…… குனிந்தும் கொல்லவில்லை. மாறாக பூரண கும்ப மரியாதை கொடுத்துக் கும்பிட்டது.

கடவுளர்கள்கூட கைவிட்ட அனாதை இனமாகிப் போனது தமிழ் இனம்.

முதலில் விசா கொடுப்பது….. கிளம்பி வந்த பிற்பாடு ”இல்லையில்லை தவறுதலாக விசா கொடுத்து விட்டோம். புறப்பட்ட இடத்துக்கே திரும்பிச் செல்லுங்கள்” என்று வந்த விமானத்திலேயே அந்த வயோதிகரைத் திருப்பி அனுப்புவது…. என்று விளையாட்டுக் காட்டியிருக்கிறது மத்திய அரசு.

அப்படியானால் “அனுமதிக்கக் கூடாதவர்கள்” என்கிற பட்டியலையும் பார்க்காது விசா வழங்கிய அந்த ”அதிமேதாவி” யார்? அப்படித் தவறுதலாக விசா வழங்கி அலைக்கழித்த ஆசாமிக்கு என்ன தண்டனை? எண்பது வயதைத் தொடும் அந்த மூதாட்டி….. ஏற்கெனவே பக்கவாதத்தால் சித்ரவதை அனுபவித்துக் கொண்டிருக்கும் அந்தத் தாய்……. இந்தத் தள்ளாத வயதில் அடைந்த உடல் வேதனைக்கும், மன உளைச்சலுக்கும் யார் பொறுப்பு?

இதற்கெல்லாம் மானம்….. சூடு….. சொரணை….. ஏதாவது இருப்பவர்கள் பதில் சொல்வார்கள். மானம் கெட்டவர்கள் மட்டுமே மெளனம் சாதிப்பார்கள்.

சரி அங்குள்ளவர்கள்தான் அப்படி.

இங்குள்ளவர்கள் எப்படி?

இனப்படுகொலை உச்சகட்டத்தில் இருந்தபோதே ஒன்றுபட்டுக் குரல் கொடுக்காத இவர்கள் பார்வதியம்மாள் பரிதவிப்பில் மட்டும் ஓரணியில் திரளப்போகிறார்களா என்ன? எல்லாம் கட்சி அரசியல் படுத்தும்பாடு. அதுவும் பாழாய்ப்போன ஓட்டு அரசியல்.

”காங்கிரசை ஒழிப்பதே என் வேலை” என்ற பெரியார் கூட இந்த இனத்தின் நலனுக்காக காமராஜரை வலியச் சென்று ஆதரித்தார். கழகக்காரர்களால் ”குல்லுகபட்டர்” என்று எள்ளி நகையாடப்பட்ட ராஜாஜிகூட அன்றைய முதல்வர் கருணாநிதி மதுக்கடைகளைத் திறந்தபோது ஈகோ பார்த்துக் கொண்டிருக்காமல்“வேண்டாம் இந்த விபரீதம்…. விட்டுவிடுங்கள்” என்று வீடு தேடிச் சென்று கெஞ்சினார். ஆனால் இன்றைக்கோ இனமே அழிவின் விளிம்பில் நின்றால் கூட ஓட்டு அரசியல் ஒவ்வொருவரையும் நெல்லிக்காய் மூட்டையாய் சிதற வைத்திருக்கிறது.

ஆனால் எல்லோரை விடவும் பாவம் கலைஞர்தான். வர வர வைகைப் புயல் வடிவேலுவின் காமெடியையும் மிஞ்சிவிடும் போலிருக்கிறது கலைஞரின் காமெடி.

பார்வதியம்மாள் நாடு கடத்தப்பட்ட அவலத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது ”இது பற்றிய முழுத் தகவல் மறுநாள் காலையிலேதான் விவரமாகப் பத்திரிகைகளைப் படித்து நான் தெரிந்து கொள்ள முடிந்தது. ” என்கிறார் போலீஸ்துறைக்குப் பொறுப்பாக இருக்கிற முதலமைச்சர்.

ஆக ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சராக இருப்பவருக்குக் கூட முறையான தகவல் தராமல் தன்னிச்சையாக நுழைந்து ஒருவரை நாடுகடத்துகிறது மத்திய அரசு என்றால்….. இவர் அரை நூற்றாண்டாக (அவ்வப்போது) ஆர்ப்பரிக்கிற மாநிலத்தின் உரிமைகள் எங்கே போயிற்று? எந்தக் லட்சணத்தில் இருக்கிறது அந்த மாநில சுய ஆட்சி?

வைகோ அவர்களது அரசியல் நகர்வுகளில் எண்ணற்ற மாறுபட்ட கருத்துக்கள் உண்டு எனக்கும். ஆனால் அன்று அவரும் நெடுமாறன் அவர்களும் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட விதம்….. அந்த அநாகரீகம்….. மனித உரிமைகளை மதிக்கிற எவராலும் ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று.

அவர்களிடம் நோய்வாய்ப்பட்டு வருகிற அந்த மூதாட்டியை எந்த ஆர்ப்பரிப்பும் இல்லாமல் பத்திரமாக அழைத்துச் செல்லவேண்டும் என்கிற அக்கறை தென்பட்டதே அன்றி இவர்கள் சொல்லுவதுபோல பெயர்தட்டிச் செல்லவேண்டும் என்கிற எண்ணத்தில் வந்தவர்களாய்ப் படவில்லை எனக்கு.

5.5.2003இல் ஜெயலலிதா மத்திய உள்துறைக்கு அனுப்பிய கடிதம்தான் பார்வதியம்மாளை மத்திய அரசு திருப்பி அனுப்பியதற்குக் காரணம் என்கிறார் கலைஞர்.

அவர்தான் அப்படி அன்று அப்படி அனுப்பினார் என்றால் இன்றுவரை இவர் அதை மாற்ற என்ன முயற்சி எடுத்துக் கொண்டார் என்பதுதான் எல்லோரது கேள்வியும்.

ஒருவேளை இவரது அழைப்பை ஏற்று செம்மொழி மாநாட்டுக்கு உலகம் முழுவதும் இருந்து தமிழ் அறிஞர்கள் வந்திறங்கும் வேளையாகப் பார்த்து……..

இது 1921 இல் நீங்கள் வரக்கூடாது என்று பனகல் அரசர் கொடுத்த பட்டியல்…..

இது 1930 இல் நீங்கள் வரக்கூடாது என்று முனுசாமி நாயுடு கொடுத்த பட்டியல்…..

இது 1937 இல் நீங்கள் வரக்கூடாது என்று ராஜாஜி கொடுத்த பட்டியல்…..

என்று வந்திறங்கியவர்களிடம் எல்லாம் மத்திய அரசு ஒரு பட்டியலைக் காட்டி திருப்பி அனுப்பி வைத்தால் அவர்களது கதி என்னாவது? முதல்வர் காலையில் பேப்பர் படித்து முழு விவரங்களும் தெரிந்து கொள்வதற்கு முன்னர் அவர்கள் புறப்பட்ட இடத்திற்கே போய்ச் சேர்ந்துவிட்டால் என்ன செய்வது?

எதற்கும் வருகிற தமிழ் அறிஞர்கள் ஜெ.வோ அல்லது ஜா.வோ எவரேனும் கொடுத்த ”வரக்கூடாதவர்கள் பட்டியல்”களில் அவர்களது பெயரும் இருக்கிறதா இல்லையா என்று பார்த்து விட்டு வண்டி ஏறுவது நல்லது.

கலைஞர் உதிர்த்த அடுத்த முத்தோ முன்னதைவிட சூப்பர் காமெடி.1985இல் பாலசிங்கம் உட்பட மூவரையும் நாடுகடத்துவது தொடர்பாக சொல்லும்போது……

”ஆணை பிறப்பிக்கப்பட்டு அவர்கள் விமானம் ஏறுகிற நிலையில், எங்களுக்குச் செய்தி கிடைத்து உடனடியாக “டெசோ” அமைப்பின் சார்பாக அப்பொழுதுதான் டெசோ தொடங்கப்பட்டது. நான், வைகோ, நெடுமாறன், தமிழர் தலைவர் வீரமணி, பேராசிரியர் ஆகியோரெல்லாம் இருந்த அமைப்பு டெசோ. 23 ஆம் தேதி முடிவெடுத்து உத்தரவிடப்படுகிறது. அந்த “டெசோ” அமைப்பின் சார்பாக 25 8 1985 அன்று சென்னையிலே ஒரு கண்டனப் பேரணி நடத்தினோம். தொடர்ந்து 30 8 1985 அன்று ரெயில் நிறுத்தப் போராட்டம் என்று அறிவித்தோம். அதனையொட்டி 5000 பேர் அன்றைக்கிருந்த ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டார்கள். உடனே மத்திய அரசு சந்திரஹாசன் மீதான உத்தரவைத் திரும்பப் பெற்றது. அதற்குப் பிறகு தொடர்ந்து 7 10 1985 அன்று பாலசிங்கம் மீதான நாடு கடத்தும் உத்தரவையும் திரும்பப் பெற்றது.

அந்தக் காலத்திற்கும், “டெசோ” அமைப்பின் சார்பாக எல்லோரும் சேர்ந்து போராடியதற்கும் தனித்து இப்பொழுது மற்றவர்களுக்கெல்லாம் பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காக, இரகசியமாக இந்த விமான நிலைய வரவேற்பை அளித்ததற்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் உணர்ந்தால் “அந்தோ தமிழர்களே!” என்று நம்மை அறியாமல் நாம் சொல்லத்தான் நேரிடுகிறது என்பதை முதலிலே குறிப்பிட விரும்புகிறேன்.”என்கிறார் முதல்வர்.

எல்லாம் சரி. ஆனால் அது என்ன அந்தக் காலம்?

பெரிய அளவில் தொலைத்தொடர்பு சாதனங்களோ…… வீட்டுக்கு வீடு தொலைக்காட்சிகளோ….. இல்லாத அந்த காலத்திலேயே எப்படி பத்தே மணி நேரத்தில் பத்து லட்சம் பேரைத் திரட்டி பேரணி நடத்த முடிந்தது?

அடாவடித்தனமான மத்திய அரசை அடிபணிய வைக்க முடிந்தது?

அதுதான் அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலம்.

மாநிலத்தின் அரியாசணத்திலும்….. மத்திய அமைச்சரவைகளில் பங்குதாரர்களாகவும் இல்லாது இருந்த காலம்.

பேரப்பிள்ளைகள் SUN ம்……

SON கள் சகோதர யுத்தமும் நடத்தாத காலம்…….

ரம்பாவுக்குக் கல்யாணம்…. சிநேகாவுக்கு சீர் என்று நேரங்களைச் செலவழிக்காத காலம். அதனால் அன்றைக்கு கிடைத்தது பத்து மணி நேரத்தில் பல லட்சம் பேர். இன்றோ கிடைத்திருப்பது கடிதம் மட்டுமே எழுதுவதற்கான நேரம்.

மாநில அரசோ மத்திய அரசோ அந்தத் தாயின் துயரங்களுக்கு பதில் சொல்லியாக வேண்டிய காலமும் ஒன்று வரும்.

அதற்குக் கட்டியம் கூறுவதைப் போல நாம் சொல்லியாக வேண்டிய பொன்னான இரு வரிகளும் இருக்கிறது.

அதுதான் :

அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் அன்றே
செல்வத்தை தேய்க்கும் படை.

காலம் கடந்தும் நிற்கும் வள்ளுவனின் மகத்தான வரிகள்.

இதற்கு அர்த்தம் புரியாதவர்கள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு எழுதிக் கேளுங்கள்.

அர்த்தம் புரிந்தவர்கள் சோனியாவுக்கு எழுதி அனுப்புங்கள்.

அவ்வளவே.

(Visited 335 times, 250 visits today) }
You can leave a response, or trackback from your own site.

(Visited 335 times, 250 visits today) } You can leave a response, or trackback from your own site.





மேலதிக செய்திகள்
மே 7th, 2010


Powered by WorldTamils | Donate me Tamil Media

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக