சனி, 15 மே, 2010

பணிக்குச் செல்லும் பிள்ளைகளை படிக்க வைக்க ஒரு வழி



ஓருநாள் நான் காரில் சென்று கொண்டிருக்கும்போது, சிக்னலுக்காகக் காத்திருந்தேன். காரின் ஜன்னல் கண்ணாடியைத் தட்டும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். ஒரு சிறுமி கையேந்தினாள். குழந்தைகளை இப்படி பிச்சை எடுக்க அனுப்புகிறார்களே என்று ஒரு விநாடி கோபம் வந்தது. பின்பு என்னை நானே சமாளித்துக்கொண்டு, சில சில்லரைகளைப் போட்டேன். அதற்குள் சிக்னல் விழுந்தது. வண்டிகள் நகரத் தொடங்கின. நகரும் வண்டிகளையும் பொருள்படுத்தாமல் அந்தச் சிறுமி குறுக்கில் ஓடினாள். அப்படி அவசரமாக அவள் எங்கு செல்கிறாள் என்று பார்த்தேன். மறுபக்கம் அவளது தாயிடம் சென்று தான் பெற்ற சில்லரைகளைக் கொடுத்தாள். அவள் தாயின் முகத்தில் மகிழ்ச்சி. அந்தச் சிறுமியை அரவணைத்துக் கொண்டாள்.குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானதும் தன் பெற்றோரைக் கவனிக்கிறாரா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும், எந்தக் குழந்தையுமே தங்கள் தாயின் முகத்தில் வருத்தத்தைப் பார்க்க விரும்புவதில்லை. அப்படிப் பார்த்தால் அவர்கள் மனம் படாத பாடு படுகிறது. தங்கள் பெற்றோர்கள்தான் அவர்களுடைய உலகம். எனவே, தனக்கு அடுத்த வேளைக்கு உணவளிக்க பெற்றோர்கள் சிரமப்படுகிறார்கள், அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம்தான் பெரும்பாலான சிறுவர்களை வேலைக்குச் செல்லும் கட்டாயத்துக்கு உள்படுத்துகிறது.குழந்தைகளை வேலைக்கு அனுப்பக்கூடாது என்று பேசப்படுகிற பெரிய பெரிய மாநாடுகளில்கூட, எடுபிடி வேலைகளில் குழந்தைகள் ஈடுபடுவதை நாம் காண்கிறோம். பெரிய பெரிய நிறுவனங்களில் தூய்மை துப்புரவு சம்பந்தப்பட்ட பணிகள் வெளி ஆள்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் அளிக்கப்படுகிறது.அந்த ஒப்பந்தத்தில் குழந்தைகளைப் பணியில் அமர்த்தக் கூடாது என்ற கட்டுப்பாடும் உள்ளது. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகள் ஒப்பந்த அளவில்தான் இருக்கின்றனவே தவிர நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. அப்படி வேலை செய்யும் குழந்தைகளை அழைத்து விசாரித்தால் வீட்டு நிலவரத்தின் காரணத்தால் வேலைக்கு வருவதாகக் கூறுகின்றனர்.இதில் இன்னும் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், அப்படி குழந்தைகளை வேலைக்கு அமர்த்துபவர்கள் சட்டத்தைக் காட்டி பிள்ளைகளிடம் கூறுகின்றனர் - "சட்டப்படி உங்களை வேலைக்கு அமர்த்தினால் எங்களுக்குத் தண்டனை கிடைக்கும். இருப்பினும் உங்களுக்கு உதவுவதற்காக உங்களை வேலையில் சேர்த்துக் கொள்கிறோம். நாளைக்கு ஏதாவது மாட்டிக் கொண்டால் ஆபத்துதான்‘.இதைக் கேட்டு சிறுவர்களும், முதலாளி தமக்கு ஏற்படும் இன்னலைச் சகித்துக் கொண்டு தங்களுக்கு உதவுவதாகக் கருதி அவர்களிடம் விசுவாசமாக நடந்து கொள்கின்றனர். அப்படியிருக்கும் சிறுவர்கள் பல இடங்களில் அதிக அளவில் கசக்கிப் பிழியப்படுகின்றனர். உலகமறியா சிறுவர்கள், ஒருபக்கம் வீட்டுச் சுமையைச் சுமந்துகொண்டும் மறுபக்கம் முதலாளியின் நன்றிக் கடனைச் சுமந்துகொண்டும் பாடுபடுவதைக் கண்டால் மனம் வேதனை அடைகிறது. இதற்கு வழி என்ன? குழந்தைகளை வேலைக்கே அமர்த்தக் கூடாது என்ற சட்டம் இந்த நிலையை மாற்றுமா? அப்படி மாற்றியிருந்தால் இன்று எல்லா குழந்தைகளும் பள்ளிக்கூடத்தில்தானே இருக்க வேண்டும். ஆக பெற்றோரின் பொருளாதார நிலை சீர்பட்டால் ஒழிய இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது மிகவும் கடினமான ஒன்றுதான்.இங்கு மகாத்மா காந்தி நடத்திய "டால்ஸ்டாய் ஃபார்ம்' நினைவுக்கு வருகிறது. காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் நிற வெறியை எதிர்த்து சத்யாகிரகம் செய்பவர்களுக்காக "டால்ஸ்டாய் ஃபார்ம்' என்ற சத்யாகிரக கூடத்தை நிறுவினார். இங்கு சத்யாகிரகப் போராட்டம் நடத்தி, சிறைக்குச் சென்ற குடும்பத்தினரும் அவர்களது குழந்தைகளும் தங்கி இருந்தனர். சமைப்பது, துணி துவைப்பது மற்ற சுகாதாரப் பணிகளைப் பார்ப்பது என்ற தினசரி வேலைகளைத் தவிர கூடாரம் அமைப்பது, தனக்குத் தேவையான காலணிகள் தயாரிப்பது போன்ற வேலைகளும் சத்யாகிரகிகளே செய்து கொள்ள வேண்டும் என்பது அவர்கள் தங்களுக்கு விதித்துக் கொண்ட விதியாகும்.அப்படியிருக்கும்போது, பிள்ளைகளும் ஆசிரமப் பணிகளில் ஈடுபட்டனர். அப்படி ஈடுபட்ட குழந்தைகள் தங்கள் படிப்பை இழந்துவிடக் கூடாது. குழந்தைப் பருவ விளையாட்டுகளை அவர்கள் தவறவிட விட்டுவிடக் கூடாது என்று எண்ணிய காந்திஜி இதற்கான ஓர் ஏற்பாட்டைச் செய்தார். அதாவது ஆசிரமத்தில் ஓரளவு படித்தவர்கள் தினமும் மதிய வேளைகளில் இந்தப் பிள்ளைகளுக்குப் படிப்பு சொல்லித் தர வேண்டும். தவிர அவர்களுடன் விளையாடவும் வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படி ஆசிரமத்தின் அனைத்துக் குழந்தைகளுக்கும் தினமும் பாடம் கற்பிக்கப்பட்டது. காந்திஜியும் கற்பித்தார். இதில் விசேஷம் என்னவென்றால், பெற்றோரின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில், குழந்தைகளின் மதங்களுக்கு ஏற்ப அவரவர் மத நூல்களும் அவர்களுக்குச் சொல்லித் தரப்பட்டது. இப்படிப் படித்த பிள்ளைகள் பிற்காலத்தில் நல்ல நிலையில் இருந்தார்கள் என்று காந்தியே கூறியிருக்கிறார்.நாமும் இந்த வழியை ஏன் பின்பற்றக்கூடாது? பிள்ளைகளைப் பணியில் அமர்த்தவே கூடாது என்பதற்குப் பதிலாக அப்படி அமர்த்தப்படும் பிள்ளைகள் படிப்பதற்கான வசதிகளை நிர்வாகம் செய்து தர வேண்டும் என்று விதிமுறை செய்யலாம் அல்லவா.இப்படிப்பட்ட பிள்ளைகளுக்காக அரசாங்கமே அங்கங்கு பகுதி நேரப் பள்ளிகளை நடத்தலாம். பிள்ளைகளின் பள்ளிக்கான செலவுகளையும், படிப்பதற்கான செலவுகளையும் நிர்வாகம் ஏற்க வேண்டும்.இப்போது மத்திய அரசு அலுவலகங்களிலும் வங்கிகளிலும் ஊழியர்களுக்கான பல பயிற்சிகள் வேலை நேரத்திலேயே நடத்தப்படுகின்றன. இதைப்போன்றே காலை 10 மணி முதல் 5 மணி வரை பணிநேரம் என்றால் அதில் மதியம் 3 முதல் 5 வரை படிப்புக்காகச் செலவிடப்பட வேண்டும்.இப்படிச் செய்யும்போது பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கும் உதவ முடியும் தன்னையும் உயர்த்திக் கொள்ள முடியும். அப்படிச் செய்யும் நிர்வாகம் பணிநேரம் முடிந்து ஒரு மணிநேரம் விளையாடவும் வசதி செய்து தர வேண்டும்.
கருத்துக்கள்

Similar suggestion of educating children was (hope it is still being practised) practised when Mr.Iraianbu IAS was collector in Kanchipuram. Such good persons are very rare in power..

By siva
5/15/2010 4:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக