திங்கள், 10 மே, 2010

இதன் பெயரா ஜனநாயகம்? : தலையங்கம்



சுதந்திரம் பெறுவதற்கும் தன்னாட்சி செய்யவும் இந்தியர்கள் தகுதியில்லாதவர்கள் என்கிற முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் கூற்று, இந்தியா சுதந்திரம் பெற்ற முதல் 20 ஆண்டுகளில் நிரூபிக்கப்பட்டிருந்தால் கூடப் பரவாயில்லை. அப்போது பெருவாரியான இந்தியக் குடிமக்கள் கல்வியறிவு இல்லாமல், இந்தியப் பொருளாதாரம் மிகவும் பின்தங்கியிருந்த காலம். ஆனால், உலக வல்லரசாகத் துடிக்கும் ஒளிரும் இந்தியா மக்களாட்சியின் அடிப்படை உணர்வையும், செயல்பாட்டையும் தெரிந்து கொள்ளாத நிலையில் இருப்பதுதான் தலைகுனிவை ஏற்படுத்துகிறது.நாடாளுமன்ற விவாதம் நடக்கும்போது நாள்தவறாமல் வந்தமர்ந்து விவாதங்களில் கலந்து கொள்வதைத் தனது கடமையாகக் கொண்டிருந்தார் முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு. அன்றைய எதிர்க்கட்சி வரிசையில் ராம் மனோகர் லோகியா, ஆச்சாரிய கிருபளானி, என்.ஜி. கோரே, மது லிமயே, மது தண்டவதே, என்.ஜி. ரங்கா, மினு மசானி, எஸ்.ஏ. டாங்கே, பி. ராமமூர்த்தி, ஏ.கே. கோபாலன், பூபேஷ் குப்தா, ஜோதிர்மாய் பாசு, இந்திரஜித் குப்தா, அறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைசிறந்த நாடாளுமன்றவாதிகள் அமர்ந்திருந்தனர்.எந்தவொரு பிரச்னையிலும் காரசாரமான விவாதங்கள், வாதப் பிரதிவாதங்கள், அரசின் செயல்முறைகளைத் துளைத்தெடுக்கும் கேள்விக்கணைகள். குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர்கள் உரையாற்றும்போது தவறாமல் வந்தமர்ந்து விடுவாராம் பண்டித நேரு. எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளில் நியாயம் இருந்தால் அரசுத் தரப்பில் விளக்கங்கள் போதவில்லை என்று கருதினால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்குப் பிரதமர் நேரு தலை வணங்கிய சந்தர்ப்பங்கள் ஏராளம். நல்லாட்சியை ஆளும் தரப்பும் எதிர்க்கட்சி தரப்பும் இணைந்து உறுதிப்படுத்துவது என்பதுதான் மக்களாட்சித் தத்துவத்தின் அடித்தளம் என்று பிரதமர் நேருவே பல தடவை தனது நாடாளுமன்ற உரைகளில் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.பல பிரச்னைகளில், நடைமுறைகளில் நாம் "அது அந்தக் காலம்' என்று ஏக்கப் பெருமூச்சு விடுவது என்பது வேறு. மக்களாட்சித் தத்துவத்தில் அடிப்படையான நாடாளுமன்ற நடைமுறைகளில் "அது அந்தக் காலம்' என்று ஏக்கப் பெருமூச்சு விடுவது என்பது நமது அடித்தளம் ஆட்டம் காண்கிறது என்பதற்கான அறிகுறியல்லவா? இதைப் பற்றி நாம் சிந்திப்பதுகூட இல்லையே, ஏன்?கடந்த வெள்ளியன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்தது எப்படி என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? எந்தவித விவாதமும் இன்றி, காதும் காதும் வைத்ததுபோல ஐந்து முக்கியமான மசோதாக்கள் கடைசி இரண்டு நாள்களில் நிறைவேற்றப்பட்டது பல உறுப்பினர்களுக்கேகூடத் தெரியுமா என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.ஒருபுறம், மத்திய தகவல் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா மீதான ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டு இரு அவைகளையும் ஸ்தம்பிக்க வைத்திருந்தது. திரிணமூல் காங்கிரஸ் அமைச்சருக்கு எதிரான கோஷங்களை இடதுசாரிகள் எழுப்பிய வண்ணம் இருந்தனர். இதையே ஒரு சாக்காக வைத்துப் பல முக்கியமான மசோதாக்களை விவாதம் எதுவுமே இல்லாமல் நிறைவேற்றிக் கொண்டுவிட்டது மத்திய அரசுத் தரப்பு.""முதலில் அவையை ஒழுங்குக்குக் கொண்டு வாருங்கள். அதற்குப் பிறகு இந்த மசோதாக்களைத் தகுந்த விவாதத்துக்குப் பிறகு நிறைவேற்றுங்கள். மக்களைப் பாதிக்கும் பல விஷயங்கள் வெளிப்படுத்தப்படாமலே மசோதா நிறைவேறுவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்'' என்று சில மூத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைத் தலைவர் மீரா குமாரிடம் மன்றாடிக் கொண்டிருக்கும்போது, எதையுமே சட்டை செய்யாமல் சட்டம் மெத்தப் படித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் சிறுபான்மை கல்வி நிலையங்களுக்கான தேசிய கமிஷனின் சட்டத்திருத்த மசோதாவைத் தாக்கல் செய்து நிறைவேற்றிக் கொண்டார்.தொடர்ந்து, மத்திய எரிசக்தி அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தன் பங்குக்கு, எரிசக்தி பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றிக் கொண்டார். ஏழே நிமிடங்களில் இரண்டு முக்கியமான மசோதாக்களை நிறைவேற்றி சரித்திரம் படைத்தது இந்திய நாடாளுமன்றம்.தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டச் சட்டத்திருத்த மசோதா, பணிக்கொடை (கிராச்சுவிடி) வழங்கும் மசோதா மற்றும் மருத்துவப் பரிசோதனைச் சாலைகள் பதிவு மற்றும் நெறிப்படுத்துதல் மசோதா ஆகியவை விவாதமே இல்லாமல் நிறைவேற்றப்பட்ட ஏனைய மூன்று மசோதாக்கள். சந்தடிச் சாக்கில், கடந்த 18 ஆண்டுகளாக இப்போது அப்போது என்று சாமர்த்தியமாக ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலும் தாக்கல் செய்யப்படாமலே நழுவி (தடுக்கப்பட்டு) வந்த லாட்டரி தடைச் சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டுவிட்டது.எதிர்க்கட்சிகள் பொறுப்பில்லாமல் இருப்பதுகூட மன்னிக்கப்படலாம். அரசின் தவறுகளை விமர்சிப்பதும், எதிர்ப்புக் குரல் எழுப்புவதும் எதிர்க்கட்சிகளின் உரிமை என்றால், நியாயமான விவாதங்கள் மூலம் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை எதிர்கொள்வது ஆளும் கட்சியின் கடமை. எதிர்க்கட்சிகளைச் சமாதானப்படுத்தி அரவணைத்துச் செல்வதும், முறையான விவாதங்களுக்கு வழிகோலுவதும்தானே மத்திய அரசில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற விவகார அமைச்சரின் பொறுப்பு?எதிர்க்கட்சிகள் செய்யும் குழப்பங்களைச் சாதகமாக்கி விவாதமில்லாமல் தனது மசோதாக்களை அரசு நிறைவேற்றிக் கொள்வது என்பது தவறான முன்னுதாரணம் வகுப்பதுடன், நாடாளுமன்ற நடைமுறையின் நியாயத்தையே கேலிப்பொருளாக்கும் செயல். தேவையில்லாமல் நாடாளுமன்றக் கூட்டங்களை நடத்தி மக்களின் வரிப்பணம் வீணாக்கப்படுகிறது. வின்ஸ்டன் சர்ச்சிலின் கூற்றை மெய்ப்படுத்தி விடாதீர்கள் என்பதுதான் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு "தினமணி' விடுக்கும் வேண்டுகோள்.
கருத்துக்கள்

தினமணியின் வேண்டுகோள் சரியே! ஆனால், விவாதம் இன்றிச் சட்ட வரைவுகளை ஏற்றுச் சட்டமாக்குவது முதல் முறையன்று. இதே போன்ற அவலங்கள் தமிழகச் சட்டமன்றத்திலும் அரங்கேறியுள்ளன. எனவே தினமணி தன்னுடைய இந்த உரையைப் பிற மொழிகளில் மொழி பெயர்த்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனைத்து மாநிலங்களின் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் மேலவை உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். சிலராவது விழிப்புணர்வு பெற்றுத் தம் கடமையை ஆற்ற முன்வரலாம் அல்லவா? விவாதம் இன்றி ஏற்கப்படும் சட்டம் செல்லாது என்று ஒரு சட்டம் கொண்டு வரலாமே!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/10/2010 4:20:00 AM

Tes, your editorial reflects the correct situation and proves Churchil right . Any wat, we have lost our worthiness for self governance long lonh ago.

By ankandasamy
5/10/2010 2:28:00 AM

அரசின் தவறுகளை விமர்சிப்பதும், எதிர்ப்புக் குரல் எழுப்புவதும் எதிர்க்கட்சிகளின் உரிமை என்றால், நியாயமான விவாதங்கள் மூலம் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை எதிர்கொள்வது ஆளும் கட்சியின் கடமை. சுதந்திரம் பெறுவதற்கும் தன்னாட்சி செய்யவும் இந்தியர்கள் தகுதியில்லாதவர்கள் என்கிற முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் கூற்று, இந்தியா சுதந்திரம் பெற்ற முதல் 20 ஆண்டுகளில் நிரூபிக்கப்பட்டிருந்தால் கூடப் பரவாயில்லை. வல்லரசாகத் துடிக்கும் ஒளிரும் இந்தியா மக்களாட்சியின் அடிப்படை உணர்வையும், செயல்பாட்டையும் தெரிந்து கொள்ளாத நிலையில் இருப்பதுதான் தலைகுனிவை ஏற்படுத்துகிறது

By naam tamilar
5/10/2010 1:51:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக