திங்கள், 10 மே, 2010


கருத்துக்களம்: பாமரர்களை பழி வாங்கவா இ-டிக்கெட்?



இந்திய வளர்ச்சியின் அடையாளமாகச் சொல்லப்படுவது ரயில். இப்போது அது லாபம் ஈட்டும் துறையாகவும் மாறியிருக்கிறது. மக்களின் சேவைக்காகத் தொடங்கப்பட்ட பல துறைகள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வரும்போது ரயில்வே மட்டும் லாபம் ஈட்டும் துறையாக மாறியிருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைச் சரியாகப் பயன்படுத்துவது. ரயில்கள் மற்றும் ரயில்பாதைகளைக் கண்காணிப்பது, ரயில் நிலையப் பாதுகாப்பைப் பலப்படுத்துவது போன்றவற்றுக்கு இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியை ரயில்வே பயன்படுத்திக் கொள்கிறது. ஆயினும், அவற்றையெல்லாம் தாண்டி ரயில்வேயின் வியாபாரத்துக்குத்தான் தகவல் தொழில்நுட்பம் அதிகமாகப் பயன்படுகிறது என்பதுதான் உண்மை. இ-டிக்கெட் மற்றும் ஐ-டிக்கெட் என்ற இரு வகையான டிக்கெட்டுகளை இணைய தளத்தின் வழியாக ரயில்வே விற்கிறது.பலர் நெட்டில் சொடுக்கி எடுக்கும் ரயில்வே இ-டிக்கெட்டை ஒரு வரப்பிரசாதமாகக் கருதுகின்றன. அதிகாலையிலேயே கவுன்டரில் கியூவில் நிற்கவேண்டியதில்லை. நம்முறை வரும்போது மட்டும் நெட்வொர்க் கோளாறு என்றோ பேப்பர் காலியாகிவிட்டது என்றோ துரதிருஷ்டத்துடன் மல்லுக்கட்ட வேண்டியதில்லை.ஆனால், எல்லோருக்கும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு வாய்த்திருக்கிறதா என்றால், நிச்சயமாக இல்லை. இ-டிக்கெட் எடுக்க வேண்டுமெனில் இணையத்தைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். கூடவே வங்கிக் கணக்கும் வைத்திருக்க வேண்டும். பக்கம் பக்கமாக எழுதப்பட்டிருக்கும் ரயில்வேயின் இ-டிக்கெட் விதிமுறைகளையும் கரைத்துக் குடிக்க வேண்டும். இவர் இன்னார்தான் என்பதற்கான அடையாள அட்டையை மறந்துவிடக்கூடாது. இதற்கெல்லாம் தயாராகாமல் இ-டிக்கெட் எடுக்க முயற்சிப்பது, தரையில் நீச்சலடிப்பது போன்றதுதான்.விழா நாள்களுக்கான முதல்நாள் ரயில்வே முன்பதிவு காலை 8 மணிக்குத் தொடங்குகிறது என்றால் 10 நிமிடத்துக்குள் டிக்கெட்டுகள் காலியாகிவிடுகின்றன. அதே நேரத்தில் கவுன்டரில் தவம் கிடப்போருக்கு ஏமாற்றம்தான். பலமுறை கவுன்டர்களில் காத்திருந்து டிக்கெட் கிடைக்காமல் ஏமாந்தவர்கள், இப்போது முகவர்களையும் இன்டர்நெட் மையம் நடத்துவோரையும் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைமையைப் பயன்படுத்தி, பாமரர்கள் மீது தங்களது வியாபார உத்திகளை முடிந்தவரை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார்கள் இந்த முகவர்கள். வெயிட்டிங் லிஸ்ட் எனப்படும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள இ-டிக்கெட்டை கொடுத்து ரயிலில் ஏறச் சொல்வார்கள். ஆனால், ரயில் கிளம்பும் வரை அது வெயிட்டிங் லிஸ்டிலேயே இருக்கும். இ-டிக்கெட் விதிப்படி வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட், வெறும் பேப்பர்தான். அதைக் கொண்டு ரயிலில் ஏற முடியாது. நாம்தான் பணம் கொடுத்துவிட்டோமே என ரயிலில் ஏறிச், சிக்கிக் கொள்ளும் பாமரர்கள் தண்டம் கட்டுவார்கள். பரிசோதகரிடம் எச்சரிக்கைக்கு ஆளாவார்கள். தன்முனைப்பைக் காட்டினால், அடுத்த நிலையத்தில் இறக்கி விடப்படுவார்கள்.முகவர்களிடம் இ-டிக்கெட் வாங்கும் கிராமத்துக்காரர்கள் சிலர், ரயிலில் பரிசோதகர் வரும்போது, கம்பீரமாக டிக்கெட்டைக் காட்டுவார்கள். ஐ.டி. கார்டு எங்கே என்று கேட்டால் திருதிருவென விழிப்பார்கள். பரிசோதகர் வழக்கமான சட்டத்தைப் பேசுவார். 300 ரூபாய் டிக்கெட்டுக்கு 500 ரூபாய் கட்டச் சொல்வார். அந்தப் பாமரனின் அறியாமை, ரயில்வேயின் வருவாயாகிறது.இ-டிக்கெட் பற்றி அறிந்திராத, தொழில்நுட்பம் தெரியாத, பணவசதி இல்லாத கூட்டம்தான் நாட்டில் அதிகம். அவர்களில் பெரும்பாலானோர் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளில் செல்வோர்தான். ஏதோ அவசரத்துக்காகவும், வேறு வழியில்லாமலும்தான் அவர்கள் முன்பதிவு செய்யப்படும் பெட்டிகளில் செல்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் முழுமையான விழிப்புணர்வு ஏற்படும்வரை, இ-டிக்கெட்டுக்கும் கவுன்டரில் எடுக்கப்படும் சாதாரண டிக்கெட்டுக்கும் குறிப்பிட்ட விகிதத்தில் டிக்கெட்டுகளை ஒதுக்குவது பற்றி ரயில்வே யோசிக்கலாம். மோசடி செய்யும் முகவர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம். அடையாள அட்டை விஷயத்திலும் கொஞ்சம் கரிசனம் காட்டலாம். எந்த வகையிலும், காந்தியைப் போல ரயிலில் இருந்து பாமரர்கள் இறக்கிவிடப்படக்கூடாது என்பதுதான் கோரிக்கை.
கருத்துக்கள்

மி.சீட்டை வாங்கி அப்போது அது காத்திருப்புப் பட்டியல் பதிவை மட்டுமே காட்டி பயண நாள் பட்டியல் உருவாகும் வரை சீட்டு உறுதி செய்யப்படாவிட்டால் அது தானாகவே நீக்கம் செய்யப் பெற்று உரிய கட்டணம் இருநாளில் திரும்பக் கிடைத்து விடும். ஆனால் அதுவல்ல சிக்கல். பயண நாளின் பொழுது பட்டியல் உருவாக்கப்பட்ட பின்பு நீக்கப்பட்டு காலியாகின்ற சீட்டுகள்,இறுதி நேரத்தில் வராமையால் காலியாகும் சீட்டுகள் ஆகியவற்றில் இயல்பான சீட்டு எடுத்தவர் பயணம் மேற்கொள்ள முடியும். ஆனால் மி.சீட்டு எடுத்தோர் கையில் வைத்திருப்பது விதிக்கிணங்க வெற்றுத்தாள் என்பதால் பயணம் மேற்கொள்ள இயலாது. நாலைந்து முறை இது போன்ற நேர்வு ஏற்பட்டு உரிய புதிய சீட்டு எடுக்க நேரமின்றி அதே நேரம் தொடர்வண்டியில் இருக்கையோ படுக்கையோ காலியாக இருந்தும் பேருந்தில் அல்லல்பட்டு சீட்டு வாங்கிப் பயணம் செய்த துன்பங்களைச் சந்தித்திருக்கின்றேன். இத்தகைய துன்ப நேர்வுகளை நீக்க உரிய மாற்று நடவடிக்கையை எடுக்க வேண்டும். பயண ஆய்வாளர்கள் அலைபேசி மூலமாக இணையத் தொடர்பில் காலாவதியாகும் காத்திருப்போர் சீட்டுக்கு உயிர் கொடுத்து அதே சீட்டிலேயே பயணம் செய்ய வகை செய்ய வேண்டும்

By Ilakkuvanar Thiruvalluvan
5/10/2010 4:54:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக