தமிழகமெங்கும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நலிந்தோர் நலன் பெருகும் வகையில் கலைஞரின் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு சிறப்புடன் செயலாற்றி வருகிறது.ஏழை எளியோர்களின் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான இந்த உன்னதத் திட்டம், குறிப்பாக பட்டியலிடப்பட்ட நோய்களுக்காக எவ்வித செலவுமின்றி வழிவகை செய்கிறது. மிகப்பெரிய கடுமையான கொடிய நோய்க்கு ஆளானவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் இத்திட்டம்.அதேநேரத்தில் நாள்தோறும் மருந்து மாத்திரைகள் வாங்கி அல்லல்படும் மக்களுக்குச் சலுகை விலையில் மருந்து மாத்திரைகளை வழங்கினால் எண்ணற்றோர் பயன்பெறுவர்.அத்தியாவசிய மருந்துகள், ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் குறைந்த விலையில் பெறவும் நலிந்துள்ள அரசு மருந்து நிறுவனங்களை லாபகரமாக்குதல் என இரட்டைப்பலன்கள் கொண்ட ஒரு புதிய திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதுடன், தமிழகத்தில் உடனடியாக அமல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் மிகப்பெரிய சுமை தன் பிள்ளைகளின் படிப்புச் செலவு மற்றும் மாதம்தோறும் செலவாகும் மருந்து மாத்திரைகள் செலவு.அதிலும் குறிப்பாக, முதியோர்கள் தங்களுடைய ஓய்வூதியத்தில் சரிபாதித் தொகைக்கும் மேலாக மருந்துமாத்திரைகள் வாங்கச் செலவிட வேண்டியுள்ளது.ஓய்வூதியம் பெறாத முதியோர் நிலையோ கவலைக்கிடம்.இன்றைய நிலையில் சாதாரண காய்ச்சல் என்றால்கூட மருந்து மாத்திரைகள் வாங்க 100 ரூபாய்க்கும் அதிகமாகச் செலவிட வேண்டியுள்ளது.மருந்தின் அடக்கவிலை சில பைசாக்கள்தான். விற்பனைக்கு, சந்தைக்கு வரும்போது பல ரூபாய்களாக 300, 400 சதவிகித லாபத்தில் சந்தையில் விற்பனைக்கு விடுக்கின்றன மருந்து நிறுவனங்கள்.எனவே, பொதுமக்கள் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் மருந்துகள் விலை குறைய வேண்டும். நோயற்ற வாழ்வு பெற வேண்டும் என்பதன் அடிப்படையில் முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது "ஜன் ஒளஷதி' (மக்களுக்கு மருந்து) என்கிற பெயரிலான நலத்திட்டம் சோதனை ரீதியாகத் தொடங்கப்பட்டது.முதல்கட்டமாக ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது.அரசு மருந்து நிறுவனங்கள் ஐ.டி.பி.எல்., ராஜஸ்தான் டிரக்ஸ் அன்ட் பார்மசூட்டிகல்ஸ், பெங்கால் கெமிக்கல்ஸ் போன்றவை தயாரித்த மருந்துகள் சலுகை விலையில் இந்தக் கடைகளில் விற்கப்பட்டன.மத்திய அரசிடம் லைசென்ஸ் பெற்ற தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், ரெட்கிராஸ் அமைப்பினர் ஆகியோர் இந்தக் கடைகளை நடத்தி வருகின்றனர். விற்பனை வருமானத்தில் அவர்களுக்கு 20 சதவிகிதம் கமிஷனாக அளிக்கப்படுகிறது."ஜன் ஒளஷதி' கடைகளில் மருந்து விலை எந்த அளவுக்குக் குறைவு என்பதற்கு ஓர் உதாரணம். இக் கடைகளில் 60மிலி பாராசிட்டமால் சிரப் விலை ரூ. 8.10 காசு. இதுவே ஏதாவது நிறுவனத்தின் பிராண்ட் பெயரில் இதே மருந்தை மற்ற மருந்துக் கடைகளில் வாங்குவதாக இருப்பின் ரூ. 14 முதல் ரூ. 18 வரை ஆகும்.சலுகை விலையில் தரமான மருந்துகள் கிடைத்ததால் "ஜன் ஒளஷதி' கடைகளுக்கு அமோக வரவேற்பு.பஞ்சாபில் ஒரு "ஜன் ஒளஷதி' கடையில் மாதம்தோறும் சராசரியாக ரூ. 4 லட்சத்துக்கு வர்த்தகம் நடக்கிறது. இதனால் அரசு மருந்து நிறுவனங்களும் லாபம் ஈட்டத் தொடங்கிவிட்டன."ஜன் ஒளஷதி' திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய சிறப்புக் குழு ஆய்வு நடத்தி, முழு திருப்தி என அறிக்கை அளித்துள்ளது. இதையடுத்து இத்திட்டத்தை நாடு முழுவதும் பரவலாக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.பொதுவான நோய்களுக்கான 232 மருந்துகள் தற்சமயம் அரசுத்துறை மருந்து நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் இந்த மருந்துகள் உள்பட மொத்தம் 350 மருந்துகள் இடம்பெற்றுள்ளன.இந்தப் பட்டியலில் இருக்கும் விடுபட்டுள்ள மற்ற மருந்துகளையும் அரசு மருந்து நிறுவனங்கள் மூலம் தயாரிக்கலாம்.இத்தகைய "ஜன் ஒளஷதி' மருந்துக் கடைகளை தமிழகம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் திறக்க தமிழக அரசு உரிய நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும்.கடைகள் தொடங்குவது சிரமமெனில், மருத்துவமனைகளுடன் சேர்ந்து இயங்குகிற மருந்துக்கடைகளில் இத்தகைய மருந்துகள்தான் விற்பனை செய்ய வேண்டும் என்கிற கட்டுப்பாட்டினை உடனே அமல்படுத்தலாமே அல்லது தன்னார்வ அமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றைக் கொண்டு "ஜன் ஒளஷதி'மருந்துக் கடைகளைத் தொடங்கலாமே.இயலுமாயின், இத்தகைய மருந்து தயாரிப்பு நிறுவனங்களை தமிழக அரசே அமைத்து லாபமும் ஈட்டலாம். மக்களுக்குச் சேவையும் ஆற்றலாம்.நோய்நாடி நோய் முதல்நாடி என்கிற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, கொடிய நோய்க்கு ஆட்படும் முன்னரே மக்களைப் பாதுகாக்கும் வகையில் சலுகை விலை மருந்துப் பொருள்கள் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.இன்று தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் கலைஞரின் காப்பீட்டுத் திட்டம் பெற்றிருக்கிற தாக்கத்தைவிட 100 மடங்கு அதிகமாக நல்லெண்ணத்தை பட்டிதொட்டியெங்கும் பெற்றிட இந்தச் சலுகைவிலை மருந்துப்பொருள்கள் திட்டத்தை விரைவாக அமல்படுத்திட தமிழக அரசு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
கருத்துக்கள்
பாராட்டப்படவேண்டிய, பின்பற்றப்படவேண்டிய நல்ல கட்டுரை. பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/14/2010 3:46:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்5/14/2010 3:46:00 AM