புதன், 12 மே, 2010

செம்மொழி மாநாடு: மாநாட்டில் முதல்வரின் பேத்தி பங்கேற்கும் வீணை நிகழ்ச்சி



உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் பொது அரங்கில் முதல்வர் கருணாநிதியின் பேத்தி எழிலரசி ஜோதிமணியின் வீணை நிகழ்ச்சி, பத்மா சுப்ரமணியம் உள்ளிட்டவர்களின் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சுற்றுலாத் துறை அமைச்சர் என்.சுரேஷ்ராஜனின் தலைமையிலான கலை நிகழ்ச்சி மற்றும் சுற்றுலாக் குழுவின் மூலம் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. மாநாட்டின் பொது அரங்கில் கலை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடிய கலைஞர்கள், அவர்களுக்கான நேரம், ஒரு குழுவில் எத்தனை கலைஞர்கள் பங்கேற்கின்றனர் என்பவையும் முழுமையாக இறுதி செய்யப்பட்டுவிட்டன.கலை நிகழ்ச்சிகள் ஜூன் 19-ம் தேதி தொடங்கி மாநாட்டு நிறைவு நாளான ஜூன் 27-ம் தேதி வரை நடைபெறுகின்றன.முதல்வர் கருணாநிதியின் பேத்தி செல்வி எழிலரசி ஜோதிமணி பங்கேற்கும் வீணை நிகழ்ச்சி ஜூன் 24 மற்றும் ஜூன் 25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் 6 கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.போர்வாளா, பூவிதழா என்ற தலைப்பில் பத்மா சுப்பிரமணியம் குழுவினரின் நிகழ்ச்சியும், பிறப்பொக்கும் என்ற கலை நிகழ்ச்சி பிரசன்ன ராமசாமி குழுவினரும், புஷ்பவனம் குப்புசாமியின் தமிழிசை மற்றும் மக்களிசை நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருந்தோம்பல் குழுவின் மூலம் கலைக் குழுவினருக்கு உணவு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இதுதவிர மாநாட்டு தொடக்க விழாவுக்கு முன்னதாக 3 நாள்களுக்கு கோவை நகரில் 10 இடங்களில் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
கருத்துக்கள்

அடுத்தவருக்கு ஒரு நீதி! தனக்கொரு நீதி என்பதே அரசியல்வாதிகளின் பண்பாடா? பத்மா சுப்பிரமணியம் விழா ஒன்றிற்கு வாழ்த்துரை கேட்ட செயலரைக் கண்டித்து அதனைப் பெருமையாக வெளிப்படுத்திய முதல்வர் இன்றைக்கு அவருக்கு உலக மாநாட்டில் வாய்ப்பு தருகிறார். தனக்குப் பாதிப்பு என்றால் சாமானியனுக்கு எதிரான ஆரியச் சூழ்ச்சி என்பதும் தனக்குப்பங்கிருக்கிறது என்றால் ஆரியத்திற்கு ஆலவட்டம் அளி்ப்பதும் என்று மாறும்? பேத்தியின் வீணை அரங்கேற்றத்தின் பொழுதே முதல்வர் உலக மாநாட்டிற்கான வாய்ப்பை உறுதி செய்து விட்டார். பேத்திக்கு வாய்ப்பளிக்க வழியில்லையெனில் முதல்வர் பதவியால் என்ன பயன்? ஆனால், பத்மா சுப்பிரமணியத்திற்கு ஏன் வாய்ப்பு? ஒன்று விழாவிற்கான வாழ்த்தினை அனுப்ப மறுத்துத் தெரிவித்த வீர உரைகளைத் திரும்பப் பெற வேண்டும். அல்லது உலக மாநாட்டில் தரப்படும் வாய்ப்பைத் திரும்பப் பெற வேண்டும்.(பத்மா சுப்பிரமணியம் நாட்டிய நிகழ்ச்சி தருவதாயின் தமிழறிஞர்கள் மூலம் பொருளை நன்கு புரிந்து கொண்டு நிகழ்ச்சியை அமைக்க வேண்டுகிறேன்.) அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/12/2010 3:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக