பிரிட்டிஷ் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு எண். 10, டெüனிங் தெருவில் உள்ள அதிகாரபூர்வ இல்லத்தில் பொதுமக்களின் வாழ்த்துகளை ஏற்கிறார் டேவிட் கேமரூன்.
லண்டன், மே 12: பிரிட்டிஷ் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் டேவிட் கேமரூன் பதவி ஏற்றுக் கொண்டார். துணைப் பிரதமராக லிபரல் டெமாக்ரடிக் கட்சித் தலைவர் நிக் கிளெக் இருப்பார். பிரிட்டனில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் கூட்டணி ஆட்சி ஏற்பட்டுள்ளது.முன்னதாக, செவ்வாய்க்கிழமை முன்னாள் பிரதமர் கார்டன் பிரெüன், அரண்மனைக்குச் சென்று ராணியிடம் தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார். இதையடுத்து ஆட்சியமைக்க வருமாறு இரண்டாம் எலிசபெத் ராணி, கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் கேமரூனுக்கு அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். கட்சிக்கு ஆதரவு தரும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியில் மேலும் 4 உறுப்பினர்களுக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.கன்சர்வேடிவ் கட்சியின் மூத்த தலைவர் வில்லியம் ஹாக், வெளியுறவு அமைச்சராகவும், ஜார்ஜ் ஆஸ்பர்ன் நிதி அமைச்சராகவும் பொறுப்பேற்றனர். பாதுகாப்பு அமைச்சர் பதவி லியாம் ஃபாக்ஸிற்கு வழங்கப்பட்டது. சுகாதார அமைச்சராக ஆண்ட்ரூ லான்ஸ்லே நியமிக்கப்பட்டுள்ளார். 200 ஆண்டுகளில் மிக இளம் வயதில் பிரிட்டிஷ் பிரதமராகப் பொறுப்பேற்கும் இரண்டாமவர் என்ற பெருமையும் கேமரூனைச் சாரும். இதற்கு முன்பு லார்ட் லிவர்பூல் தனது 42-வது வயதில் பிரிட்டிஷ் பிரதமரானார். கூட்டணி அமைப்பது தொடர்பாக கடந்த 5 நாள்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியது. பெரும்பான்மையைப் பெறுவதற்காக தொழிலாளர் கட்சியும், கன்சர்வேடிவ் கட்சியும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியுடன் பேச்சு நடத்தின. இதையடுத்து 13 ஆண்டுகளாக பதவியில் இருந்த தொழிலாளர் கட்சியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தற்போதுதான் பிரிட்டனில் கூட்டணி ஆட்சி ஏற்பட்டுள்ளது. வின்ஸ்டன் சர்ச்சில் பிரதமராக இருந்தபோது உலகப் போரை முன்னிட்டு கூட்டணி ஆட்சி நடைபெற்றது.நாடாளுமன்றத்துக்கு மொத்தமுள்ள 650 இடங்களுக்கு மே 6-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மையைப் பிடிக்கவில்லை. கன்சர்வேடிவ் கட்சி 306 இடங்களையும், தொழிலாளர் கட்சி 258 இடங்களையும், லிபரல் டெமாக்ரடிக் 57 இடங்களையும் பிடித்தன. தற்போது லிபரல் டெமாக்ரடிக் கூட்டணியுடன் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியமைத்துள்ளது.கேமரூன் வாழ்க்கை வரலாறு: பங்குச் சந்தை வர்த்தகர் இயான் டொனால்ட் கேமரூன், மேரி ஃபிளெயுர் மவுண்ட் தம்பதியருக்கு 1966-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி மகனாகப் பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரர், இரண்டு சகோதரிகள் உள்ளனர். இவரது முன்னோர்கள் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள். நான்காம் மன்னர் வில்லியம் (1765-1837), ராணி விக்டோரியாவின் மாமா இவரது முன்னோர். ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் தத்துவம்,அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் 1988-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை கன்சர்வேடிவ் ஆராய்ச்சித் துறையில் பணியாற்றினார். அரசியல் மாற்றம்: பிரதமராக தனது பெயர் அறிவிக்கப்பட்டவுடன் முதலில் நிகழ்த்திய உரையில், பிரிட்டனின் அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டு வருவதுதான் தனது முதல் பணி என்று கேமரூன் குறிப்பிட்டார். இந்தியாவுடன்...: பிரிட்டன்-இந்தியா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்போவதாக புதிய பிரதமர் கேமரூன் குறிப்பிட்டார். இதற்கு முன்னர் 2006-ம் ஆண்டு கன்சர்வேடிவ் கட்சித் தலைவராக பொறுப்பேற்ற போது அவர் இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவை உறுப்பினராகச் சேர்ப்பதற்கு பிரிட்டன் ஆதரவு தெரிவிக்கும் என்று கன்சர்வேடிவ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் தான் எடுக்கப் போவதாக கேமரூன் குறிப்பிட்டார். அத்துடன் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மை நிலவ முயற்சிகள் எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.கட்சித் தலைவர் பதவி: பிரதமர் பதவியை ராஜிநாமா செய்த கார்டன் பிரெüன், கட்சித் தலைவர் பதவியையும் ராஜிநாமா செய்தார். இதைத் தொடர்ந்து தொழிலாளர் கட்சியின் தாற்காலிகத் தலைவராக ஹரீயெட் ஹார்மன் பொறுப்பேற்றார்.2007-ம் ஆண்டு டோனி பிளேரைத் தொடர்ந்து பிரதமராக பொறுப்பேற்றார் கார்டன் பிரெüன். பொதுமக்களுக்குப் பணியாற்றுவது தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக, அவர் குறிப்பிட்டார்.
கருத்துக்கள்
இங்கிலாந்தின் புதிய தலைமை அமைச்சரே உங்களுக்கு வாழ்த்துகள். உங்களின் அடிப்படைப்பணிகளில் ஒன்றாக உங்கள் முன்னோர் செய்த வரலாற்றப் பிழையைச் சரிசெய்ய வாருங்கள். தமிழர்க்கு உரிமையான இலங்கைத் தீவைச் சிங்களர்க்குத் தாரை வார்த்துக் கொடுத்ததால் தமிழினம் அழிந்து கொண்டிருக்கின்றது. இப்பொழுதும்கூட உங்கள் நாட்டினர் சிங்களத்திற்கே துணை நின்று தமிழின அழிப்பிற்கு உடந்தையாக இருக்கிறது. எனவே, உங்கள் முன்னோர் இலங்கையில் புகுந்த பொழுது இருந்த நில எல்லை அடிப்படையில் தமிழ் ஈழம் அமைய வழிவகைசெய்யுங்கள். காலம் உள்ளளவும் மக்கள் குலம் உங்களை வாழ்த்தும்! தொடங்குக தொண்டினை! ஏற்றிடுக தமிழ் ஈழ ஆட்சியை! வாழ்த்துகளுடனும் வேண்டுகோளுடனும் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/13/2010 3:47:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
5/13/2010 3:47:00 AM