சென்னை, நவ.30: தமிழகத்தில் நவம்பர் 24}ம் தேதிக்குப் பிறகு நடைபெறும் அனைத்து திருமணங்களும் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து, திருமணங்களின் தலைமைப் பதிவாளர் மற்றும் பதிவுத் துறை தலைவர் அளித்துள்ள விளக்கம்:
தமிழகத்தில் நவம்பர் 24}ம் தேதி முதல் நடைபெறும் அனைத்து மதங்களைச் சார்ந்த திருமணங்களையும் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்பது சட்டமாக்கப்பட்டு உள்ளது.
இந்து திருமணச் சட்டம், இந்திய கிறிஸ்துவ திருமணச் சட்டம், சிறப்புத் திருமணச் சட்டம், முகம்மதியர்கள் ஷரியத் திருமணச் சட்டம் மற்றும் வேறு எந்த தனிப்பட்ட சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்திருந்தாலும் அதை கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும்.
இந்தச் சட்டப்படி, சார் பதிவாளர்கள் அனைவரும் திருமணப் பதிவாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான படிவங்கள் அனைத்து பதிவு அலுவலகங்களிலும் வழங்கப்படும்.
திருமணம் நடைபெற்ற 90 நாள்களுக்குள் ரூ.100 கட்டணத்துடன் திருமணம் நடைபெற்ற இடம் அமைந்துள்ள எல்லைக்கு உட்பட்ட திருமணப் பதிவாளரிடம் பதிவு செய்ய வேண்டும். திருமணத்துக்கான சாட்சிகளின் முகவரி மற்றும் அடையாள சான்று நகல்களை இணைக்க வேண்டும்.
திருமணப் பதிவு மறுக்கப்பட்டால், அதன் மீது 30 நாள்களுக்குள் மாவட்டப் பதிவாளரிடம் மேல் முறையீடு செய்யலாம். அதில், திருப்தி இல்லாவிட்டால் அடுத்த 30 நாள்களுக்குள் பதிவுத் துறை தலைவரிடம் மேல்முறையீடு செய்யலாம். அவரது உத்தரவே இறுதியானது.
வழக்கும்...அபராதமும்...: நவம்பர் 24}ம் தேதி முதல் நடைபெறும் அனைத்து திருமணங்களும் அவை எந்த சாதி மற்றும் மதமாக இருப்பினும் உரிய நாளில் பதிவு செய்ய வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்யாவிடில் அல்லது தவறான தகவல் அளிக்கப்பட்டதாக அறியப்பட்டால் அல்லது விதி மீறல் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டு நிரூபிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று பதிவுத் துறை தலைவர் எச்சரித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு
tnreginet.net என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே திருமணப் பதிவு தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ளது. அவ்வாறு பதிந்தவர்கள்தான் கரணம்/கருணம் எனப்படும் கணக்கப்பிள்ளைகள்.பின்னர் இவர்கள் சிற்றுர் ஆட்சி தொடர்பான பிற பணிகளையும் பார்த்தனர். வழி வழியாக வந்த இப்பணி முறையைத்தான் மக்கள் திலகம் ஒழித்து விட்டு சிற்றூர் ஆட்சி அலுவலர் பதவிகளை உருவாக்கினார். திருமணப் பதிவைக் கட்டாயமாக ஆக்கி நடைமுறைப்படுத்தும் பதிவுத் துறைக்கும் அரசிற்கும் பாராட்டுகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.
12/1/2009 3:40:00 AM