புது தில்லி,டிச.2: கங்கை-காவிரி இணைப்பு திட்டம் என்று அழைக்கப்படும் தேசிய நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு 4.4 லட்சம் கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது என்பதால் அந்த திட்டம் கைவிடப்படுகிறது என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் மக்களவையில் புதன்கிழமை அறிவித்தார். அதே சமயம் ஆந்திரத்தில் கோதாவரி ஆற்றின் மீது மேற்கொள்ளப்படும் போலாவரம் பல்நோக்கு நதிநீர் திட்டம் தேசிய திட்டமாக விரைந்து அமல்படுத்தப்படும் என்றார். கங்கை - காவிரி இணைப்பு திட்டம் என்று அழைக்கப்பட்ட தேசிய நதிநீர் இணைப்பு திட்டம் சாத்தியம் இல்லாவிட்டாலும் வடக்கில் இமயமலையில் உற்பத்தியாகும் நதிகள் அவற்றின் கிளை நதிகள் ஆகியவற்றை இணைக்கும் திட்டம் தனியாகவும் தென்னிந்திய தீபகற்பத்தில் உருவாகும் நதிகளை இணைக்கும் திட்டம் தனியாகவும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இத்தகைய திட்ட அமலுக்கு சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களை அழைத்து கூட்டம் நடத்தி திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு விரைவுபடுத்தப்படும் என்றார். இந்த திட்டங்களை நெறிப்படுத்த நெறியாளர் பதவி ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மக்களவையில் நதி நீர் இணைப்பு திட்டம் குறித்த விவாதத்தைத் தொடங்கிய கே.எஸ்.ராவ் (காங்கிரஸ்) கோரியிருந்தார். அதை ஏற்க முடியாது என்று அமைச்சர் பன்சால் மறுத்துவிட்டார். இப்போதுள்ள அமைப்புகளும் ஏற்பாடுகளுமே போதும் என்று கூறிவிட்டார். அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கங்கை - காவிரி இணைப்பு திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்தது. அதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் உயர்நிலை பணிக் குழுவை நியமித்தது. அந்தக் குழுவும் இதற்கான ஆரம்பகட்டப் பணிகளில் இறங்கியது. இமயமலையில் உற்பத்தியாகி வட மாநிலங்களில் பாயும் வற்றாத ஜீவ நதிகளையும், தென்னிந்திய தீபகற்பத்தில் பாயும் நதிகளையும் இணைத்து வறட்சி, வெள்ளம் ஆகிய இரு தேசியப் பேரழிவுகளையும் ஒரு சேர சமாளிக்க இந்த நதி நீர் இணைப்புத் திட்டம் உத்தேசிக்கப்பட்டது. இந்த திட்டத்தை மத்திய அரசில் அமைச்சராக இருந்த டாக்டர் கே.எல். ராவ் என்பவரும் 50 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருந்தார். இதைச் செய்து முடிக்கும் தொழில்நுட்ப ஆற்றல் அப்போது இந்திய அரசிடம் இல்லை என்பதால் இதை நிறைவேற்றத் தயக்கம் ஏற்பட்டது. அப்போதும் நிதி நிலைமையில் பற்றாக்குறைதான் நிலவி வந்தது. நதிநீர் இணைப்பு திட்டத்தை நான் ஆதரிக்கவில்லை, அதனால் சாதகங்களைவிட பாதகங்களே அதிகம் என்று காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரான ராகுல் காந்தி சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதை ஏராளமானோர் கண்டித்திருந்தாலும் அவர் சொல்வது யதார்த்தமானது என்பதை பலர் வழிமொழிந்தனர். நதிகளை இணைப்பதற்கு கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு தேவை என்பதுடன் ஏராளமான நிலங்களைக் கையகப்படுத்த வேண்டியிருக்கும். அத்துடன் நதிநீர் இணைப்புக் கால்வாய்களை வெட்ட ஏராளமான கிராமங்களில் வாழும் மக்களை அவர்களுடைய வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்ற நேரும். விவசாய நிலங்களும் தரிசு நிலங்களும் இந்த திட்டத்துக்காக ஏராளமான அளவில் கையகப்படுத்தும்போது அது சமூக, பொருளாதார பிரச்னைகளைப் புதிதாக உருவாக்கும். எனவே கோடிக்கணக்கான பணம் விரயமாவதுடன் சமூகத்தில் அமைதியின்மையும் ஏற்படும் என்று பலர் எச்சரித்தனர். மேலும் நதிகளை அவற்றின் போக்கிலிருந்து திருப்புவதால் அதன் பாசனப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மரபணுக்களில் சிதைவுகள் ஏற்பட்டு உடல் ஊனம் போன்றவை ஏற்படுவதாகக்கூட சில ஆய்வுகள் எச்சரித்தன. இந்த நிலையில் மத்திய அரசின் புதிய முடிவு மீண்டும் பலத்த சர்ச்சையை தேசிய அளவில் ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
By Ilakkuvanar Thiruvalluvan
12/3/2009 2:22:00 AM
By pool
12/3/2009 2:20:00 AM
By ragul
12/3/2009 2:16:00 AM
By நொந்துபோன தமிழன்
12/3/2009 1:42:00 AM
By senthil
12/3/2009 12:39:00 AM
By Pa.Tha.Velan
12/3/2009 12:32:00 AM
By sn
12/3/2009 12:05:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*