திருநெல்வேலி : நகைத்தொழிலாளி ஒருவர் ஒரு அரிசியின் அளவிற்கு "செஸ் போர்டு' தயாரித்துள்ளார். திருநெல்வேலி டவுன், பர்வதசிங்கராஜா தெருவை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (36). தங்கநகை பட்டறை நடத்தி வருகிறார். வழக்கமான தங்க நகைகளை செய்து வந்த சிவசுப்பிரமணியன், தங்கத்தில் நுட்பமான பொருள் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டார். கடந்த ஆண்டு ஒரு கிராம் 400 மி.கி., எடையில் 8 மி. மீ., நீள,அகலத்தில் சதுரங்க பலகை(செஸ் போர்டு) ஒன்றை தயாரித்தார்.
மொபைல் போன் சிம்கார்டின் சர்க்கியூட் அளவுள்ள அந்த செஸ் பலகையில் 64 கட்டங்களுடன், 32 காய்களையும் தயாரித்தார். அதில் குதிரையின் பிடரியை கூட நுட்பமாக செதுக்கியிருந்தார். நெல்லையில் பல்வேறு அமைப்புகள் இவரை பாராட்டி பரிசுகள் வழங்கியதால் உற்சாகத்தில் இன்னமும் நுணுக்கமாக செஸ்போர்டு தயாரிக்க ஆரம்பித்தார். ஒரு கிராம் எடையில் ஐந்தில் ஒரு பங்கு, அதாவது 200 மி.கி., எடை வெள்ளியில் செஸ் போர்டு ஒன்றை தயாரித்தார்.
சக நண்பர்களின் ஊக்கத்தில் இத்தகைய செஸ் போர்டு செய்வதில் உலக சாதனை ஏதாவது நிகழ்த்தப்பட்டிருக்கிறதா என்பதை கேட்டறிந்த சிவசுப்பிரமணியன், தற்போது கின்னஸ் சாதனை முயற்சியாக ஒரு அரிசியின் நீள, அகலத்தில் செஸ் போர்டு தயாரித்துள்ளார். இதற்காக ஒரு கிராமில் 20 ல் ஒரு பங்கு எடையான 55 மி.கி.,எடை வெள்ளியில் 3.83 மி.மீட்டர் நீள, அகலத்தில் செஸ் போர்டு தயாரித்துள்ளார். அதில் விளையாட பயன்படும் ராஜா, ராணி, மந்திரி, குதிரை, யானை, சிப்பாய்கள் என 32 காய்களும் கண்ணுக்கு தெரியாத அளவில் சிறியதாக லென்ஸ் மூலம் பார்த்தால் மட்டுமே தெரியும் அளவுக்கு தயாரித்துள்ளார். அவை கீழே விழுந்தால் காணாமல் போய்விடலாம் என்பதால் சிறிய கண்ணாடி பேழையில் பாதுகாக்கிறார்.
தனது படைப்பை கின்னஸ் சாதனையாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள அவர் கூறுகையில்,""வெளிநாடுகளில் இத்தகைய முயற்சிகளுக்கு நுட்பமான மெஷின்களை பயன்படுத்துகிறார்கள். நான் வேறு எந்த இயந்திரமும் இல்லாமல் தங்கநகை தயாரிக்க பயன்படுத்தப்படும் வழக்கமான கருவிகளை கொண்டு தயாரித்துள்ளேன். செஸ் பலகை தயாரிப்பில் கின்னஸ் சாதனைக்கு முயற்சித்துவருகிறேன்'', என்றார்.
தமிழக புராதன கோயில் கோபுரங்கள், தேர்களில் இடம்பெற்றுள்ள தற்போது வழக்கொழிந்த யாழி மிருகத்தை 600 கிராம் வெள்ளியில் தயாரித்துள்ளார். இதே போல 9 மி.கி., எடையில் தங்கத்தில் நட்டு, போல்டுகளையும் தயாரித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக