சிதம்பரம், நவ.29: தமிழ்மொழி, கல்வி, வேளாண்மை ஆகிய மூன்று துறைகளுக்கு தினமணி நாளிதழில் முன்னுரிமை அளிக்கப்படும் என ஆசிரியர் கே.வைத்தியநாதன் தெரிவித்தார்.
பவழ விழா கொண்டாடி வரும் தினமணி நாளிதழ், சிதம்பரம், ஹோட்டல் சாரதாராமில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வாசகர் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் பேசியது:
வாசகர்கள் ஆசிரியரை சந்திப்பதைக் காட்டிலும், ஆசிரியர் வாசகர்களை சந்திப்பதில் பெருமையாகக் கருதுகிறேன். எழுத்து என்பது சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும்,நாளைய சமுதாயத்திற்கு பயனுடையதாகவும் இருக்கவேண்டும். அப்படி இல்லையெனில் அர்த்தம் இருக்காது. பொழுதைத்தான் வீணடிக்கும்.
÷எனவே, எழுதுகின்ற எழுத்தின் உயிர்ப்பும், சிந்தனையை தட்டி எழுப்புகின்ற கருத்துகளும் இருக்கவேண்டும். அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிரான கருத்துகளை பதிவுசெய்வது எங்களது நோக்கமல்ல.
÷பத்திரிகை என்பது தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்ற கண்ணாடி. அப்போதுதான் சமுதாயத்திற்கு பயன் ஏற்படும். தவறை திருத்தக் கூடிய பொறுப்பில் உள்ள ஆட்சியாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் பல லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது. அந்த நிர்வாகத்தினர் தவறை திருத்தவேண்டும்.
அதன் மூலம் ஆட்சியாளர்களுக்கும், நிர்வாக இயந்திரத்திற்கும் நற்பெயர் கிடைக்கும் என கருதுவதால், சமுதாயத்திற்கு பயன்படும் கருவியாக தினமணி செயல்படுகிறது. நாளைய ஆட்சியாளர்கள் மாறினாலும், தினமணி கண்ணாடியாகத் தான் இருக்கும்.
÷சமுதாயத்தில் நடைபெறும் தவறுகள் களையப்படவேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் தினமணி செயல்படுகிறது. நாளைய சமுதாயத் தலைமுறையினர் நன்மைக் கருதி அவர்களுக்கு சிந்தனைத் தாக்கத்தை ஏற்படுத்தும் பணியை தினமணி செய்கிறது.
÷விவசாயம் குறைந்துவருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.தன்னிறைவு தான் ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது முன்னோர்கள் கண்டறிந்த விஷயம்.விவசாயம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுவருவதாக கருதுகிறேன். இதற்கு முன்னேற்பாடு தான் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம். இதைப்பற்றி சிந்திக்கவேண்டிய கடமை உள்ளது.
÷உயர்கல்வி பயில மாணவர்களை தயார்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் தினமணியில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
முதுபெரும் தலைவர் ஜே.சி. குமரப்பாவை மத்திய, மாநில அரசுகள் மற்றும் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட அனைவரும் மறந்துவிட்ட நிலையில் அவரது பொன்விழா நினைவு நாளை தினமணி சார்பில் கொண்டாடவுள்ளோம் என்றார் ஆசிரியர் வைத்தியநாதன்.
÷முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் ஆனந்தநடராஜ தீட்சிதர், முன்னாள் அரசியல் அறிவியல் துறைத் தலைவர் ஏ.சண்முகம், தமிழ்தேசிய பொதுவுடைமைக் கட்சி ஒருங்கிணைப்பாளர் கி.வெங்கட்ராமன்,அண்ணாமலைப் பல்கலைக் கழக மேலாண் துறைத் தலைவர் எம்.பஞ்சநாதன், வர்த்தக சங்கத் தலைவர் எம்.ஆதிமூலம்,ஆசிரியர் வாசு, ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி மனோகரன்,ரோட்டரி சங்க சமுதாய இயக்குநர் மணிவண்ணன்,விவசாய சங்கத் தலைவர் ரவீந்திரன், வாசகர்கள் பாலாஜி கணேஷ், காளிதாஸ், சித்தரஞ்சன்,ராதாகிருஷ்ணன்,வழக்கறிஞர் கே.பாலசுப்ரமணியன்,தேவராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஈழப் போராட்ட வரலாறு 2 ஆண்டுகளுக்கு முன் வந்திருக்க வேண்டும்
ஈழப் போராட்ட வரலாறு 2 ஆண்டுகளுக்கு முன் வந்திருக்க வேண்டும் என சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தினமணி வாசகர் சந்திப்புக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
÷தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதனிடம் வாசகர்கள் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு:
தேவராஜன் (30 வருட வாசகர்): தினமணியில் வெளிவரும் ஈழப் போராட்ட வரலாறு 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பிரசுரமாகியிருந்தால் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும். மேலும் விவசாயப் பாதிப்பு குறித்து தினமணி மட்டுமே அக்கறை எடுத்து அவற்றை பிரசுரித்து வருவது வரவேற்கத்தக்கது.
ஆனந்தநடராஜ தீட்சிதர்(20 வருட வாசகர்): செய்திகளை சுருங்கச் சொல்லி விளக்குவதுதான் தினமணியின் சிறப்பு. வியாபார ரீதியாக இல்லாமல் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு தமிழுக்குத் தொண்டு செய்து வருகிறது.
எஸ்.மனோகர்(50 வருட வாசகர்): தினமணி பற்றி குறைகூற வாய்ப்பில்லை. இருப்பினும் விவசாயத்திற்கும், பங்குச்சந்தைக் குறித்த செய்திகளுக்கும் தனித்துவம் வழங்கினால் சிறப்பாக இருக்கும். மழை நிலவரம் குறித்த செய்தியை செயற்கைக்கோள் படத்துடன் வெளியிட வேண்டும்.
முன்னாள் அமைசசர் வி.வி.சாமிநாதன்: மிகக் குறைந்த விலையில் மலர்களை வெளியிட்டு விலை மதிப்பில்லா தகவல்கள் அளிக்கக்கூடியது தினமணி மட்டுமே.
சண்முகம்: தினமணி தலையங்கமே எங்களுக்கு அதன் மீதான நம்பிக்கை.
தமிழ்மணி ஒரு வரலாற்றுக் பொக்கிஷம். ஈழப் போராட்டம் ஒரு தொகுப்பு மலராக வெளிவந்தால் சிறப்பாக இருக்கும். “அடடே மதி’ பெரு மகிழ்ச்சியளிக்கிறது.
÷எங்களின் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண பயன்படுவது ஆராய்ச்சிமணி. கட்டுரைப் பகுதியில் புதியவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்.
வெங்கட்ராமன்: பார்ப்பதற்கு பல பத்திரிகைகள் உள்ளன. படிப்பதற்கு என்று இருப்பது தினமணி மட்டுமே. தலையங்கத்தைத் தொகுப்பு நூலாக வெளியிட வேண்டும்.
தமிழறிஞர்கள் குறித்த செய்தி ஒவ்வொரு வாரமும் வெளியிட வேண்டும்.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களைச் சென்றடைய வேண்டிய செய்தி குறித்து தினமணி ஆய்வு செய்து, எதிர்கால சமுதாயத்துக்கு துணை நிற்க வேண்டும் என்பது எனது ஆசை.
சித்தரஞ்சன்: எங்கள் வீட்டில் சிறுவயது முதலே தினமணி படித்து வருகிறோம். நான் தமிழ் கற்றுக் கொண்டதே தினமணி மூலம் தான்.
ரவீந்திரன்:ஒரு நகரின் குறைக் குறித்து மாலையில் உங்கள் நிருபரிடம் நாங்கள் தெரிவித்த புகாருக்கு மறுநாள் காலை உடனடியாக நிவாரணம் கிடைப்பது தினமணி மூலம்தான் என்றால் அதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
பஞ்சநாதன்: தென்னாப்பிரிக்கா சென்ற போது,அங்கு ஒருவர் தினமணியின் இ-பேப்பர் மூலம் தனது குழந்தைக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதைக் கண்டு வியந்தேன்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் செய்த ஆய்வு அறிக்கையின்படி தினமணி நடுநிலை நாளேடு என்ற இடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறது என்பதை காணமுடிந்தது.
கணக்கன் காலத்திலிருந்து தினமணி படித்துவருகின்றேன். இப்போதைய ஆசிரியர் தமிழ் வளர்ச்சியிலும் தமிழின மேம்பாட்டிலும் கருத்து கொண்டு சிறப்புடன் செயலாற்றி வருவது பாராட்டிற்குரியது. ஆனாலும் ஒரு புதிர். இந்தி எதிர்ப்பு என்பதைக் கூடக் கிரந்த எழுத்தைப் பயன்படுத்தி ஹிந்தி எதிர்ப்பு என்றுதான் குறிப்பிட வேண்டுமா? தமிழ் எழுத்துகளையே பயன்படுத்தி நலல தமிழை வளர்க்க தினமணி முன்வரவேண்டும். தமிழ் ஆர்வலர் திரு வைத்தியநாதன் முன்வராவிட்டால் வேறு யார்தான் இப் பணியைச் செய்வருவர்? இணையப் பதிவு மூலம் வாசகர்களின் கருத்துப் பகிர்விற்கு வாய்ப்பளிக்கும் தினமணி மூன்று திங்களுக்கு ஒரு முறையேனும் இணையப பதிவுகளை வெளியிட்டுப் பிற வாசகர்களும் இணைய வாசகர்களை அறிய உதவ வேண்டும். தினமணி ஆசிரியருக்கும் ஆசிரியக் குழுவினருக்கும் பிற ஊழியர்களுக்கும் பாராட்டுகள்! தினமணியின் தொண்டு தொடர வாழ்த்துகள்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
12/1/2009 3:29:00 AM