சென்னை, நவ. 29: திருச்செந்தூர், வந்தவாசி (தனி) ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வன்முறையைத் தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, அவர் ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதம்: திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணனும், வந்தவாசி (தனி) தொகுதியில் ஜெ. கமலக்கண்ணனும் தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். இதில் எந்தெந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், எந்தெந்த தொகுதியிலே பணிபுரிய வேண்டும் என்று தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. தி.மு.க. மாவட்ட கழகச் செயலாளர்கள் தலைமையில் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடைத்தேர்தல் பணியில் இணைந்து ஈடுபட வேண்டும். இந்த இரு தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சியினரையும் இணைத்துக்கொண்டு தேர்தல் பணிகளிலே முறையாக ஈடுபட வேண்டும். தேர்தல் பிரசாரத்தின் போது, தி.மு.க. அரசின் சாதனைப் பட்டியல்களை மக்களிடம் எடுத்துக் கூறி, அந்தப் பணி தொடர்ந்திட ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்ள வேண்டும். நல்ல முறையில் நம்முடைய சாதனைகளை எடுத்து விளக்குவோம்! வன்முறை தவிர்த்து வரும் தேர்தல்களில் வெல்வோம்! நம்மை எதிர்த்து நிற்பவர்கள், கடந்த முறை இடைத்தேர்தல்களைப் புறக்கணிப்போம் என்று அறிவித்தனர். ஆனால், இன்று போட்டியிட முன்வந்துள்ளனர். இந்த இடைத்தேர்தல்களில் அவர்களுக்குப் பாடம் கற்பித்தாக வேண்டும். நமது லட்சியத்தை விளக்கவும், அது வெற்றி பெறவும் இந்த இடைத்தேர்தல்கள் பயன்பட வேண்டும். இதில்தான் நமது அக்கறை இருத்தல் வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
கருத்துக்கள்
பல சாதனைகளுக்குச சொந்தக்கார ஆட்சி என்பதற்கு மறுப்பதற்கில்லை. அதே நேரம் வேதனைகளுக்கும் சொந்தக்கார ஆட்சிதான் என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. எனவே, துலாக்கோலில் இருபுறத்திலும் சாதனைகளையும் வேதனைகளையும் நிறுத்திப் பார்த்து மிகைநாடி உரியவாறு வாக்களிக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/30/2009 3:16:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்11/30/2009 3:16:00 AM