மாணவர் போராட்டத்துக்கு த் தோள் கொடுப்போம்: வைகோ
இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக நல்ல தீர்வினை எதிர்நோக்கி மாணவர்கள் நடத்தும் போராட்டத்துக்கு தோள் கொடுப்போம் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிக்கை ஒன்றில் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
வரலாறு சந்தித்த கொடூரமான மனிதப் பேரழிவுகளுள் ஒன்றாக ஈழத் தமிழர் இனப் படுகொலையை சிங்களப் பேரினவாத அரசு திட்டமிட்டு நடத்தியது. இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்கள், பச்சிளம் குழந்தைகள், பாலகர்கள், தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள் என யுத்தத்தில் ஆயுதம் ஏந்தாத பொதுமக்களையும், உலகம் தடை செய்த குண்டுகளையும் பயன்படுத்தி, சிங்களவனின் முப்படையும் இந்திய அரசு உள்ளிட்ட ஏழு அணு ஆயுத அரசுகள் அள்ளிக்கொடுத்த ஆயுதங்களையும் கொண்டு, கொன்று குவித்தது. இரத்த வெள்ளத்தில் தமிழர்கள் மூழ்கடிக்கப்பட்டனர்.
சிங்கள அரசு செய்த இனக்கொலை யுத்தத்தை தனது முப்படைத் தளபதிகளையும் பயன்படுத்தி இயக்கியதும், போர் நிறுத்தம் ஏற்பட விடாமல் தடுத்து, தமிழ் மக்களைச் சாகடித்ததும் இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான். இந்த இனக்கொலையின் கூட்டுக் குற்றவாளி காங்கிரÞ தலைமை தாங்கும் மத்திய அரசு ஆகும்.
இனப்படுகொலையின் உச்ச கட்டமாக, முள்ளிவாய்க்கால் தமிழர் அழிவு நடத்பப்பட்ட பின், 2009 மே மாதம் ஜெனீவாவில் ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சிலில், சிங்கள அரசை வெகுவாகப் பாராட்டி, மனிதகுலம் வெட்கித் தலைகுனியும்படியான, ஐ.நா. வின் வராற்றிலேயே அதுவரை இல்லாத ஒரு கேவலமான தீர்மானத்தை வரிந்துகட்டிக்கொண்டு இந்திய அரசு நிறைவேறச் செய்த துரோகத்தை ஒருபோதும் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்.
இனக்கொலைக்கு உடந்தையாக இருந்த குற்ற உணர்வால்தான், கடந்த ஆண்டும் கூட, ஐ.நா. மன்றத்தில் ஒரு நாட்டின் பிரச்சினைக்குள் தலையிட முடியாது என்று திமிரோடு கூறிய இந்திய அரசு, தமிழகத்தில் எழுந்த எதிர்ப்புக் கண்டனத்தால் சற்றுப் பதுங்கினாலும், அமெரிக்கா கொண்டுவந்த கவைக்கு உதவாத அந்தத் தீர்மானத்தையும்கூட சிங்கள அரசினுடைய அனுமதியோடும், ஒப்புதலோடும்தான் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நீர்த்துப்போகச் செய்தது.
ஈழத் தமிழர்களைக் கொன்றால் நாதி கிடையாது, தாய்த் தமிழகத்திலும் கொந்தளிப்பும் நேராது என்று இந்திய அரசு தப்புக் கணக்குப் போட்டது. இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்கள் சிந்திய இரத்தத் துளிகள், பலியிடப்பட்ட தமிழர் உயிர்கள் பிரளயத்தின் பேர் இரைச்சலாகக் கொந்தளித்ததின் அடையாளம்தான் தமிழ்நாட்டில் எரிமலையாய்ச் சீறி எழுந்து உள்ள மாணவர்கள் போராட்டம் ஆகும்.
இப்படி ஒரு நிலை ஏற்பட வேண்டும் என்றுதான் கடந்த நான்கு ஆண்டுகாலமாக ஏங்கிக் கொண்டு இருந்தோம். வீரத்தியாகி முத்துக்குமார் உள்ளிட்ட தியாக மாமணிகள் மரணத் தீயை அணைத்துக்கொண்டு ஆவியைத் தந்ததன் குறிக்கோளை நோக்கித் தமிழக மாணவர் உலகம் கொதித்து நின்று போராடுகிறது.
மீண்டும் திரும்புகிறது 65 மொழிப்புரட்சி.
இந்த ஆண்டு மார்ச் 8 ஆம் நாள், உன்னதமான திருப்பத்தைத் தமிழகத்தில் தந்த நாள். உலக மகளிர் தினமாகிய அந்நாளில், சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் காலவரையரையற்ற உண்ணாநிலை அறப்போரைத் தொடங்கினர். கந்தகக் கிடங்கில் நெருப்புப் பொறி விழுவதுபோல், இலட்சக் கணக்கான மாணவர்களை அறவழி கிளர்ச்சிக் களத்தில் அப்போராட்டம் கொண்டுபோய் நிறுத்தியது. உயர்ந்த ஒரு இலட்சியத்துக்காக அரசியல் எல்லைகளுக்கு அப்பால், தமிழக மாணவர்கள் போர்க்கோலம் பூண்டு இருப்பது பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிற வரலாற்றுத் திருப்பம் ஆகும்.
போராடும் மாணவர்கள் தங்கள் இலக்கைத் துல்லியமாக, தெளிவாக அறிவித்து விட்டார்கள். ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு, சுதந்திரத் தமிழ் ஈழம் ஒன்று மட்டுமே தீர்வு ஆகும்.
சிங்கள இராணுவமும், போலிசும், சிங்களக் குடியேற்றங்களும் தமிழர் தாயகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும்; வதை முகாம்களிலும், சிறைகளிலும் அடைக்கப்பட்டு உள்ள விடுதலைப்புலிகள் உள்ளிட்ட ஈழத் தமிழர்கள் விடுவிக்கப்பட வேண்டும்; சுதந்திர ஈழத்துக்கான ஒரு பொது வாக்கெடுப்பினை உலக நாடுகள், ஐ.நா.மன்றம் நடத்த வேண்டும்.
இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று ஒழித்த சிங்கள அரசின் இனப்படுகொலை குறித்து, சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தப்பட்டு, கொலைபாதக இராஜபக்சே கூட்டம் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். அதற்கான தீர்மானம், ஜெனீவா மனித உரிமை கவுன்சிலில் நிறைவேற்றப்பட வேண்டும்.
சிங்கள அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடை விதித்தபோது, அதனை எதிர்த்து உலகின் கண்களில் மண்ணைத் தூவ சிங்கள இராஜபக்சேவை திரும்பத் திரும்ப இந்தியாவுக்கு அழைத்துவந்து வரவேற்பு கொடுத்த இந்திய அரசு, இனியும் ஈழத் தமிழர்களுக்குத் துரோகத்தை தொடர்ந்து செய்ய மாட்டோம் என்று தெரிவிக்க நினைத்தால், தமிழக சட்டமன்றம் கோரியவாறு இலங்கைக்குப் பொருளாதாரத் தடையைச் செயல்படுத்த வேண்டும். இலங்கைக்கு மின்சாரம் வழங்குவது உள்ளிட்ட பொருளாதார வர்த்தக ஒப்பந்தங்கள், இருநாட்டுக் கடற்படை ஒப்பந்தம் அனைத்தையும் இரத்து செய்ய வேண்டும்.
குறிப்பிடத்தக்க சில சம்பவங்கள்தாம் சரித்திரத்தின் போக்கைத் தீர்மானிக்கின்றன. பிரித்தானிய வெள்ளையர் ஆதிக்கத்தில் இருந்து கருப்பர் இன மக்கள் பெரிதும் வாழும் தென்னாப்பிரிக்கா விடுதலை பெற வீரமிக்க போராட்டத்தை நடத்தியபோது, நெல்சன் மண்டேலா ஆண்டுகணக்கில் ரோபென் தீவுச் சிறையில் இருந்தார். 1976 ஜூன் 16 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில், சொவேட்டோ என்ற புறநகர் பகுதியில், உயர்நிலைப் பள்ளி கருப்பு இன மாணவர்கள் சமஉரிமை கேட்டுப் போராட்டம் நடத்தியபோது, 13 வயது மாணவனான ஹெக்டர் பீட்டர்சன், பள்ளி வளாகத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். இரத்தம் தோய்ந்த அம்மாhணவன் உடலை, மாணவர்கள் ஏந்தியவாறு சாலையில் வந்தனர். கிளர்ச்சி எரிமலையாக வெடித்தது. தென்னாப்பிரிக்காவில், அதுவே பெரும் தொடர் புரட்சியாக நீடித்து, இலட்சியத்தையும் வென்றது.
அதுபோலவே, ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் ஈடற்ற தலைவரும் தமிழ் அன்னையின் தவ மைந்தனுமான மேதகு பிரபாகரன் அவர்களின் இளைய புதல்வன், 12 வயது பாலகன் பாலச்சந்திரன் தனது வீர மார்பில், ஐந்து குண்டுகள் ஏந்தி கொட்டிய இரத்தத் துளிகள் கோடான கோடி தமிழர்கள் உள்ளத்தில் ஆவேச நெருப்பை மூட்டிவிட்டன. பாலச்சந்திரனின் ஒளி சிந்தும் இரண்டு கண்கள், மனிதகுலத்தை நோக்கி ஓராயிரம் கேள்விகளை எழுப்புகின்றன.
“உலகில் நீதி உண்டா? தமிழ்க் குலத்துக்கு நாதி உண்டா? என்னைப் போல எத்தனை எத்தனை ஆயிரம் ஆயிரம் குழந்தைகள் சிங்களவனால் கொல்லப்பட்டனரே, தாய்த் தமிழகத்துத் தொப்புள்கொடி உறவுகளே என்ன செய்யப் போகிறீர்கள்? இனியுமா கண்மூடித் தூக்கம்?” என்று அந்தக் கண்கள் கேட்டன.
காலக் கடைத் தீயெனத் தமிழக மாணவர்கள் களம் கண்டு உள்ளனர். தமிழ் ஈழ மக்களின் இரணமான மனங்களில் இப்போராட்டம் மூலிகை மருந்தாய் உள்ளது. இருள் விலகும்; தமிழ் ஈழம் விடியும்; சிந்திய இரத்தம் வீண் போகாது என்ற நம்பிக்கையை விதைத்து உள்ளது.
மாணவர்கள் போராட்டம் அமைதி அறவழியில் நடக்கிறது. துளியும் வன்முறை இல்லாமல் நடக்கிறது. தங்களை வருத்திக்கொண்டு பசியோடும், பட்டினியோடும் இலட்சியச் சுடர் ஏந்தி தமிழக மாணவர் படை போராடுகிறது. புரட்சி வடிவம் எடுக்கும் பெருவெள்ளத்தை கதவுகளைக் கொண்டு அடைத்துவிட முடியாது. சீறி எழும் மாணவர் போராட்டத்தை கல்லூரிகளை, விடுதிகளை அடைப்பதால் தடுத்துவிட முடியாது. மாணவர் போராட்டத்துக்குத் தமிழகத்தின் கோடான கோடி மக்களின் ஆதரவு தானாக ஏற்பட்டு உள்ளது. இதற்கு ஆதரவாக ஆங்காங்கு தமிழ் நாட்டின் பல்வேறு தரப்பினர் அமைக்கும் களங்களுக்கு ஈழத் தமிழ் உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் தோள்கொடுத்துத் துணை நிற்போம்.
மார்ச் 17 ஆம் தேதி, சென்னை மெரினா கடற்கரையில், கண்ணகி சிலை அருகே தமிழ் ஈழ விடுதலையை முன் எடுக்க இனக்கொலைக் குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்த, பொது வாக்கெடுப்பு நடைபெறச் செய்ய, தமிழ மாணவர்களின் கோரிக்கைக்கு உறுதுணையாய்க் குரல் எழுப்ப, மே-17 இயக்கம் ஒன்றாகக் கூடி முழங்கிட அழைப்பு விடுத்து உள்ளது. அதில் அனைவரும் பங்கு ஏற்போம்.
மார்ச்18 ஆம் தேதி, தமிழகம் எங்கும் வகுப்புகளை மாணவர்கள் புறக்கணிப்போம் என அறிவித்து உள்ளனர். மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி மாணவர்களும் காலத்தின் தேவையான இந்த அறப்போரில் பங்கு ஏற்கும் போராட்டமாக அந்த நாள் அமையட்டும்.
மார்ச் 19 ஆம் தேதி, கோயம்பேட்டில் அனைத்து வியாபாரிகளும் கடைகளை மூடி மாணவர் போராட்டத்துக்கு துணைநிற்போம் என அறிவித்து உள்ளனர்.
மார்ச் 20 ஆம் தேதி, தமிழகம் எங்கும் மாணவர்கள் தமிழ் ஈழ விடுதலைக்காக முன்னெடுக்கும் தொடர்முழக்கப் போராட்டம் வெற்றிகரமாக நடக்கட்டும்.
சரியான இலக்கைத் தீர்மானித்து முறையான போராட்டத்தைத் தாங்களாக வடிவமைத்து, வளரும் தலைமுறையான தமிழக மாணவர்கள் முன்னெடுத்து வரும் அறப்போருக்கு தோள்கொடுத்து துணை நிற்போம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக