ஈழத் தமிழர் சிக்கல்- மாணவர்களின் உண்ணா நோன்பிற்கு ஆதரவு பெருகுகிறது
இலங்கைத் தமிழர் பிரச்னையை வலியுறுத்தி லயோலா கல்லூரியைச் சேர்ந்த 8 மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முக்கிய அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் மற்றும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தமிழீழம் அமையும் வகையில் ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழர்களைக் காப்பாற்றும் வகையில் ஐ.நா.வில் இந்தியாவே ஒரு தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, லயோலா கல்லூரியைச் சேர்ந்த திலீபன், பிரிட்டோ, அந்தோனி சாஜி, பார்வைதாசன், பால்கென்னட், மணி, கேபரின், லியோ ஸ்டாலின் ஆகிய 8 மாணவர்கள் வியாழக்கிழமை முதல் (மார்ச் 7) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நேற்று நேரில் சந்தித்து மாணவர்களின் கோரிக்கையை மதிமுக ஆதரிக்கும் என்று தெரிவித்தார்.
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்பாளர் பழநெடுமாறன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோரும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும், சமூக ஆர்வலர்கள் நேரில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாளை பல கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனவும் கூறப்படுகிறது.
முதலில் லயோலா கல்லூரியில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியவர்கள், வெள்ளிக்கிழமை இரவு முதல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் இடம் ஒன்றில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக