புதன், 13 மார்ச், 2013

தமிழகப் பணியாளர் தேர்விலும் தமிழுக்கு அநீதி

இந்தி  அரசின் வழியில் தமிழக அரசும் செல்கிறது. உயரமான மலை, நீளமான ஆறு போன்ற தகவல்களால் பணிக்கு ஒன்றும் பயனில்லை. அடிக்கடி மாறக்கூடிய விவரங்களை அறிவதாலும் பயனில்லை. நல்ல முறையில் எழுதி மக்களுடன்  தொடர்பு கொள்ள மொழியறிவு தேவை. பணியில் சேர்ந்த பின் பணி தொடர்பான துறையறிவு,  பொது அறிவுத் தேர்வில் வெற்றி  பெறுவதைக் கட்டாயமாக்கலாம். எனவே,  அடிப்படைப் பொது அறிவு 50 மதிப்பெண் தமிழறிவு 150 மதிப்பெண் என வினாத்தாள் முறையை மாற்றி அமைக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இ.ஆ.ப.  தேர்வுக்கான மாற்றங்களை த் தொடர்ந்து த.நா.‌ அ.ப.தே. தேர்வின் தமிழ் ப் பாடத்திலும் மாற்றம்




தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் குரூப்-1, குரூப்-1ஏ, 1பி, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகள் மற்றும் இதர தொழில்நுட்ப தேர்வுகளுக்கான தமிழ் பாடத்திட்டத்தினை முற்றிலும் மாற்றி அமைத்து புதிய பாடத்திட்டத்தினை டி.என்.பி.எஸ்.சி. தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு குரூப் 1 தேர்விற்கான பாடத்திட்டத்தில் மாற்றத்தை டிஎன்பிஎஸ்சி அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து அனைத்து தேர்வுகளுக்கும் 72 பக்க புதிய பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி நேற்று இரவு வெளியிட்டுள்ளது.
எஸ்எஸ்எல்சி தகுதியைக் கொண்டு தேர்வு எழுதும் குரூப்- 4 பணியிடங்கள் மற்றும் விஏஒ தேர்வுகளில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது குரூப் 4 தேர்வில் இதுவரை 100 மதிப்பெண்கள் பொது அறிவு பகுதிக்கும், 100 மதிப்பெண்கள் பொதுத்தமிழுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தன. புதிய பாடத்திட்டத்தின் படி பொது அறிவு, புத்தி கூர்மை, சிந்தித்து விடை அளித்தல் ஆகிய பகுதிகளிலிருந்து 150 வினாக்கள் கேட்கப்படும். இதற்காக 225 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 50 வினாக்கள் மட்டுமே பொதுத்தமிழில் இருந்து கேட்கப்படும். அதற்கு 75 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.  குருப்-2 தேர்விலும் அனைத்து மதிப்பெண்களும் பொது அறிவு பகுதிக்கே ஒதுக்கப்பட்டுள்ளன.
இதுவரை இடம் பெற்று வந்த பொதுத்தமிழ் பகுதி நீக்கப்பட்டதுடன், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் வங்கி போட்டித் தேர்வு போன்று புத்தி கூர்மை, சிந்தித்து விடை அளிக்கும் திறன் ஆகிய புதிய பகுதிகளுக்கு கூடுதல் மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது, நேர்முகத்தேர்வு, நேர்முகத்தேர்வு அல்லாதது என இரு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. நேர்முகத்தேர்விற்கான பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, பிரதான தேர்வு என இரண்டு தேர்வுகளும். நேர்முகத்தேர்வு இல்லாத பதவிகளுக்கு ஒரு தேர்வு மட்டும் எழுதினால் போதுமானது.  இதுவரை தனியாக நடத்தப்பட்டு வந்த மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ) தேர்வு குரூப்-1 தேர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது. 
ஐ.ஏ.எஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்று மாநிலங்களில் பணியில் சேர்பவர்கள் கூட அந்தந்த மாநில மொழிகளில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டத்தில் தமிழ் பாடத்திற்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது தேர்வாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
புதிய தலைவர்  பொறுப்பேற்பு:
இந்நிலையில்,  இன்று பொறுப்பேற்க உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) புதிய தலைவர் ஏ. நவநீதகிருஷ்ணன் மேலும் சில மாற்றங்களை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக