வெள்ளி, 15 மார்ச், 2013

சொந்த மக்களைக் காப்பாற்றுவதில் மத்திய அரசு பலவீனம்: தி.மு.க., ஆவேசம்

சொந்த மக்களை க்  காப்பாற்றுவதில் மத்திய அரசு பலவீனம்: தி.மு.க., ஆவேசம்

தமிழக மீனவர்கள், 53 பேர், இலங்கை கடற்படையினரால், கைது செய்யப்பட்ட விவகாரம், லோக்சபாவில் எதிரொலித்தது. அப்போது, "சொந்த மக்களை பாதுகாப்பதில், மத்திய அரசு பலவீனமாக உள்ளது' என, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள, முக்கிய கூட்டணி கட்சியான, தி.மு.க., விமர்சித்தது. அதேநேரத்தில், "இந்திய கடல் பகுதிக்குள் மீன் பிடித்தால் மட்டுமே, தமிழக மீனவர்களுக்கு, கடலோர காவல் படையினர் பாதுகாப்பு வழங்க முடியும்' என, மத்திய அரசு பதிலளித்தது.
அடிக்கடி:


தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால், தாக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. தமிழக மீனவர்கள், 19 பேர், இலங்கையின் மன்னார் வளைகுடா பகுதியில், நேற்று முன் தினம் இலங்கை கடற்படையினரால், கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்று காலை, 34 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்து, அவர்கள் மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டனர். இந்த பிரச்னை லோக்சபாவில், நேற்று எழுப்பப்பட்டது. கேள்வி நேரம் துவங்கியதும், காஷ்மீரில் நேற்று முன் தினம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் பிரச்னையை, பா.ஜ., - எம்.பி.,க்கள் எழுப்பினர். அப்போது, தமிழக எம்.பி.,க்கள் அனைவரும், மீனவர்கள் கைது பிரச்னை எழுப்பி, அதற்காக, குரல் கொடுத்தபடி நின்றனர். இதனால், சபையில், கூச்சல், குழப்பம் நிலவி, கேள்வி நேரம் ரத்தானது. பின்னர், பூஜ்ஜிய நேரம் துவங்கியதும், மீனவர்கள் கைது சம்பவம் குறித்து பேச, சபாநாயகர் மீரா குமார் அனுமதி வழங்கினார்.
இதையடுத்து, தி.மு.க., - எம்.பி., இளங்கோவன் பேசியதாவது:
மவுனம்:

தமிழக மீனவர்களை, இலங்கை ராணுவம் தாக்குவது, தொடர்கதையாகி வருகிறது. தமிழக மீனவர்கள், அடிக்கடி கைது செய்யப்பட்டு, சிறையில் தள்ளப்படும் கொடுமையும் நீடிக்கிறது. இந்த விவகாரத்தில், நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசோ, மவுனமாக உள்ளது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மீனவர்கள் தங்கள் தொழிலை செய்வற்காகவே, கடலுக்கு செல்கின்றனர். வேறு எந்த நாட்டையும் பிடிப்பதற்கோ அல்லது எந்த ஒரு நாட்டின் மீதும் படையெடுத்தோ செல்லவில்லை. ஆனாலும், இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்துகிறது. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய, இந்திய கடலோர காவல்படை, என்ன செய்கிறது. தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை, தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும், கடலோர காவல்படைக்கு இல்லையா? இவ்விவகாரத்தில், உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டிய நேரம், நெருங்கிவிட்டது. சொந்த மக்களை பாதுகாப்பதில், மத்திய அரசு மிகவும் பலவீனமாக உள்ளது. மீனவர்கள் கைது சம்பவம் குறித்து, மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு இளங்கோவன் பேசினார்.
இதையடுத்து, அ.தி.மு.க., - எம்.பி., தம்பித்துரை பேசியதாவது: இதுவரை, தமிழக மீனவர்கள், 800 பேர், இலங்கை கடற்படையினரால், கொல்லப்பட்டுள்ளனர். கடலுக்குள் மீன் பிடிப்பதற்காக சென்ற இவர்களை, கொன்றொழித்தது இலங்கை ராணுவம். தமிழக மீனவர்கள், இத்தனை பேர் கொல்லப்பட்டும் கூட, இலங்கையை நட்பு நாடு என, மத்திய அரசு கூறுகிறது.
எத்தனை படை:

சொந்த நாட்டு மக்களை கொன்றாலும் கூட, இன்னொரு நாட்டுடன், நட்பு பாராட்டி ஆக வேண்டுமென ஆசைப்படுகிறதா மத்திய அரசு. இந்திய கடற்படை, கடலேரா காவல்படை, ரோந்துபடை என, நிறைய படைகள் உள்ளன. ஆனால், எந்தப் படையினரும், தமிழக மீனவர்களுக்கு, பாதுகாப்பு கொடுக்காமல் விட்டு விடுவது ஏன் என்பது தெரியவில்லை. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை, இந்த படை வீரர்கள் வேடிக்கை பார்க்கின்றனர். இந்த நிலை, மாற வேண்டும்; இனிமேலும், பொறுக்க முடியாது. இவ்வாறு தம்பித்துரை பேசினார். இதன்பின், வேறு பிரச்னையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள, சபாநாயகர் மீராகுமார் முயன்றபோது, டி.ஆர்.பாலு எழுந்தார். அவர், "" சபையில், வெளியுறவு அமைச்சர் உள்ளார். இதுகுறித்து பதில் அளிக்க, அவர் முன்வருவாரா?,'' என, கேள்வி எழுப்பினார். இதனால், சபையில், சலசலப்பு உருவானது. உடன், நிதியமைச்சர் சிதம்பரம் எழுந்து,""மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, இன்று மாலைக்குள்,வெளியுறவு அமைச்சர் அறிக்கை தருவார்,'' என்றார். இதையடுத்து, சபை அலுவல்கள் தொடர்ந்தன. சபையை விட்டு, வெளியில் வந்த, வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம்," பல மாதங்களாக, தமிழக மீனவர்கள் மீது, தாக்குதல்கள் நடந்து வருகின்றன. ஆனால், இந்திய கடற்படையோ, கடலோர காவல்படையோ, ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை' என, கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ""இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்தால் மட்டுமே, மீனவர்களுக்கு, மத்திய கடலோர காவல்படை வீரர்கள் பாதுகாப்பு வழங்க முடியும்,'' என்றார்.
- தில்லிச்செய்தியாளர், தினமலர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக