திங்கள், 11 மார்ச், 2013

இ.ஆ.ப.- இ.கா.ப., தேர்வை த் தமிழில் எழுத அனுமதிக்க வேண்டும்: மரு. இராமதாசு கோரிக்கை

இ.ஆ.ப.- இ.கா.ப.,  தேர்வை த் தமிழில் எழுத அனுமதிக்க வேண்டும்:  மரு. இராமதாசு கோரிக்கை
 
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
தேசிய அளவில் நடைபெறும் அனைத்து போட்டித்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்துவலியுறுத்தி வருகிறது.
 
5-ந்தேதி மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசிதழில் இளநிலை பட்டப்படிப்பை தமிழ் வழியில் படித்தவர்கள் மட்டுமே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான முதன்மை (மெயின்) தேர்வை தமிழில் எழுத முடியும் என்றும், தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே தமிழ் இலக்கியத்தை விருப்பப்பாடமாக தேர்வு செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 
இது தமிழ் உள்ளிட்ட மாநில மொழி பேசும் மக்களுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய துரோகம் ஆகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்தியாவில் இந்தி மொழிக்கு அடுத்தபடியாக தமிழ் மொழியில்தான் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்வு எழுதி வந்தனர். 2009-ம் ஆண்டில் 622 பேரும், 2010ம் ஆண்டில் 561 பேரும், தமிழில் தேர்வு எழுதினர்.
 
தமிழ் இலக்கியம் படிக்காமல் மருத்துவம், பொறியியல் படித்த மாணவர்கள்கூட, தமிழ் இலக்கியத்தை விருப்பப்பாடமாக எடுத்து தமிழிலேயே முதன்மை தேர்வுகளை எழுதி அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று வந்தனர். கடந்த ஆண்டு தமிழ் இலக்கியத்தை விருப்பப்பாடமாக எடுத்து தேர்வு எழுதியவர்களில் 19.4 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 
இந்த நிலையில் யாரிடமும் கருத்து கேட்காமல் மாநில மொழிகளில் குடிமை பணி தேர்வுகளை எழுத தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு இந்தி பேசுபவர்களைத் தவிர வேறு எவரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக வந்துவிடக்கூடாது என்று மத்திய ஆட்சியாளர்கள் நினைப்பதுதான் காரணமாகும்.
 
இதற்காகவே மிகவும் தந்திரமாக விதிகளை வகுத்து மாநில மொழி பேசும் மக்களின் உரிமைகளை மத்திய அரசு பறித்துக்கொண்டிருக்கிறது. இந்தி பேசுபவர்களுக்கு மட்டும்தான் அனைத்து சலுகைகளும் என்றால் இந்த நாடு இந்திய தேசமா? அல்லது இந்தி தேசமா? என்ற வினா எழுகிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போட்டித்தேர்வுகளுக்கான வினாத்தாள்களையும் தமிழில் தயாரிக்க வேண்டும் என்று ஏற்கனவே நான் வலியுறுத்தியுள்ளேன்.
 
கடந்த ஜூன் 26-ந்தேதி தேதி சென்னையில் நடைபெற்ற பா.ம.க. செயற்குழு கூட்டத்திலும் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நேரத்தில். இருக்கும் முக்கியத்துவத்தையும் பறிக்கும் மத்திய அரசின் செயல், மேல் ஆடை கேட்பவனின் கீழ் ஆடையையும் பறிப்பதற்கு ஒப்பானதாகும்.
 
மாநில மொழி மக்களுக்கு எதிரான அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற்று ஏற்கனவே இருந்தவாறு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதன்மை தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
 
இல்லாவிட்டால் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மே 26-ந்தேதியன்று குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெறும் மையங்கள் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
 
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 
டாக்டர் ராமதாஸ் நேற்று இரவு வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
ஈழத்தமிழர்களின் நலன் காப்பதற்காக என்று கூறி வரும் 12-ந் தேதி (நாளை) டெசோ அமைப்பின் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்திருக்கிறார். வேறு சில அரசியல் காரணங்களுக்காக, ஈழத்தமிழர்களை முன்னிறுத்தி, இப்படி ஒரு முழு அடைப்பு போராட்ட நாடகம் நடத்துவதை தமிழ் உணர்வாளர்களும் தமிழக மக்களும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
 
எனவே, ஈழப்பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும். அக்கூட்டத்தில் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று கோரி ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவே தீர்மானம் கொண்டுவரவேண்டும்.
 
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு - கிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைத்து தமிழீழம் அமைப்பதற்கு உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களிடையே ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்த இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் சார்பில் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.   
மேலும் தலைப்புச்செய்திகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக