இலக்கை நோக்கி!
பெண்களுக்கான அடிமை த் தடைகளை உடைத்து, வேதியியல் துறையில் சாதனை புரிந்த, சந்தா சவேரி: நான், கோல்கட்டாவில் உள்ள கான்குர்கச்சியில், ஒரு மார்வாடி குடும்பத்தில் பிறந்தேன். 14 வயதில் பள்ளிப் படிப்பை முடித்ததும், கல்லூரியில் படிக்க விரும்பினேன். ஆனால், 1980களில் மார்வாடி பெண்களை, கல்லூரிக்கு அனுப்பாமல், சிறு வயதிலேயே திருமணம் செய்வர்.
எப்படியோ போராடி கல்லூரி சென்று, உயிரியலை முதல் பாடமாக படித்தேன். கோல்கட்டாவில் உள்ள அமெரிக்கன் நூலகத்திற்கு செல்லும் போது, கேரன் எனும் அமெரிக்க பெண்ணின் நட்பு கிடைத்தது. படிப்பு முடிந்ததும், 17 வயதிலேயே கட்டாய திருமணம் செய்ய முயற்சித்தனர். கட்டாய திருமணத்தை எதிர்த்து, கேரன் உதவியுடன் அமெரிக்கா செல்ல முயற்சித்தேன்.
என் நகைகளை விற்று, வீட்டுக்கு தெரியாமல், அமெரிக்கா செல்ல விசா மற்றும் விமான பயணச் சீட்டு வாங்கி, அமெரிக்கா சென்றேன். படிப்பு மற்றும் தினசரி செலவுக்காக, ஒரு பாட்டிக்கு தாதியாக பணிவிடை செய்தேன். அந்த வருமானத்தில், "ஹாவர்ட்' பல்கலைக் கழகத்தில் படிக்க ஆரம்பித்தேன்.
என்னை, கேரனின் பெற்றோர் மகளாக தத்தெடுத்து, தொடர்ந்து அமெரிக்காவில் படிக்க உதவினர். "கலிபோர்னியா இன்ஸ் டிட்யூட் ஆப் டெக்னாலஜி'யில் உயிரி வேதியியல் துறையில் ஆய்வு செய்தேன். வேதியியல் துறையில், 1954 மற்றும் 1962ல் நோபல் பரிசு பெற்ற, பாலிங்கிடம் உதவியாளராக பணியாற்றினேன். தோல் சுருக்கம், முகப் பொலிவு என, தோல் சம்பந்தமான, "கிரீம்கள்' கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டேன்.
சொந்தமாக, "ஆக்டிவர்' எனும் நிறுவனத்தை துவக்கினேன். இந்தியாவில் பிரபலமான இமாமி பேர் - ஹேண்ட்சம், ரெவலான், எஸ்டீ லாடர் கிரீம்கள் தயாரிக்கும், வேதியியல் முறையை கண்டுபிடித்ததில், எனக்கு முக்கிய பங்கு உண்டு. நோபல் பரிசை பெற முடியவில்லை என்றாலும், நான் என்னவாக விரும்பினேனோ, அதுவாக மாறி இருக்கிறேன். நீங்களும் உங்கள் இலக்கை நோக்கி செல்லுங்கள், வெற்றி நிச்சயம்.
உடல் தானம்!
சென்னை, அரசு பொது மருத்துவமனையின் எலும்பியல் துறை தலைவர், மருத்துவர் எம்.ஆர்.ராஜசேகர்: எலும்பு புற்று நோய், சாலை விபத்துகள் என, பல காரணங்களால், தினமும் பல மனிதர்களின் கை, கால்கள் பாதிக்கப்படுவதால், எலும்புகளின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், இந்திய மக்களிடம், "உடல் தானம்' பற்றிய போதுமான விழிப்புணர்ச்சி இல்லாததால், மனித உடலில் உள்ள எலும்புகளை எடுத்து, "எலும்பு வங்கி' மூலம் சேமிக்க முடியாமல், பல எலும்பு வங்கிகள் மூடப்படுகின்றன.
தமிழகத்தில் அதிக விழிப்புணர்வு உள்ளதால், உடல் தானம் செய்வதில், நம் மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், 2005ம் ஆண்டு முதல், எலும்பு வங்கி செயல்படுகிறது. தற்போது, இந்தியாவிலேயே மிகப் பெரிய எலும்பு வங்கியாக உள்ளது.
ஒருவர் உயிருடன் இருக்கும் போது கண், சிறுநீரகம், இரத்தம் என, உடல் உறுப்புகளை தானம் செய்யலாம். ஆனால், இறந்த பின் தான், உடல் தானம் மூலம், எலும்புகளை தர முடியும். ஒருவரின் உடலில் இருந்து வெட்டி எடுக்கப்படும் எலும்புகளை, வங்கி மூலம் பாதுகாக்கிறோம். தேவையான எலும்புகளை, "டீப் பிரீசர்' எனும், அடர் உறைநிலையான, மைனஸ் 60 டிகிரி செல்சியசில், வைப்பதன் மூலம், இரண்டு ஆண்டுகள் வரை, கெடாமல் பாதுகாக்கலாம்.
மற்றவரின் எலும்பை, அப்படியே பொருத்த முடியாது. ஒரு சில தொழில் நுட்பம் மூலமே, அடுத்தவரின் எலும்புகளை உடலில் பயன்படுத்த முடியும். புற்று நோய் மற்றும் விபத்து காரணமாக பாதிக்கப்பட்டவரின் எலும்பு பகுதியை, அறுவைச் சிகிச்சை மூலம் நீக்கி, மற்ற இரு முனைகளை ஒட்ட வைத்து சரிசெய்ய, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகும். ஆனால், நீக்கப்பட்ட எலும்பு இடைவெளியில், உடல் தானம் தந்தவரின் எலும்பு துண்டை எடுத்து வைக்கும் போது, விரைவில் சரியாகும்.
கடந்த, 2012ம் ஆண்டில் மட்டும், 160 பேருக்கு வங்கியில் சேமிக்கப்பட்ட எலும்புகள் மூலம், இலவசமாக எலும்பு அறுவைச் சிகிச்சைகள் செய்தோம். இதற்கு தனியார் மருத்துவமனைகளில், ஒரு நபருக்கு குறைந்தது, 5 லட்ச ரூபாய் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக