வெள்ளி, 15 மார்ச், 2013

ஊழல் குறையுமா?






ஊழல் குறையுமா?

இந்தியாவில் நடைபெறும், மிகப் பெரிய ஊழல்களை, மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய, வினோத் ராய்:

நான், சி.ஏ.ஜி., எனும் இந்திய கணக்குத் தணிக்கையாளர் அமைப்பின் தலைவராக பணியாற்றுகிறேன். அரசு செயல்படுத்தும் பல கோடி மதிப்புள்ள திட்டங்களின் கணக்கு வழக்குகள் சரியாக உள்ளதா என்பதை, தணிக்கை செய்கிறோம்.இந்த அமைப்பில், இந்தியாவின் தணிக்கை மற்றும் கணக்கு துறை உள்ளது. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டால், அரசின் தவறான செயல்பாட்டை கண்டிக்க முடியாமல், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல், அனைத்திற்கும் சரி என, ஒத்துழைப்பு தர நேரிடும் என்பதால், இத்துறையை நிர்வகிக்கும் சி.ஏ.ஜி., அமைப்பிற்கு, சுயமாக செயல்படும் அதிகாரத்தை, இந்திய அரசியல் அமைப்பு அளித்துள்ளது.மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின், மொத்த கணக்கு வழக்குகளை தணிக்கை செய்கிறோம். அரசு சார்பில் நடைபெறும் ஏலங்கள், நேர்மையாக நடத்தப்பட்டதா, அரசுக்கு லாபமா, நஷ்டமா என, ஆராய்ந்து, பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில், வருமான இழப்பை அறிக்கையாக தாக்கல் செய்கிறோம்."2ஜி' அலைக்கற்றை இழப்பு, காமன்வெல்த் போட்டிக்கான நிர்வாக முறைகேடு, நிலக்கரி சுரங்க உரிமைக்கான முறைகேடு, ஹெலிகாப்டர் பேர ஊழல் என, பல வகையில் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டதால், சுட்டிக் காட்டினேன்.

எவ்வித விருப்பு வெறுப்பும் இன்றி, எங்களின் பணிகளைச் செய்கிறோம்.அரசுக்கு ஏற்படும் வருமான இழப்பை சுட்டிக் காட்டும் போது, அரசின் கொள்கை முடிவுகளில் நாங்கள் தலையிடக் கூடாது எனவும், அடிக்கடி நாங்கள் வரம்பு மீறி செயல்படுவதாக, மத்திய அரசு குற்றம் சாட்டுகிறது.அரசின் இழப்பை தடுப்பது தான், அமைப்பின் நோக்கம். அதைத் தான் செய்கிறோம். எனவே, இந்த அமைப்பு குற்றம் சொல்லாமல் இருக்க, அரசு மற்றும் அரசியல்வாதிகள், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடந்து, அரசின் வருமான இழப்பை குறைக்க வேண்டும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக