வியாழன், 14 மார்ச், 2013

இந்தியைத் திணித்தால் எதிர்த்துப் போராடுவோம்: தில்லி- மேல்-சபையில் கனிமொழி பேச்சு

இந்தியைத் திணித்தால் எதிர்த்துப் போராடுவோம்:  தில்லி- மேல்-சபையில் கனிமொழி பேச்சு
இந்தியை திணித்தால் எதிர்த்து போராடுவோம்: டெல்லி மேல்-சபையில் கனிமொழி எம்.பி. பேச்சு
சென்னை, மார்ச்.14-
 
கனிமொழி எம்.பி. டெல்லி மேல்- சபையில்பேசியதாவது:-
 
நான் இந்த அவையில் எனது மொழியில் பேச வேண்டுமென்றால் முன்னதாகவே தகவல் தெரிவிக்க வேண்டும். அனுமதி பெற வேண்டும். எனது மொழியில், எனது பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு பல முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியிருக்கிறது. என்றாவது ஒரு நாள், இப்போது உள்ள இந்த நடைமுறைகள் இல்லாமல் போகும் நிலை வரும் என்று நம்புகிறேன்.
 
இங்கே பேசிய ஒரு உறுப்பினர் மொழிக்கான போராட்டங்கள் அரசியல் தந்திரம் என்றும், பிரபலமாகுவதற்காக நடத்தப்பட்ட போராட்டம் என்றும் பேசினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றி நான் பேசுகையில் இது எந்த மொழிக்கும் எதிரானது அல்ல என்பதையும் நான் தெளிவுபடுத்திட விரும்புகிறேன். நாங்கள் விரும்பாதபோது இந்தியை எங்கள் மீது திணிக்க நடந்த முயற்சியைக் கண்டித்தே இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
 
தங்கள் மொழியையும், கலாச்சாரத்தையும் பண்பாட்டையும், தங்கள் அடையாளத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக உயிரை மாய்த்துக்கொண்டார்கள். ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், எனது தந்தையும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி தனது 14-வது வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் அரசியல்வாதி கிடையாது.
 
ஒரு சாதாரண மாணவன். தனக்கு ஒரு பிரகாசமான அரசியல் எதிர்காலம் இருக்கிறது என்பதோ, தமிழகத்துக்கே முதலமைச்சர் ஆகப்போகிறோம் என்பதோ, தேசிய அரசியலில் ஒரு முக்கியப்பங்கை வகிக்கப்போகிறோம் என்பதோ, அவருக்கு அப்போது தெரியாது. அவருக்கு ஜோதிடத்தில் நம்பிக்கையும் கிடையாது. அப்படிப்பட்ட தலைவர்களை நீங்கள் அவமானப்படுத்தக்கூடாது.
 
இது போன்ற போராட்டங்களில் அவர் எங்கள் அடையாளத்தை பாதுகாக்கவே இறங்கினார். அப்படிப்பட்ட தலைவர்களின் போராட்டங்களை அரசியல் தந்திரங்கள் என்று கூறுவது வருந்தத்தக்கது. இங்கே பேசியவர்கள் இந்தி பெருபான்மையானவர்கள் பேசும் மொழி ஆனால் சிறுபான்மையினர் எதிர்க்கிறார்கள் என்று கூறினார்கள்.
 
எங்களுக்கு இந்நாட்டில், இவ்வுலகில் பேசப்படும் அனைத்து மொழிகளும் எங்களுக்கு சம்மதமே ஆனால் இங்கே பேசியவர், இந்தி கற்காததால் நீங்கள் எதையோ இழந்து விட்டதாக உணரவில்லையா என்று கேட்டார். நான் இந்தி கற்கவில்லை. சிவா இந்தி கற்கவில்லை, இது போல பலர் இந்தி கற்கவில்லை.
 
இதனால்தான் நான் இந்த விவகாரத்தில் நிதி அமைச்சரைப் பற்றிப் பேச விரும்புகிறேன். இந்தி கற்காமல் ஒருவர் இந்நாட்டின் நிதி அமைச்சராகி சிறப்பாக செயல்பட முடியும்போது நாங்கள் எதை இழந்து விட்டோம். பெருந்தலைவர் காமராஜரையும் இந்த இடத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
 
காமராஜரும் இந்தி அறிந்தவர் அல்ல. இப்படி இருக்கையில் இந்தி கற்றே ஆக வேண்டும் என்று என்ன கட்டாயம்? இந்தி பேசத்தெரியாவிட்டால் அவர் இந்தியர் இல்லையா? உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் எனக்குத் தெரியாது. எனக்கு இரண்டு மொழிகள்தான் தெரியும்.
 
இதனால் நான் என்ன இழந்து விட்டேன்? ஒரு மொழி தெரியாத காரணத்தால் நான் இந்தியன் இல்லை என்று ஆகி விடுமா என்ன? இங்கே இந்தி தெரியாமல் இருப்பவர்களும் இந்தியர்கள் இல்லையா? நம்மை இணைக்கும் பாலமாக இருப்பது இந்தி மொழி மட்டுமா? பெரும்பான்மையினர் பேசும் மொழி என்பதாலேயே, சிறுபான்மையினர் மீது அதைத் திணிப்பது சரியல்ல.
 
இந்தியா என்பது பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியது. அதன் கலாச்சாரம், பண்பாடு போன்ற பல்வேறு அம்சங்கள் இந்தியாவை இணைத்து வைத்துள்ளது. ஒரு மொழி மட்டுமே அல்ல. திமுக சார்பாக இந்த அவைக்கு ஒன்றை உறுதியாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் எங்கள் மீது மொழி திணிக்கப்பட்டால் அதை எதிர்ப்போம்.
 
இவ்வாறு அவர் பேசினார். 

2 கருத்துகள்:

  1. இவர் தமிழ் வழியில் கல்வி கற்றவரா ?
    சென்னை வேளச்சேரியில் உள்ள இவருக்கு சொந்தமான சன் சைன் பள்ளிக்கூடம் தமிழ் வழி கல்வி முறையிலா நடத்தப்படுகிறது?

    பதிலளிநீக்கு
  2. இவர் தமிழ் வழியில் கல்வி கற்றவரா ?
    சென்னை வேளச்சேரியில் உள்ள இவருக்கு சொந்தமான சன் சைன் பள்ளிக்கூடம் தமிழ் வழி கல்வி முறையிலா நடத்தப்படுகிறது?

    பதிலளிநீக்கு