வியாழன், 14 மார்ச், 2013

அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய பாடத்திட்டத்துக்கு மரு.இராமதாசு எதிர்ப்பு

அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய பாடத்திட்டத்துக்கு  மரு.இராமதாசு எதிர்ப்பு
அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய பாடத்திட்டத்துக்கு டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு
சென்னை, மார்ச். 14-

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக நடப்பாண்டில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகளையும், பணியாளர்களையும் தேர்ந்தெடுக்கப்போவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையம் அறிவித்துள்ளது.

இதற்காக நடத்தப்படவுள்ள போட்டித் தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டங்களை தேர்வாணையம் நேற்று முன்னாள் வெளியிட்டுள்ளது. அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டம் வேலை தேடும் மாணவர்களையும், தமிழ் உணர்வாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நான்காம் தொகுதி (குரூப் - 4) பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு வழங்கப்படும் 200 மதிப்பெண்களில் இதுவரை 100 மதிப்பெண்கள் பொதுத் தமிழ் பாடத்திற்கு ஒதுக்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது மொத்த மதிப்பெண்கள் 300 ஆக உயர்த்தப்பட்டு, அதில் பொதுத் தமிழுக்கான மதிப்பெண்கள் 75 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.

அதாவது நான்காம் தொகுதித் தேர்வுகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழுக்கான மதிப்பெண்களின் அளவு 50 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாக குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், கிராம நிர்வாக அலுவலர் பணி, இரண்டாம் தொகுதி பணி ஆகியவற்றுக்கான போட்டித் தேர்வுகளிலிருந்து பொதுத் தமிழ் தாள் அடியோடு நீக்கப்பட்டிருக்கிறது.

போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களில் செய்யபட்டுள்ள மாற்றங்களால் தமிழ்நாட்டில் இனி தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என்ற அவல நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆங்கிலவழி பள்ளிகளால் தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காமல் பட்டம் பெறமுடியும் என்ற நிலை தற்போது உள்ளது.

தேர்வாணையம் கொண்டுவந்துள்ள மாற்றத்தால் தமிழே படிக்காமல் தமிழகத்தில் அரசு வேலை பெறமுடியும் என்ற நிலை உருவாகிவிடும். பொது ஆப்டிடியூட் பிரிவுக்கு அளவுக்கு அதிகமான மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதால், அப்பிரிவில் வல்லமை பெறுவதற்காக தனிப்பயிற்சி நிலையங்களில் படித்தால் மட்டும்தான் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற முடியும் நிலை ஏற்படும்.

நகர்ப்புற பணக்கார மாணவர்கள் தனிப்பயிற்சி நிலையங்களில் படித்து எளிதாக வெற்றி பெற்று விடுவார்கள். ஆனால், கிராமப்புற ஏழை மாணவர்களால் லட்சக்கணக்கில் செலவழித்து தனிப்பயிற்சி நிலையங்களில் படிக்க முடியாது என்பதால், அவர்களுக்கு இத்தகைய அரசு வேலைகள் எட்டாக் கனியாகிவிடும்.

அரசு வேலை வாய்ப்புகள் குறைந்துகொண்டே வருவதால் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளைத்தான் அரசு வேலை பெறுவதற்காக ஏழை மாணவர்கள் நம்பியிருக்கின்றனர். சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழுக்குரிய முக்கியத்துவத்தை குறைத்து ஏழை மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாடக்கூடாது.

எனவே, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பாடத் திட்டமே தொடரும் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக