சங்கமம் நடத்தும் கலை நிகழ்ச்சிகளால் கலைஞர்கள் பலருக்கும் பாராட்டும் பணமும் கிடைக்கின்றன. கலைகள் பற்றிய விழிப்புணர்ச்சி மக்களுக்கு ஏற்படுகிறது. எனவே, அரசின் நிதியுதவி இன்றிச்சங்கமம் நடத்தலாம் .
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
உயர் நீதிமன்றத்தில் வழக்கு
First Published : 05 Jan 2011 04:22:52 AM IST
சென்னை, ஜன. 4: தமிழக அரசு தமிழ் மையத்துடன் இணைந்து சென்னை சங்கமம் கலை விழா நடத்த அரசுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஓரிரு நாள்களில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2011-ம் ஆண்டு சென்னை சங்கமம் கலை விழா இந்த மாதம் 12-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பி. புகழேந்தி சென்னை சங்கமத்தை தமிழக அரசு நடத்துவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது தொடர்பாக, நாடு முழுவதும் 34 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. சோதனை செய்யப்பட்ட இடங்களில் சென்னை, மயிலாப்பூரில் உள்ள தமிழ் மையமும் ஒன்று. அதில் சி.பி.ஐ. கடந்த டிசம்பர் 15-ம் தேதி சோதனை செய்தது. இந்த விவகாரத்தில் தமிழ் மையத்தை விடுவித்து சி.பி.ஐ. அறிக்கை அளிக்கவில்லை. தமிழ் மையம் இன்னும் சி.பி.ஐ. கண்காணிப்பில் உள்ளது.மேலும், உச்ச நீதிமன்றத்திலும் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், தமிழ் மையத்தின் நிர்வாக அறங்காவலர் ஜெகத் கஸ்பர், சென்னை சங்கமம் கலை விழா ஜனவரி 12-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளார். ஜெகத் கஸ்பர் கூறுகையில், தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமான சாதிக் பாட்சா என்பவரின் க்ரீன் ப்ரொமோட்டர்ஸ் என்ற நிறுவனம் சென்னை சங்கமம் தொடங்கப்பட்டபோது அதற்கு ரூ. 3 லட்சம் அளித்துள்ளது என்று கூறியுள்ளார். இந்த விழாவுக்கு தமிழக அரசு உடனடியாக அனுமதி வழங்கியுள்ளது. 2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில் தமிழ் மையமும் ஒரு பயனாளியாக இருந்துள்ளதா என்பது தெரியவில்லை. இத்தகைய நிலையில், அந்த அமைப்போடு சேர்ந்து கலை விழா நிகழ்ச்சியை நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது சி.பி.ஐ. பார்வையில் இருக்கும் அந்த மையத்துக்கு நற்சான்று கொடுப்பது போன்றதாகும். சென்னை சங்கமத்தை நடத்த பொது மக்களின் பணம் செலவிடப்படுகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தனது சிந்தனையைப் செலுத்தவில்லை. அரசின் செயல் ஏதேச்சதிகாரமானது. நேர்மையற்றது. பொருத்தமில்லாதது. அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, தமிழக அரசின் சுற்றுலா மற்றும் கலை வளர்ச்சித் துறை, சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றுக்கு தமிழ் மையத்துடன் இணைந்து சென்னை சங்கமத்தை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று புகழேந்தி கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக