பாராட்டுகள். இப்போதைக்கு நடைமுறையில் இருக்கும் பிற இணைய தளங்களில் இருந்து மாறுபட்டுத் தமிழ் மரபினையும் தமிழ் உணர்வினையும் கலந்து கற்பிக்கும் வகையில் பாடத்திட்டங்களை அமைக்க வேண்டுகிறேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 07 Jan 2011 01:19:38 AM IST
சென்னை, ஜன. 6: ஆங்கில வழியில் தமிழ் கற்பதற்கான புதிய இணையதளத்தை மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எஸ். ஜெகத்ரட்சகன் புதன்கிழமை தொடங்கி வைத்தார். "காவ்யா கிரியேடிவ் மீடியா' என்ற நிறுவனத்தின் சார்பில் "தமிழ் டைஜஸ்ட்' என்ற இந்தப் புதிய இணையதளத்தின் மூலம் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழை எளிதாகக் கற்கலாம். உரையாடல்கள், விளையாட்டுகள், பயிற்சிகள் மூலம் தமிழ் கற்பிக்கும் புதிய முறையை இந்த இணையதளம் அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளத்தைத் தொடங்கி வைத்து அமைச்சர் பேசியதாவது: வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தங்களது குழந்தைகள் தமிழ் கற்பதை மிகவும் விரும்புகின்றனர். ஏனெனில், பெரும்பாலான குழந்தைகள் இளம் வயது முதல் ஆங்கில வழியில் கல்வி கற்பதால் தமிழ் கற்க வாய்ப்பு கிடைப்பது இல்லை. இவர்களுக்கு முதல்முறையாக இப்போது இணையதளத்தில் ஆங்கிலம் மூலம் தமிழைக் கற்க வாய்ப்பு வழங்கியுள்ளது புதிய முயற்சி ஆகும். தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் ஆங்கிலத்தில் பேசுவதில் சிறப்பான திறன் பெற்று விளங்குகின்றனர். தாய்மொழி என்பது தாய்ப்பாலுக்கு நிகரானது. காந்தியடிகள் தனது சுய சரிதத்தை தனது தாய்மொழியான குஜராத்தியில்தான் எழுதினார். தாய்மொழியில்தான் எல்லா உணர்வுகளையும் சிறப்பாக வெளியிட முடியும் உலகில் உள்ள எந்த மொழியைக் காட்டிலும் இனிமையும், சொல் வளமும் மிக்கது தமிழ். காந்தியடிகள்கூட திருக்குறளைப் படித்தபின் அடுத்த பிறப்பு இருந்தால் தமிழகத்தில் தமிழனாகப் பிறக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார் என்றார் அமைச்சர் ஜெகத்ரட்சகன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக